spot_img
January 15, 2025, 10:39 am
spot_img

நுகர்வோரின் தேர்தல் அறிக்கை – அரசியல் கட்சிகளுக்கு சில கேள்விகள்!படியுங்கள்! பிடித்தால் அனைவருக்கும் அனுப்புங்கள்!

நுகர்வோர் பாதுகாப்பு  சட்டம் 2019-ன்படி நுகர்வோர் ஆணையங்கள் எனப்படும் நுகர்வோர் நீதிமன்றங்கள் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் தேசிய அளவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதை போலவே இந்த சட்டத்தில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த  சட்டப்படி மத்திய நுகர்வோர் அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு   சட்டத்தில் நுகர்வோருக்கு ஏழு வகையான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.  இவற்றை தீவிரமாக அமல்படுத்தி நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். இந்நிலையில் கீழ்கண்ட கேள்விகள் குறித்து மக்களவைத் தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பதிலளிக்க வேண்டியது அவசியம் ஆகும். இதுவே நுகர்வோரின் தேர்தல் அறிக்கையாகும்.

1. நுகர்வோர் உரிமை மீறல் குறித்த அனைத்து வகையான வழக்குகளையும் மக்கள் எளிதில் அணுகும் வகையில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களிலேயே தாக்கல் செய்ய வழிவகை செய்யப்படாமல் உள்ளது.   தேர்தலில் வெற்றி பெறும் அரசியல் கட்சி நுகர்வோர் உரிமை மீறல்கள் குறித்த அனைத்து வகையான வழக்குகளையும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படுமா?

2. பல மாநிலங்களில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்கள் அமைக்கப்படாமல் உள்ளது. இவ்வாறு அமைக்கப்படாத போது இதுகுறித்த வழக்குகளை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் விசாரணை செய்யும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுமா?

3. தாமாகவே முன்வந்து வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் மனித உரிமைகள்,   குழந்தை பாதுகாப்பு உரிமைகள் ஆணையங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது போல மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களுக்கு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்படுமா?

4. தவறான விளம்பரங்கள் மற்றும் தவறாக வழி நடத்தும் விளம்பரங்கள் போன்ற புகார்களை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பில் புகார் செய்வது என்பது எளிதான  அணுகுமுறையாக மக்களுக்கு இல்லை. இந்த நிலையில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார   அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படுமா?

5. மாவட்ட நீதிமன்றங்களில் அமைக்கப்பட்டுள்ளது போல மாவட்ட சட்ட   விழிப்புணர்வு மற்றும் பணிக்குழு மாவட்ட நுகர்வோர் ஆணையங்களில் அமைக்க வழிவகை செய்யப்படுமா?

6. விலை நிர்ணயம், விலை கண்காணிப்பு, விலை கட்டுப்பாடு போன்ற அத்தியாவசியமான நுகர்வோர் பாதுகாப்பு குறித்த அம்சங்களை விசாரிக்கும் அதிகாரம் நுகர்வோர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு வழங்க வழி செய்யப்படுமா?

7. நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைந்துள்ள இடங்களில் பொதுமக்களுக்காக நுகர்வோர் பாதுகாப்பு குறித்த நூல்கள் கொண்ட சிறப்பு நூலகம் அமைக்கப்படுமா?

8. மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது போல நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு முழுமையான தன்னாட்சி வழங்கப்படுமா?

9. கிராம அளவிலும் ஊராட்சி ஒன்றிய அளவிலும்  நகராட்சி அளவிலும் மாநகராட்சி அளவிலும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்கள் அமைக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுமா?

10.நுகர்வோருக்கு அதிகாரம் அளித்தல் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுமா?

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்