நாமக்கல் கோழிப்பண்ணை நகர ரோட்டரி சங்கத்தின் (Rotary Club of Namakkal Poultry Town) புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைவராக கோஸ்டல் என். இளங்கோ, செயலாளராக பி. பார்த்திபன், பொருளாளராக ஆர்.பி. கார்த்திக் ஆகியோர் பதவியேற்றனர். தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ், ரோட்டரி சங்கத்தில் மாவட்ட ஆளுநராக அடுத்த ஆண்டுக்கு தேர்வாகியுள்ள சி. செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ரோட்டரி உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் மக்களிடையே ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தினார். மேலும் அவர் பேசியதாவது.
ஒவ்வொரு நாட்டிலும் அரசியல் உள்ள பல்வேறு துறைகளும் அரசாங்கத்தை நடத்துவதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை பொருட்களையும் சேவைகளையும் வாங்க (procurement) செலவு செய்கிறது. இதற்காக செலவிடப்படும் தொகை மக்கள் செலுத்தும் வரி உள்ளிட்டவை மூலமாக கிடைக்கும் பணமாகும். அரசுக்கு தேவையான பொருட்களையும் சேவைகளையும் கொள்முதல் செய்வதில் ஊழல் ஏற்படுமானால் மக்கள் மீது கூடுதலாக வரி விதிக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

சாலைகளை அமைத்தல், பாலங்களை கட்டுதல், வீட்டு வசதிகளை உருவாக்குதல், குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்தல் போன்ற பல மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கு அரசு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்கிறது. இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஊழல் நடைபெறும் போது ஏற்படும் கூடுதல் செலவானது மக்களின் தலையில் ஏற்றப்படுகிறது.
ஏழை மக்களுக்காக செயல்படுத்தப்படும் பொது விநியோகத் திட்டம், மாணவ மாணவிகளுக்காக செலவிடப்படும் கல்வி வளர்ச்சிக்கான நிதி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக திட்டமிடப்படும் உதவிகள், கட்டணமில்லா மருத்துவ வசதி போன்ற பல்வேறு மக்கள் நல திட்டங்களை ஒவ்வொரு நாடும் செயல்படுத்துகிறது. இத்தகைய திட்டங்களில் ஊழல் ஏற்படும் போது இத்தகைய மக்கள் நலத் திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு செல்லாமல் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
அரசின் பல்வேறு துறைகளிலும் அரசால் நடத்தப்படும் பல்வேறு அமைப்புகளிலும் அரசு உதவி பெறும் அமைப்புகளிலும் ஒவ்வொரு ஆண்டும் பலர் ஓய்வு பெறுகிறார்கள். இந்த காலி பணியிடங்களை நிரப்ப பணியாளர் தேர்வு நேர்மையாக நடைபெறாமல், லஞ்சம் பெற்றுக் கொண்டு பணியாளர்களின் நியமித்தால் திறமையான நபர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது. மேலும், லஞ்சம் கொடுத்து வேலைக்கு வரும் அரசு பணியாளர்களும் கொடுத்த லஞ்சத்தை மீட்டெடுக்கும் எண்ணத்தில் நேர்மையற்றவர்களாக செயல்படக்கூடிய நிலைமை ஏற்படுகிறது.
ஒரு பணியை செய்வதற்கு லஞ்சம் வாங்குதல் அல்லது சட்டப்படி செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் இருப்பதற்கு லஞ்சம் வாங்குதல் ஆகியவை காரணமாக நேர்மையற்ற நிர்வாகம் ஏற்படுகிறது. நாம் ஒவ்வொருவரும் நேரடியாக பல வரிகளை செலுத்துகிறோம் வாங்கும் ஒவ்வொரு பொருளின் மூலமாகவும் மறைமுக வரிகளை செலுத்துகிறோம்.

ஊழல் அதிகரிக்கும் போது வரி உயர்வும் விலைவாசி உயர்வும் ஏற்படுகிறது. விலைவாசி உயர்வும் வரி உயர்வும் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே அமைதியற்ற சூழலை உருவாக்குகிறது. மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு ஊழல் மிகப்பெரிய எதிரியாகும். சமூக அமைதியை நிலைநாட்ட லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தையும் செயல்பாடுகளையும் தன்னார்வமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
எந்த ஒரு சட்டம் இயற்றப்பட்டாலும் எந்த ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டாலும் அவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லாவிட்டால் அந்தச் சட்டத்தாலும் அந்த அமைப்பாலும் எந்த பயன்களையும் உருவாக்க முடியாது. ஊழலை ஒழிக்கும் உயர்நிலை அமைப்பான தமிழ்நாடு லோக் ஆயுக்தா பற்றி தமிழக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது தன்னார அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சமூக செயல்பாட்டாளர்களின் கடமையாகும். தமிழக மக்களிடையே லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை ரோட்டரி இன்டர்நேஷனல் தொடங்க வேண்டும் என டாக்டர் வீ. ராமராஜ் கேட்டுக்கொண்டார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல தலைவர் சிங்கராஜ், நாமக்கல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் பி.ராஜவேலு, ரோட்டரி சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர் பி. சரவணன், தற்போதைய மாவட்ட உதவி ஆளுநர் செந்தில் குமார், கடந்த ஆண்டு ரோட்டரி சங்கத்தில் தலைவர் ஆர் பிரபாகர், செயலாளர் ஆர்.வி. ராஜாராம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: ஊழல் ஒழிப்பு சவாலானது தான் இதனை முன்னெடுத்துச் செல்வதும் சிக்கலானதுதான் ஆனால், ஊழலை அகற்றாவிட்டால் நல்லாட்சி என்பதை நிறுவ முடியாது.