நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரசேகரன் மனைவி பிரேமா. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஆர். கவுண்டம்பாளையத்தில் வசித்து வருபவர் காங்கேய கவுண்டர் மகன் செங்கோட்டையன். இவர்கள் இருவரும் நாமக்கல்லில் கோட்டை மெயின் ரோட்டில் உள்ள அக்வா கேர் ஆரோ சிஸ்டம் என்ற கடையில் வீட்டுக்காக தண்ணீர் சுத்திகரிப்பான் உபகரணங்களை கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் வாங்கியுள்ளார்கள்.
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
விற்பனை செய்யப்படும் வகை உபகரணம் 6 லிட்டர் கொள்ளளவு கொண்டது என்று விற்பனையாளர் தெரிவித்ததால் ஒவ்வொரு உபகரணத்துக்கும் ஒவ்வொருவரும் ரூ 20,000/- செலுத்தியுள்ளார்கள். வீட்டில் அதனை பொருத்திய பின்பு தண்ணீரின் கொள்ளளவை அளவிட்ட போது நான்கு லிட்டர் மட்டுமே பிடிக்கக் கூடியதாக உபகரணம் இருந்துள்ளது. விற்பனை செய்த கடைக்காரரிடமும் உபகரணத்தை உற்பத்தி செய்த கெண்ட் ஆரோ சிஸ்டம் நிறுவனத்திடமும் பலமுறை புகார் அளித்தும் ஆறு லிட்டர் கொள்ளளவு கொண்ட உபகரணத்தை அவர்கள் வழங்கவில்லை.
மன உளைச்சலுக்கு ஆளான பிரேமா மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் உபகரணத்தை விற்பனை செய்த கடைக்காரர் மற்றும் உற்பத்தி செய்த நிறுவனத்தின் மீது நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2024 ஏப்ரலில் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது (2025 ஜனவரி 28).
பணம் செலுத்தியது ஆறு லிட்டர் கொள்ளளவு கொண்ட உபகரணத்துக்கு என்றும் ஆனால் வழங்கப்பட்டது நான்கு லிட்டர் கொள்ளளவு கொண்ட உபகரணம் என்றும் சாட்சியம் மற்றும் ஆவணங்கள் மூலம் வழக்கு தாக்கல் செய்தவர்கள் நிரூபித்துள்ளார்கள். உபகரணத்தை விற்பனை செய்த கடைக்காரர் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விதிகளின் படி ரசீது வழங்கவில்லை என்றும் இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி விற்பனை செய்தது நேர்மையற்ற வணிக நடைமுறை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வழக்கு தாக்கல் செய்துள்ள ஒவ்வொருவருக்கும் உபகரணத்தை விற்பனை செய்த கடைக்காரர் இழப்பீடாக ரூபாய் 30 ஆயிரமும் உபகரண உற்பத்தி நிறுவனம் ரூபாய் 20 ஆயிரமும் வழங்கவும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நுகர்வோர் தொடர்புள்ள செய்திகள்
** கடந்த வாரத்தில் தெலுங்கானா மாநிலத்தில் மாதபூர், கானாமேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா கல்வி நிலையத்தின் சமையலறைக்கு வழங்கப்பட்டிருந்த உரிமத்தை சுகாதார விதிகளுக்கு சுகாதார விதிகளை மீறி உள்ளதாக கூறி, தெலுங்கானா மாநில உணவு பாதுகாப்பு துறை இடைக்கால ரத்து செய்துள்ளது.
** நீதிபதி குறித்து அவதூறாக பேசியதாகவும் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் சென்னை, கோவை, நெல்லை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து வழக்கறிஞர்களை பணியிடை நீக்கம் செய்து கடந்த வாரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
** கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் வீடு உள்ள பகுதியையும் சேர்த்து விற்பனை ஆவணத்தை பதிவு செய்த கள்ளக்குறிச்சி சார்பதிவாளர் எண் 2 கடந்த வாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
** விபத்து நடந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் நபர்களுக்கு முதல் ஒரு மணி நேரம் கட்டணமில்லா சிகிச்சையை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் உத்தரவு பிறப்பித்துள்ளது.