spot_img
December 5, 2024, 7:57 am
spot_img

வயதான விவசாயிக்கு தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் ரூ 1,38,250/- வழங்க நாமக்கல் மாவட்டம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல் நகரில் மோகனூர் சாலையில் வசித்து வருபவர் விவசாயி வெங்கட்ராமன் மகன் வி லோகநாதன்(73). இவரது விவசாய நிலத்துக்கு தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு பெறுவதற்காக கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தில் ரூபாய் மூன்று லட்சத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு செலுத்தியுள்ளார். மின் இணைப்பு வழங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் கடந்த 2020 ஜூன் மாதத்தில் தமக்கு மின் இணைப்பு வேண்டாம் என தெரிவித்து  செலுத்திய பணத்தை திரும்பத் தருமாறு மின் உற்பத்தி கழக அலுவலர்களிடம் கடிதம் கொடுத்துள்ளார். முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்பட்ட பணம் திரும்ப வழங்கப்படும் என்று கரூரில் உள்ள மின் உற்பத்திக் கழகத்தின் தலைமை பொறியாளர்   லோகநாதனுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். 

பலமுறை கடிதம் மூலமும் நேரிலும் பணத்தை கேட்ட போதிலும் மின் உற்பத்தி கழகத்தின் சார்பில் லோகநாதனுக்கு பணம் திருப்பி வழங்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அவர் கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தின் இயக்குனர், தலைமை பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் மற்றும் உதவி மின் பொறியாளர் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் 2024 ஆகஸ்ட் 20 அன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ்  தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் சேவை குறைபாடு புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மாதங்கள் பணத்தை திரும்ப வழங்காமல் இருந்த மின் உற்பத்தி கழகம்  நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பின்னர் கடந்த 2023 நவம்பரில் வழக்கு தாக்கல் செய்திருந்தவர் செலுத்திய ரூபாய் 3 லட்சத்தை திரும்ப வழங்கி விட்டது. செலுத்திய பணத்தை திரும்ப வழங்குமாறு கேட்டு நுகர்வோர் கடிதம் வழங்கிய நாளிலிருந்து அதிகபட்சம் மூன்று மாத காலத்திற்குள் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் பணத்தை திரும்ப வழங்கியிருக்க வேண்டும்.  விவசாயி   செலுத்திய பணத்தை திரும்ப வழங்க 40 மாத காலம் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் தாமதம் செய்துள்ளதால் பணம் வழங்குவதற்கான நடைமுறை காலமாக மூன்று மாதத்தை கழித்துக் கொண்டு மீதமுள்ள 37 மாதங்களுக்கு ரூபாய் மூன்று லட்சத்துக்கு ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியாக ரூ 83,250/- வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க வேண்டுமென நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் இந்த தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது. மேலும், சேவை குறைபாட்டால் வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ 50,000/- மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ 5,000/- வழங்கவும் மின் உற்பத்தி கழகத்திற்கு இந்த தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்