spot_img
November 21, 2024, 9:11 pm
spot_img

ஒரு ரூபாய்: உரிமைக்காக போராடி வெற்றி பெற்ற சாமானியர்

திருச்செங்கோடு அருகே உள்ள     சீதாராம் பாளையத்தில் ராயல் நகரில் வசித்து வருபவர் கந்தசாமி மகன் பாலசுப்பிரமணியம் (56). கடந்த 2019 ஏப்ரல் மாதத்தில்   திருச்செங்கோட்டில் இருந்து எடப்பாடி வரை அரசு நகரப் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.  இதற்கு பேருந்து   நடத்துனர் ரூ  17/- கட்டணமாக வசூலித்துள்ளார்.  ரூ 16/- மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பாலசுப்ரமணியம் கூறியும் அதனை நடத்துனர் ஏற்கவில்லை.

 இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பாலசுப்ரமணியன் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பித்து விவரங்களை பெற்றுள்ளார்.  திருச்செங்கோட்டில் இருந்து எடப்பாடி வரை நகரப் பேருந்துகளுக்கு   14 கட்டண ஸ்டேஜ்கள் மட்டுமே வட்டார போக்குவரத்து அலுவலரால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் இதனால் 14 கட்டண   ஸ்டேஜ்களுக்கு வரி ரூ  1/-  உட்பட பயண கட்டணமாக ரூ  16/- மட்டுமே வசூல் செய்யப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.  இதனால் கூடுதலாக வசூல் செய்யப்பட்ட ரூபாய் ஒன்றையும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடையும் வழங்குமாறு கடந்த 2019 ஆம் ஆண்டு பாலசுப்பிரமணியன் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டத்தின் சார்பில் புதிய சங்ககிரி பேருந்து நிலையம்   ஒரு ஸ்டேஜ் என்பது பயண கட்டணம் நிர்ணயம் செய்யும்போது விடுபட்டு விட்டதால் கூடுதலாக ஒரு ரூபாய் அதற்கும் சேர்த்து வசூலிக்கப்பட்டது என்று வாதிடப்பட்டது.    விசாரணை முடிவடைந்த நிலையில் சமீபத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில்   பயணியிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்தது நேர்மையற்ற வணிக நடைமுறை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

 வழக்கு தாக்கல் செய்தவருக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் ஒரு ரூபாயையும்   மன உளைச்சலுக்கு இழப்பீடாகவும் வழக்கின் செலவு தொகையாகவும் ஐந்தாயிரம் ரூபாயையும் நான்கு வார காலத்திற்குள் அரசு போக்குவரத்து நிறுவனம் வழங்க வேண்டும் என்று இந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோட்டில் இருந்து எடப்பாடி வரை இயக்கப்படும் நகரப் பேருந்துகளில்   வட்டார போக்குவரத்து   அலுவலரால்   நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை மட்டுமே பேருந்து நடத்துனர்கள் வசூலிக்க வேண்டும் என்றும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு தாக்கல் செய்த பாலசுப்ரமணியம் கூடுதலாக செலுத்தியது  ஒரு ரூபாய்தான். அவருக்கு வழங்கப்பட்ட இழப்பீடானது இந்த வழக்கிற்காக அவர் செலவழித்த நேரமும்   ஆவணங்களை திரட்டவும் வழக்கை நடத்தவும் அவர் பயன்படுத்திய அறிவுத்திறனுக்கு ஈடாகாது.  இருப்பினும்    தவறை சுட்டிக்காட்டி உரிமைக்காக பல ஆவணங்களை திரட்டி நீதிமன்றத்தில் போராடி வெற்றி பெற்ற அவரை பாராட்டாமல் இருக்க முடியாது.

https://cms.nic.in/ncdrcusersWeb/search.do?method=loadSearchPub என்ற இணையதளத்தில் இருந்து வழக்கு எண்: CC/30/2020 என்பதை பயன்படுத்தி முழுமையான தீர்ப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதைப் போலவே ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையில் சிறுநீர் கழிக்க கட்டணமாக ரூபாய் ஒன்றுக்கு பதிலாக ரூபாய் ஐந்தை தம்மிடம் வசூலித்ததாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த சுந்தரம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல்  செய்திருந்தார்.  விசாரணை முடிவடைந்த நிலையில் சமீபத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி எஸ் ஜே சக்கரவர்த்தி தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில்   கழிப்பறையை உபயோகிக்க நான்கு ரூபாய் கூடுதலாக கட்டணம் வசூலித்தது நேர்மையற்ற வணிக நடைமுறை என்று தெரிவித்துள்ளது .

வழக்கு தாக்கல் செய்தவருக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் நான்கு ரூபாயையும்   மன உளைச்சலுக்கு இழப்பீடாகவும் வழக்கின் செலவு தொகையாகவும் முப்பதாயிரம் ரூபாயையும் ஆறு வார காலத்திற்குள் கழிப்பறை குத்தகைதாரரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியும் வழங்க வேண்டும் என்று இந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு  ரூபாயாக இருந்தாலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிமன்ற படியேறி வென்ற முதியோரின் செயலை பாராட்டாமல் இருக்க முடியாது. 
https://cms.nic.in/ncdrcusersWeb/search.do?method=loadSearchPub என்ற இணையதளத்தில் இருந்து வழக்கு எண்: CC/19/11 என்பதை பயன்படுத்தி முழுமையான தீர்ப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

முனைவர் ஆர்.சிவக்குமார்
முனைவர் ஆர்.சிவக்குமார்
முனைவர் ஆர்.சிவக்குமார்,இணைப்பேராசிரியர், அரசியல் அறிவியல் துறை

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்