கோயம்புத்தூர், சூலூர் அருகே உள்ள சின்னமநாயக்கன் பாளையத்தில் வசித்து வருபவர் கௌரி குமார் (37). இவர் இரு சக்கர வாகனத்தை (SUZUKI Gixxer SF 155) கோயம்புத்தூரில் உள்ள என். ஜே. பைக் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற விநியோகஸ்தரிடம் ரூ 1,41,000/- செலுத்தி கடந்த 2021 மார்ச் இறுதி நாளில் வாங்கியுள்ளார். 2021 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனம் என்று தெரிவித்து விநியோகஸ்தர் வாகனத்தை விற்பனை செய்துள்ளார்.
வாங்கப்பட்ட இருசக்கர வாகனம் பதிவு செய்யப்பட்ட பின்னர் பதிவு புத்தகத்தை பார்த்த போது 2020 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனம் என்று கௌரி குமாருக்கு தெரியவந்துள்ளது. ஆனால், இன்சூரன்ஸ் வழங்கிய நிறுவனம் 2021 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனம் என்று பாலிசியில் குறிப்பிட்டுள்ளது. இவர் செலுத்திய பணத்துக்கு உரிய ரசீதையும் உடனடியாக விநியோகஸ்தர் வழங்கவில்லை. இருசக்கர வாகனத்தில் அதிக சத்தம் வாகனத்தை வாங்கிய சில நாட்களில் ஏற்பட்டதால் சர்வீஸ் சென்டருக்கு சென்று வாகனத்தை சர்வீஸ் செய்து பெற்ற போது வேறு நபர் பெயரில் ரசீது வழங்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் தொடர்ந்து அடிக்கடி சத்தம் வருவதும் அதனை சர்வீஸ் சென்டரில் சென்று சரி செய்வதுமாக கௌரி குமார் இருந்து வந்துள்ளார்.
உற்பத்தியில் குறைபாடு உள்ள இருசக்கர வாகனத்தை தயாரித்த நிறுவனமும் விற்பனை செய்த விநியோகஸ்தரும் செலுத்திய பணத்தை திரும்ப வழங்கவும் சேவை குறைபாட்டிற்காக உற்பத்தியாளர், விற்பனையாளர், இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியோர் இழப்பீடு வழங்கவும் கோயம்புத்தூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் கௌரி குமார் கடந்த 2022 நவம்பர் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கானது விரைவான விசாரணைக்காக கோயம்புத்தூரில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் 2021 ஆம் ஆண்டில் மூன்றாவது மாதத்தில் வாகனத்தை வாங்கியவருக்கு 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உற்பத்தியான வாகனத்தை 2021 ஆம் ஆண்டில் உற்பத்தியானதாக கூறி விநியோகஸ்தர் விற்பனை செய்துள்ளதும் வேறொரு நபர் முன்பதிவு செய்த வாகனத்தை மாற்றி வழக்கு தாக்கல் செய்தவருக்கு விற்பனை செய்ததும் இன்சூரன்ஸ் பாலிசியில் முறைகேடு செய்ததும் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல் செய்தவருக்கு இரு சக்கர வாகன விற்பனையாளர் ரூ 1,50,000/- இழப்பீடாகவும் காப்பீட்டு நிறுவனம் ரூ 50,000/- இழப்பீடாகவும் நான்கு வார காலத்திற்குள் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருசக்கர வாகனம் உற்பத்தி குறைபாடு உடையது என நிரூபிக்கப்படாததால் உற்பத்தியாளர் மீதான வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.