கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மேற்கு வெங்கோலா கிராமத்தில் சபரிபாதம் சாலையில் உள்ள வெட்டியாட்டில் ஹவுஸ் தெர்மலாவில் வசிப்பவர் வி. ஏ. நசீர். இவர் எல்ஜி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட மொபைல் போன் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். இவர் வாங்கிய மொபைல் போனில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய பொஞ்சாசேரியில் உள்ள ஜாசிர் குன்னத் ஹவுஸ் என்ற சர்வீஸ் சென்டரில் போனை கொடுத்துள்ளார்.
மொபைல் போனை நசீரிடம் பெற்றுக்கொண்ட சர்வீஸ் சென்டர் உரிமையாளர் அதனை சரி செய்து மறுநாள் தருவதாக தெரிவித்துள்ளார். நசீர் மறுநாள் அந்த கடைக்கு சென்றபோது கடை மூடி இருந்துள்ளது. பக்கத்து கடைக்காரர்களிடம் விசாரித்த போது, அவர் கடையை நிரந்தரமாக மூடிவிட்டதாக தெரிவித்துள்ளனர். கடைக்காரர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப் போவதாக பக்கத்து கடைக்காரர்களிடம் தெரிவித்து விட்டு நசீர் வீட்டுக்கு வந்துள்ளார். ஓரிரு நாட்கள் கழித்து மொபைல் போன் சர்வீஸ் சென்டர் உரிமையாளர் நசீரின் வீட்டிற்கு வந்து சொந்த சூழ்நிலை காரணமாக கடையை மூடி விட்டதாகவும் போனை சரி செய்யவில்லை என்றும் கூறி மொபைல் போனை நன்கு பார்சல் செய்த கவரில் வைத்து வழங்கியுள்ளார். அவர் சென்ற பின்பு பார்சலை பிரித்துப் பார்த்தபோது மொபைல் போனில் டிஸ்பிலே பகுதி சேதம் அடைந்து இருந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த நசீர் வேறு வழியின்றி மொபைல் போன் சர்வீஸ் சென்டர் உரிமையாளர் மீது எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2022 செப்டம்பர் மாதத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு (CC 438/2022) தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றத்தில் இருந்து எதிர் தரப்பினருக்கு வழக்கில் ஆஜராகி பதில் தெரிவிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதனைப் பெற்றுக் கொண்டும் எதிர் தரப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகி பதில் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2024 ஆகஸ்ட் 29 அன்று எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
வழக்கு தாக்கல் செய்பவரே புகாரை நிரூபிக்க கடமைப்பட்டவர் என்பதால் இந்த வழக்கில் மொபைல் போனை எதிர் தரப்பினரிடம் பழுது நீக்க வழங்கியதற்கும் எதிர் தரப்பினர் மொபைல் போனின் பழுதை நீக்காமல் சேதப்படுத்தி மொபைல் போனை வழக்கு தாக்கல் செய்தவரிடம் திருப்பி வழங்கியதற்கும் எவ்வித ஆதாரங்களையும் வழக்கை தாக்கல் செய்தவர் சமர்ப்பிக்காததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் நீதிமன்றங்களில் நுகர்வோர் வழக்குகள் 90 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தெரிவிக்கிறது. இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் எதிர் தரப்பினர் ஆஜராகாமல் இருந்த போதிலும் கூட இரண்டு ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய காலதாமதத்திற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்பதே நுகர்வோர் ஆர்வலர்களின் ஆசையாக இருக்கிறது. மேலும், நுகர்வோர் தாக்கல் செய்யும் வழக்குகளை எவ்வாறு நிரூபிப்பது என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.