spot_img
September 14, 2024, 5:21 pm
spot_img

குடியரசு தினத்தை அறிவிக்க ஜனவரி 26 – ஐ தேர்ந்தெடுத்து ஏன்?

1950- ல் நமது அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த தினமான ஜனவரி 26 ஆம் தேதியை நாம் குடியரசு தினமாகக் கொண்டாடி வருகிறோம் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு நாட்டிற்கென்று தனி அரசியல் அமைப்பு சட்டம் ஏற்பட்ட பின்புதான் அது இறையாண்மை உள்ள நாடாக  சர்வதேச அரங்கில் அங்கீகரிக்கப்படும்.  

1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் அறிவிக்கப்பட்டது      அதனைத் தொடர்ந்து அன்னிய நாட்டுப் பொருட்களை வாங்காமல் விலக்குவதென்று இந்திய மக்கள் முடிவெடுத்தனர். இரண்டாம் உலகப் போரின் போது இந்திய போர் வீரர்களின் மத்தியில் இங்கிலாந்து அரசுக்கு   எதிரான உணர்வு இருந்தது. இதனை நீக்கி இந்தியரின் ஆதரவைப் பெற கிரிப்ஸ் தூதுக்குழு 1942 -ல் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தது. இந்திய போர் வீரர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு யுத்தத்தில் உதவ வேண்டுமென்றும் அதற்கு கைமாறாக போர் முடிந்ததும் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும் என்றும் கிரிப்ஸ் கூறினார். ஆனால் அது வெகுஜன வரவேற்பைப் பெறவில்லை. இன்னொறுபுறம் ஜப்பான் ராணுவம் பர்மாவைப் போரில் கைப்பற்றி இந்தியா நோக்கி முன்னேறி வரத்தொடங்கியது. சுபாஷ் சந்திர  போஸ் தொடங்கிய இந்திய தேசிய சேனை ஜப்பானுக்கு ஆதரவுக்கரம் நீட்டி பிரிட்டிஷாரை எதிர்க்கத் துணிந்தது. இந்நிலையில் இந்தியர்களுக்கு சுதந்திரம் வழங்குவது ஆங்கில அரசுக்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது. 

1946-ல் பிரிட்டிஷ் பிரதமர் கிளமென்ட் அட்லி இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவது குறித்து விவாதித்து முடிவெடுக்க ஒரு அமைச்சரவை குழுவை உருவாக்கினார். அக்குழுவும் அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தி இந்தியாவிற்கென்று தனி அரசியல் அமைப்பு சட்டம் ஏற்பட  பரிந்துரைத்தது. அதன்படி அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் ஜூலை 1946-ல் இந்தியா முழுமைக்கும் நடைபெற்றது.

 1946 டிசம்பர் 6 ஆம் தேதி பிரஞ்சு தேச நடைமுறையைப் பின்பற்றி இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை உருவானது. இதன் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9 ஆம் தேதி பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. அதன் தற்காலிக தலைவராக சச்சிதானந்த சின்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டார். 389 பேர் கொண்ட இந்த அவையில் தமிழகத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராசர், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, ஓ.வி.அழகேசன், அனந்தசயனம் அய்யங்கார், காளியண்ண கவுன்டர், எம்.ஏ,முத்தையா செட்டியார், நாடிமுத்து பிள்ளை, பட்டாபி சீத்தாராமையா, பெருமாள்சாமி ரெட்டி, டி.பிரகாசம், பி.சுப்பராயன் உட்பட பலர்  இருந்தனர். இந்த அவை 1946 டிசம்பர் 12 ஆம் தேதி கூடி தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத், துணைத் தலைவராக ஹைரேந்திர கூமர் முகர்ஜி, சட்ட ஆலோசகராக பி.என்.ராவ் ஆகியோரைத் தேர்ந்தெடுத்தது. 

இக்குழுவில் 1946 டிசம்பர் 13 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கங்கள் குறித்த கொண்டு வந்த தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையானது. இந்த அவையால் 1947 ஜூலை 17 ஆம் தேதி  இந்தியாவில் தேசியக் கொடியாக மூவர்ணக்கொடி தர்மசக்கரத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

           இந்தியா சுதந்திரமடைந்த பின்பு 1947 ஆகஸ்ட் 29 ஆம் தேதி டாக்டர் ராஜேந்திரபிரசாத் தலைமையில் அரசியலமைப்பு நிர்ணயசபை 22 குழுக்களை நியமித்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வரைவுகுழுத் தலைவராக டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார் 29.08.1947ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி ஐயர், கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி.பி.கைதான் ஆகிய 6 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

      அரசியலமைப்புச் சட்டவரைவு குழு 5 கட்டங்களாகச் செயல்பட்டது அரசியலமைப்புச் சட்ட அடிப்படை கூறுகளைக் கண்டறிதல், அதன் முன்வரைவைக் குழு பரிசீலிதல், அதனை பொதுமக்களின் விவாதத்திற்கு அனுப்புதல், தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுதல், பாராளுமன்றத்தில் நிறைவேற்றுதல் ஆகிய பணிகளை இக்குழு மேற்கொண்டது.

உலகிலேயே கையால் எழுதப்பட்ட நீளமான உயிரோட்டமுள்ள அரசியலமைப்புச் சட்டம் நம்முடையது என்பதில் நாம் பெருமிதம் கொள்ளலாம். இதில் 1. 46 லட்ச   வார்த்தைகள் உள்ளன. இதனை பிரேம் பெகாரி நரேன் ரைசதா என்ற எழுத்து நிபுணர் சாய்வெழுத்தில் எழுதினார். சாந்தினிகேதனில் இருந்து வந்த ஓவியர்கள் நந்தலால் போஸ், பியோகர் ராம் மனோகர் சின்கா ஆகியோர் அழகு படுத்தி அலங்கரித்தனர். 2 வருடம் 11 மாதங்கள் 18 நாட்களில் இது எழுதி முடிக்கப்பட்டது.

இந்திய அரசியலைமப்புச் சட்டம் 395 பிரிவுகள், 22 அத்தியாயங்கள், 8 அட்டவணைகளுடன் உருவாக்கப்பட்டது. இது  282 அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டு  1949  நவம்பர் 24 ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் பூரண ஸ்வராஜ் என்பதை நாம் சுதந்திரம் அடையும் முன்பே  1930 ஜனவரி 26 ஆம் தேதி லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் பிரகடனப்படுத்தியதை நினைவு கூர்ந்து குடியரசு தினத்தை  1950 ஜனவரி 26 ஆம் தேதி வைத்து கொள்ள தீர்மானிக்கப்பட்டது. 

சுதந்திர கொடியினை முடிச்சவிழ்த்து பறக்க விடுவதற்கும் கீழ்   இருந்து மேலேற்றி பறக்க விடுவதற்கும் வேறுபாடு உண்டு. சுதந்திர தினத்தன்று தேசிய கொடி  கீழிருந்து மேலேற்றி முடிச்சவிழ்த்து பறக்கவிடப்படும் . குடியரசு தினத்தன்று தேசிய  கொடி கொடிக்கம்பத்தின்  மேல் வைத்து முடிச்சவிழ்க்கப் பட்டு பறக்க விடப் படும். இதுவே தேசத்தின் இறையாண்மையைக் காட்டுகிறது. இறையாண்மை என்பதற்கு கட்டுப்பாடற்ற முழுமையான அதிகாரம் கொண்ட அமைப்பு என்று பொருள். இத்தகைய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தஇந்திய அரசியலமைப்பை நாம் அனைவரும்   பேணி காப்போம்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்