spot_img
November 21, 2024, 5:24 pm
spot_img

அமேசான் போன்ற வணிக இணையதள சேவைகளில் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் அமேசான் வணிக இணையதளத்தில் எக்ஸ் பாக்ஸ் கண்ட்ரோலர் என்ற பொருளை வாங்க பதிவு செய்துள்ளார். அவரது பதிவின்படி வீட்டிற்கு வந்த பார்சலை திறக்க முற்பட்ட போது அதில் நல்ல பாம்பு உள்ளதை அறிந்ததும் பார்சலை மூடிவிட்டார். இது குறித்த செய்திகள் ஓரிரு நாட்களாக பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் வந்து கொண்டிருக்கின்றன. 

நான் தொலைக்காட்சி பெட்டியை வாங்க பணம் செலுத்தி இருந்தேன். ஆனால், தொலைக்காட்சி பெட்டிக்கு பதிலாக  மரப்பெட்டியை உள்ளே வைத்து பார்சலில் வணிக இணையதள விற்பனையாளர்கள் அனுப்பி இருந்தார்கள் என்பது போன்ற செய்திகளையும் அவ்வப்போது நம்மால் செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் காண முடிகிறது. மக்களிடையே அமேசான் போன்ற வணிக இணையதளங்கள் (online platforms) மூலமாக பொருட்களை வாங்கும் போக்கு அதிகரித்துள்ள நிலையில் வணிக இணையதளங்களில் மக்கள் ஏமாறாமல் இருக்கவும் பாதுகாப்பாக இருக்கவும் நுகர்வோரின் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்த வேண்டியது அவசியமானதாக உள்ளது.

வணிக இணையதளங்கள் மூலமாக பொருட்களை வாங்கும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை மக்கள் அணுகுகிறார்கள் இத்தகைய வழக்குகளில் அமேசான் போன்ற வணிக இணையதள நிறுவனங்கள் நீதிமன்றங்களில் ஆஜராகி தாங்கள் எந்த பொருட்களையும் விற்பது இல்லை என்றும் விற்பனையாளருக்கும் நுகர்வோருக்கும் இடையில் இணைப்பு தளமாக (mediators) செயல்படுகிறோம் என்றும் இதனால் நுகர்வோருக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் வாதிடுகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் ஒரு சில வழக்குகளில் இது போன்ற வணிக இணையதளங்களின் கருத்தை ஏற்று அவர்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சில வழக்குகளையும் இந்த நிறுவனங்கள் நுகர்வோர் நீதிமன்றங்களில் மேற்கோள் காட்டுகிறார்கள். இவ்வாறு இந்த நிறுவனங்கள் நுகர்வோர் பாதுகாப்பு வழங்குவதில் இருந்து தப்பித்துக் கொள்வதை அனுமதிக்க கூடாது.

அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதளங்களில் பொருட்களை வாங்க ஆர்டர் செய்யும் பலருக்கு பொருட்கள் வேறு ஒரு   விற்பனையாளரால் விற்கப்படுகிறது என்று கூட தெரியாத நிலை உள்ளது. இந்த வணிக  இணைய தளங்களின் மீதான நம்பிக்கையிலேயே மக்கள் பொருட்களை வாங்குகிறார்கள். பிரச்சனை ஏற்படும் போது தாங்கள் ஒரு இடை நிலையாளர்தான் என்று கூறிவிட்டு இந்த நிறுவனங்கள் தப்பித்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறான வணிக இணையதள தளங்களை உருவாக்கி பராமரிப்பதன் மூலம் அந்த இணையதளத்தின் வழியாக  விற்பனையாளர்கள் பொருட்களை விற்பனை செய்யும் போது ஒரு குறிப்பிட்ட அளவு வணிக இணையதள நிறுவனங்களுக்கும் வருமானம் வருகிறது.

விற்பனை செய்யப்படும் பொருட்களில் குறைபாடு அதிக விலை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டாலும் வழங்கப்படும் சேவையில் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பொருளின் உற்பத்தியாளர், விற்பனையாளர் மற்றும் சேவை வழங்குபவர்கள் பொறுப்பாளர்கள் என்றும் அவர்கள் நுகர்வோருக்கு தகுந்த பரிகாரம் வழங்க வேண்டும் என்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் தெரிவிக்கிறது. 

வணிக இணையதளங்கள் தாங்கள் உற்பத்தியாளரோ அல்லது விற்பனையாளரோ அல்லது சேவை வழங்குவோரோ அல்ல என கூறி பாதிக்கப்படும் நுகர்வோருக்கு பரிகாரம் வழங்குவதிலிருந்து தப்பித்துக் கொள்ள முற்படுகின்றனர். இந்த நிலையை மாற்றும் வகையில் விற்பனை மற்றும் சேவையை குறித்த வணிக இணையதளங்களை நடத்தும் இடைநிலையாளர்களும் (mediators) நுகர்வோர் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் என்று நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் தகுந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியது உடனடி தேவையாகும். பொருட்களை விற்பனை செய்யும் வணிக இணையதளங்களும்   நுகர்வோருக்கு ஏற்படும் பிரச்சனைகளில் பகர பொறுப்புடையவர் என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்