கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமாரி. இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2024 மே மாதத்தில் ஒரு நாள் ஆசிரியையான ஜெயக்குமாரி காசர்கோட்டில் இருந்து பத்தனம்திட்டாவிற்கு (Kasaragod to Pathanamthitta) கார் மூலம் பயணம் செய்து கொண்டிருந்தார். இவ்வாறு பயணித்துக் கொண்டிருந்தபோது கழிப்பறைக்கு செல்ல நினைத்த ஜெயக்குமாரி பயணத்தின் வழியில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள தேனான்கலில் (Thenankalil petrol pump) என்ற இடத்தில் இருந்த இந்தியன் ஆயுள் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தியுள்ளார்.
காருக்கு பெட்ரோலை நிரப்பி பணத்தை செலுத்திய பின்னர் ஜெயக்குமாரி அங்கிருந்த ஊழியர்களிடம் கழிப்பறைக்கு (toilet) செல்ல சாவியை கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் சாவி தங்களிடம் இல்லை என்றும் இதனால் கழிப்பறையை பயன்படுத்த முடியாது என்றும் பதிலளித்துள்ளனர். வேறு வழியின்றி காவல்துறைக்கு மொபைல் மூலம் ஜெயக்குமாரி உடனடியாக புகார் செய்துள்ளார், உடனே அங்கு வந்த காவல் துறையினர் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கழிப்பறையின் சாவியை கேட்டபோது தங்களிடம் இல்லை என்றும் பங்க் உரிமையாளரிடம் சாவி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் இதனால் காவல்துறையினர் கழிப்பறையின் பூட்டை உடைத்து அதனை பயன்படுத்த ஜெயக்குமாரிக்கு உதவி செய்துள்ளனர்.
கழிப்பறையை ஜெயக்குமாரி கவனித்தபோது அந்த கழிப்பறை உபயோகப்படுத்தக்கூடிய நல்ல நிலையில் சுத்தமாகவே இருந்துள்ளது. இருப்பினும் கழிப்பறையை உபயோகப்படுத்த அனுமதி மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்களின் செயலால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் நேர விரையமும் காவல் துறையை அழைத்து போராட வேண்டிய சூழ்நிலையும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் பங்க் நிர்வாகத்தின் மீது பத்தனம்திட்டா மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் (Consumer Court) ஓரிரு தினங்களுக்கு முன்பு வழங்கிய தீர்ப்பில் பெட்ரோல் பங்க் நிர்வாகத்தின் செயல் சேவை குறைபாடாகும் என தீர்ப்பளித்துள்ளது. இதனால், ஜெயக்குமாரிக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரமும் வழக்கின் செலவு தொகையாக ரூபாய் 15 ஆயிரமும் பெட்ரோல் பங்க் நிர்வாகம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒரு வாடிக்கையாளராக, பெட்ரோல் பங்குக்கு செல்லும் போது உங்களுக்கு சில உரிமைகள் உள்ளன. எரிபொருளின் தரம் மற்றும் அளவை ஆய்வு செய்வதைத் தவிர, பெட்ரோல் பம்பில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்த உங்களுக்கு உரிமை உண்டு. உண்மையில், பெட்ரோல் பம்பிற்கு வருகை தரும் மக்களுக்கு சுத்தமான மற்றும் பயன்படுத்தக்கூடிய கழிப்பறை வசதிகளை வழங்குவது பெட்ரோல் பம்பின் கடமையாகும். நீங்கள் வாடிக்கையாளராக இல்லாவிட்டாலும், பணம் செலுத்தாமல் அதைப் பயன்படுத்த உங்களுக்கு உரிமை உண்டு.
ஒரு பெட்ரோல் பம்ப் சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் போன்ற சேவைகளை வழங்கத் தவறினால், நீங்கள் புகார் அளிக்கலாம், மேலும், இந்தத் தவறுக்காக பம்ப் அதன் உரிமத்தை கூட இழக்க நேரிடும். இந்தியா போன்ற ஒரு நாட்டில், பொது கழிப்பறைகள் ஒரு பெரிய சவாலாக உள்ளன, குறிப்பாக சாலைப் பயணங்களின் போது. இது போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் இந்தியாவில் பெண்களுக்கு நீண்ட சாலைப் பயணங்கள் சவாலாக உள்ளன.
ரயில் பெட்டியில் கழிப்பறையில் தண்ணீர் இல்லை. இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நுகர்வோர் நீதிமன்றம்
3 செப்டம்பர், 2021 அன்று டெல்லியில் இருந்து குளிர்சாதன பெட்டியில் முன்பதிவு செய்து ராஜேஷ் பயணம் செய்துள்ளார். காலை 8 மணிக்கு கழிப்பறைக்கு சென்ற போது அங்கு தண்ணீர் இல்லை. கையை கழுவ கூட வாஷ்பேஷனில் தண்ணீர் வரவில்லை. மேலும், அந்தக் கழிப்பறை அசுத்தமாக இருந்துள்ளது (dirty washroom). குளிர்சாதன ரயில் பெட்டியில் உதவிக்காக இருக்கும் ரயில் பெட்டி உதவியாளரும் (coach attendant) காணவில்லை. இதனால் உடனடியாக ரயில்வே இணையதளத்தில் புகார் செய்தும் எவ்வித பதிலும் வரவில்லை. காலை 10 மணிக்கு ரயில் இந்தூர் சென்றடையும் வரை கழிப்பறையில் தண்ணீர் இல்லை என்ற பிரச்சினை தீர்க்கப்படவில்லை இதனால் பயணிக்கு மிகுந்த மன உளைச்சலும் தலைவலியும் ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்சனை தொடர்பாக டெல்லி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ராஜேஷ் ரயில்வே நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜரான ரயில்வே நிர்வாகம் கழிப்பறைக்கு தண்ணீர் வழங்குவது சேவை என்ற பிரிவில் வராது என்றும் இதனால் நுகர்வோர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க இயலாது என்றும் ரயில்வே நிர்வாகம் நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் கடந்த 2024 ஜனவரி மாதத்தில் டெல்லி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ரயில்வே நிர்வாகத்தின் வாதத்தை நிராகரித்தது.
பாதிக்கப்பட்ட பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக (compensation) ரூபாய் 30 ஆயிரமும் வழக்கின் செலவு தொகையாக ரூபாய் 10 ஆயிரமும் வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: நுகர்வோர் உரிமைகளை போராடி பெற தயங்க கூடாது.