தீபாவளி பண்டிகை கால விற்பனைக்காக பெங்களூரில் இருந்து அனுப்பப்பட்ட துணி வகைகளை டெலிவரி செய்யாத பார்சல் நிறுவனம் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வி.ஆர்.கே. டிரண்ட்ஸ் என்ற பெயரில் ஆயத்த ஆடை விற்பனை நிலையத்தை (ready-made dress sale) நடத்தி வருபவர் சிதம்பரம் மனைவி பிரேமா (43). கடந்த ஆண்டு தீபாவளி விற்பனைக்காக 2023 அக்டோபர் மாதத்தில் பெங்களூரில் உள்ள மொத்த ஆயத்த ஆடை கடையில் ரூ33,075/- செலுத்தி பிரேமா வாங்கியுள்ளார். தமிழகத்தில் பிரபலமாக உள்ள தனியார் பார்சல் நிறுவனம் (MSS transport) ஒன்றின் பெங்களூர் கிளை அலுவலகத்தில் ஆயத்த ஆடைகள் பார்சலை ஒப்படைத்து குமாரபாளையம் முகவரிக்கு அனுப்ப பணத்தை செலுத்தியுள்ளார்.
தீபாவளி விற்பனைக்காக வந்து சேர வேண்டிய பார்சல் வராததை தொடர்ந்து பார்சல் நிறுவனத்தின் உள்ளூர் கிளையில் பலமுறை தொடர்பு கொண்டும் முறையான பதிலை பார்சல் நிறுவனத்தினர் வழங்கவில்லை. தீபாவளி முடிந்தும் பார்சல் வந்து சேராத நிலையில் மனமுடைந்த பிரேமா கடந்த மார்ச் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் பார்சல் நிறுவனம் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், பார்சல் நிறுவனத்தின் செயல்பாடு சேவை குறைபாடு என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு (12-11-2024) தீர்ப்பளித்துள்ளது. பார்சல் நிறுவனத்தின் சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடாக ரூபாய் ஒரு லட்சத்தையும் வழக்கின் செலவு ரூபாய் ஐந்தாயிரத்தையும் நான்கு வாரங்களுக்குள் பார்சல் நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் தவறினால் பணம் வழங்கப்படும் வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.