இந்திய அரசு ஏற்படுத்தியுள்ள சுயம் இணையதள கல்வித் திட்டம் எந்த ஒரு பாடப்பிரிவையும் கற்றுக் கொள்ளவும் சான்றிதழ்கள் பெறவும் வழி வகுத்துள்ளது. ஒன்பதாம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை வகுப்பறைகளில் கற்பிக்கப்படும் அனைத்து பாடத்திட்டங்களையும் கற்றுக்கொள்ள இந்தத் திட்டம் வழி செய்து உள்ளது.
பல்கலைக்கழக மானிய குழு (UGC), இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் (IGNOU), அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழு (AICTE), தேசிய தொழில்நுட்ப மேம்படுத்தப்பட்ட கற்றல் திட்டம் (NPTEL), தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), தேசிய திறந்தவெளி பள்ளிக்கல்வி நிறுவனம் (NIOS) இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், பெங்களூர் (IIM), தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NITTTR), கல்வி தொடர்புக்கான கூட்டமைப்பு (CEC) ஆகிய ஒன்பது கல்வி குழுமங்கள் இந்த கல்வி திட்டத்தை வழங்குகின்றன.
பொறியியல், தொழில்நுட்பம், சட்டம், கலை மற்றும் சமூக அறிவியல், மருத்துவ அறிவியல், மேலாண்மை, வணிகவியல், கணிதம், அறிவியல், பள்ளி பாடங்கள், ஆசிரியர் கல்வி உள்ளிட்ட பல பிரிவுகளில் ஆயிரக்கணக்கான பாடப்பிரிவுகள் இந்த திட்டத்தில் கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திட்டமும் இங்கு அல்லது ஆறு அல்லது எட்டு வார கால அளவு கொண்ட படிப்புகள் ஆகும். இந்தியாவில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல கல்வி குழுமங்கள் நடத்தும் இந்த படிப்புகளுக்கு கல்வி கட்டணம் எதுவும் கிடையாது. சான்றிதழ் பெற விரும்பினால் ரூபாய் ஆயிரம் மட்டும் செலுத்தி தேர்வு எழுதி சான்றிதழ் பெறலாம். இவ்வாறு பெறப்படும் சான்றிதழ்களை பட்டப்படிப்புகள் போன்றவற்றில் உள்ள பாடத்திட்டங்களுக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.
இத்திட்டத்தில் 2024 ஜனவரி மாத நிலவரப்படி, சுமார் 7000 பாடப்பிரிவுகளில் கல்வி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 2 கோடியே 70 லட்சம் மக்கள் இந்த கல்விப் திட்டத்தில் இணைந்து சுமார் மூன்று கோடியே 50 லட்சம் மக்கள் தேர்வுக்கு பதிவு செய்து சுமார் 23 லட்சம் மக்கள் சான்றிதழ் பெற்றுள்ளார்கள். இத்திட்டத்தில் நடத்தப்படும் கல்வி பிரிவுகளுக்கான சேர்க்கை அவ்வப்போது இணையதளத்தில் அறிவிக்கப்படுகிறது. இதே போலவே தேர்வு நடத்தப்படும் நாட்களும் கல்வி பிரிவில் இணையும் போதே அறிவிக்கப்பட்டு விடுகிறது
தற்போது ஐஐடி சென்னை உட்பட பல கல்வி நிறுவனங்கள் நடத்தும் பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான சேர்க்கையில் தற்போது வரை இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இணைந்துள்ளார்கள். விருப்பம் உள்ளவர்கள் சுயம் கல்வித் திட்ட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம். தேசிய (SWAYAM) இணையதளத்தில் முழு விவரங்களையும் இத்திட்டம் குறித்து அறிந்து கொள்ளலாம்.