ஐசிஐசிஐ வங்கியில் அதன் வாடிக்கையாளர் ஒருவர் தனிநபர் கடனாக ரூ 1,80,000/- ஐ பெற்றுள்ளார். இவர் இமாச்சல பிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் ஆவார். வங்கி வழங்கிய கடன் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள வட்டி விகிதத்தை விட கூடுதலாக வட்டி கணக்கிட்டு வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிடித்தம் செய்யப்படுவதை அறிந்த வாடிக்கையாளர் வங்கி நிர்வாகத்திடம் நேரில் சென்று இது குறித்து பலமுறை கேட்டும் வங்கி நிர்வாகம் சரிவர பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில் மொத்த கடன் தொகையாக ரூ1,47,462.23/- ஐ செலுத்தினால் கடன் கணக்கு முடிக்கப்பட்டு கடன் நிலுவையில்லை என்ற சான்று வழங்கப்பட்டு விடும் என்ற கடிதத்தை கடந்த நவம்பர் 2020 -ல் வங்கி இருந்து வாடிக்கையாளருக்கு அனுப்பி உள்ளது. வங்கி கடிதத்தில் அளித்த வாக்குறுதியை நம்பி மொத்த கடன் தொகையையும் காசோலை மூலமாக வாடிக்கையாளர் செலுத்தி விட்டார் இதன் பின்னர் வங்கிக்கு பலமுறை சென்று கடன் நிலுவையில் இல்லை என்ற சான்றை வழங்குமாறு கேட்டும் சான்றிதழை வழங்காமல் வங்கி வாடிக்கையாளரை அலைக்கழித்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2021 ஜனவரி முதல் வாரத்தில் வங்கி வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து கடன் மாதாந்திர தவணையாக ரூ 8,579/- ஐ பிடித்தம் செய்துள்ளது. கடன் கணக்கை 2020 நவம்பர் மாதத்திலேயே முடித்து விட்ட நிலையில் 2021 ஜனவரி மாதத்தில் கடன் தவணைத் தொகையாக வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை வங்கி பிடித்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளர் இமாச்சலப் பிரதேச தலைநகரான சிம்லாவில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வங்கியின் மீது கடந்த 2021 -ல் வழக்கு தாக்கல் செய்துள்ளார் (நுகர்வோர் புகார் எண் 40/2021). வாடிக்கையாளர் மொத்த கடனையும் திருப்பி செலுத்திய நாளில் அவரது கடன் கணக்குக்கான மாதாந்திர தவணைத் தொகை செலுத்த வேண்டிய நாள் என்றும் முன் கூட்டியே அவர் வழங்கிய காசோலை அடிப்படையில் பணம் பிடித்தம் செய்யப்பட்டது என்றும் மொத்த கடனையும் திருப்பி செலுத்தி விட்டதால் தாங்கள் வரைவோலை மூலமாக இந்த வழக்கு தாக்கல் செய்த பின்னர் பிடித்தம் செய்த பணத்தை திரும்ப வழங்கி விட்டோம் என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் இல்லை என்றும் வங்கி நுகர்வோர் நீதிமன்றத்தில் வாதிட்டது.
இந்த வழக்கில் கடந்த ஜூன் 20 அன்று சிம்லா மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் வங்கியின் வாதம் ஏற்புடையது அல்ல என்றும் வங்கியின் செயல் சேவை குறைபாடு என்றும் தெரிவித்ததுள்ளது. பிடித்தம் செய்த தொகையை வங்கி வாடிக்கையாளருக்கு திரும்ப வழங்கி விட்டாலும் சேவை குறைபாட்டிற்காக வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாகவும் வழக்கின் செலவு தொகையாகவும் ரூபாய் ஐந்தாயிரம் வழங்க வேண்டும் என்றும் நுகர்வோர் நீதிமன்றம் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.