தோற்றம்
ஆதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகிலுள்ள நியூ கினியா தீவில் வாழ்ந்த பழங்குடியினரால் கரும்பு பயிரிடப்பட்டு பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கரும்பு நியூகினியாவில் இருந்து நுழைந்தது. இவ்வாறு உலகம் முழுவதும் கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை பரவி 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சர்க்கரைக்கு மக்களிடையே நுகர்வு அதிகரித்தது. 21 ஆம் நூற்றாண்டில் மதுபானங்களையும் புகையிலையும் விட சர்க்கரையின் நுகர்வும், அதற்கு அடிமையாகுவதும் அதிகரித்துள்ளது.
உற்பத்தி
2024 ஆம் ஆண்டின் தரவுகளின்படி சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது, பிரேசில் இரண்டாவது இடத்திலும் தாய்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளது. நான்காவது இடத்தில் சீனாவும், ஐந்தாவது இடத்தில் யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவும் உள்ளது.
உருவாக்குதல்
கரும்பிலிருந்தும் இனிப்பு கிழங்குகளிலிருந்தும் வெள்ளை சர்க்கரையும், நாட்டுச் சர்க்கரையும் எடுக்கப்படுகிறது. பெரும்பாலும் கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. கரும்பு அல்லது இனிப்பு கிழங்குகளை பிழிந்து சாராக எடுத்து அதை வடிகட்டி வெப்பப்படுத்தி சுத்தம் செய்த பின் லைம் மற்றும் கார்பன் டை ஆக்சைடுகலக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட சாறு வெப்பமயமாதல் மூலம் செறிவூட்டப்பட்டு படிகங்களாக தயாரிக்கப்படுகிறது. வெள்ளை சர்க்கரைக்கு வெல்லப்பாகு முற்றிலும் அகற்றப்படுகிறது, அதே நேரத்தில் நாட்டுச் சர்க்கரைக்கு, சில வெல்லப்பாகுகள் தக்க வைக்கப்படுகின்றன.
வகைகள்
சர்க்கரை என்றால் வெள்ளை சர்க்கரையையும் நாட்டுச்சர்க்கரையையும் மட்டுமே நமக்கு தெரியும். ஆனால், சர்க்கரை என்பது பல வகைகளை கொண்டதாகும். உதாரணமாக, பவுடர் சர்க்கரை, ஃப்ரூட் சர்க்கரை, பேக்கர்ஸ் ஸ்பெஷல் சர்க்கரை, சூப்பர் ஃபைன் சர்க்கரை, கோர்ஸ் சர்க்கரை, சாண்டிங் சர்க்கரை, பிரவுன் சர்க்கரை, டர்பினாடோ சர்க்கரை, மஸ்கோ வேடோ சர்க்கரை, ஃப்ரீ ஃபுளோயிங் பிரவுன் சர்க்கரை, லிக்விட் சர்க்கரை, இன்வெர்ட் சர்க்கரை என்று பல வகைகளைக் கொண்டதாக உள்ளது.
வெள்ளை சர்க்கரை
100 கிராம் வெள்ளை சர்க்கரையில் கிடைக்கக்கூடியவை என்னவெனில் ஆற்றல் 387கலோரி, கார்போஹைட்ரேட் 99.98 கிராம், சர்க்கரை 99.91 கிராம், தண்ணீர் 0.03 கிராம், ரிபோஃப்ளேவின் (வைட்டமின் பி2) 0.019 மில்லிகிராம்கள்,கால்சியம் 1 மி.கி, இரும்பு 0.01 மி.கி, பொட்டாசியம் 2 மி.கி.
நாட்டு சக்கரை
100 கிராம் நாட்டு சர்க்கரையில் கிடைக்கக்கூடியவை என்னவெனில் ஆற்றல் – 1,576 கலோரி,கார்போஹைட்ரேட்டுகள் – 97.33 கிராம், சர்க்கரைகள் – 96.21 கிராம், தண்ணீர் – 1.77 கிராம், தியாமின் (வைட்டமின் பி1) – 0.008 மி.கி, ரிபோஃப்ளேவின் (வைட்டமின் பி2) – 0.007 மி.கி, நியாசின் (வைட்டமின் பி3) – 0.082 மி.கி, வைட்டமின் பி6 – 0.026 மி.கி, ஃபோலேட் (வைட்டமின் பி9) – 1 மைக்ரோகிராம், கால்சியம் – 85 மி.கி, இரும்பு – 1.91 மி.கி, மெக்னீசியம் – 29 மி.கி, பாஸ்பரஸ் – 22 மி.கி, பொட்டாசியம் – 346 மி.கி, சோடியம் – 39 மி.கி,துத்தநாகம் – 0.18 மி.கி.
சர்க்கரை
சர்க்கரை என்றால் வெள்ளை சர்க்கரை அல்லது இனிப்பு பொருட்களில் உள்ள சர்க்கரையை தான் சர்க்கரை என்று நாம் கருதுகிறோம். ஆனால், பல வகைப்பட்ட பழங்களிலும் உண்ணும் உணவுகளிலும் சர்க்கரை உள்ளது. குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் கலந்த கலவை தான் அனைத்து சர்க்கரைகளிலும் கிடைப்பதாகும் குளுக்கோஸ் உடலுக்கு ஆற்றல் தரக்கூடியது எனினும் அதனுடன் உள்ள பிரக்டோஸ் சிக்கலை வழங்கக் கூடியதாகும். சர்க்கரையில் இருக்கும் குளுக்கோஸ் எளிதாக உடலில் கரைந்து ஆற்றலாக மாறிவிடும் நிலையில் பிரக்டோஸ் கல்லீரலுக்குச் சென்று ஆற்றலாக மாற்றப்படுகிறது. அதிக சர்க்கரை எடுத்துக் கொள்ளும் போது கல்லீரல் பிரக்டோசை ஆற்றலாக மாற்ற முடியாமல் திணறுகிறது. அப்போது பிரக்டோஸ் கல்லீரலில் கொழுப்பாக படிந்து விடுகிறது.
பிரச்சனை
வெள்ளை சர்க்கரையை உட்கொள்வதால் நமக்கு ஒரு சில நன்மைகளும் உள்ளன. என்னவென்றால், நம்முடைய மூளையின் உடைய செயல்பாடுகளை அதிகரிக்கும், மகிழ்ச்சிகரமான நபராக வைத்திருக்கும், அதிகப்படியான ஆற்றலை தரும். ஆனால், இந்த வெள்ளை சர்க்கரையினால் ஏற்படும் விளைவுகள் என்பது நம்முடைய உடல் ரீதியான நோய்களையும், மனரீதியான அழுத்தங்களையும் கொடுக்கின்றது. அதிகமான உடல் பருமனும், தூக்கமின்மையும், பற்களில் பிரச்சனையும், உடல் ரீதியாக பலவிதமான பிரச்சனைகளும் ஏற்படுகிறது. நாட்டு சர்க்கரையில் அயன், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் உள்ளது. இதற்கு காரணம், அந்த மொலாசஸ் என்கிற வெல்லப்பாகை அகற்றாமல் இருப்பதுதான்.
நாட்டு சர்க்கரையில் வெள்ளை சர்க்கரையை ஒப்பிடும்போது சிறிது அதிகமாக கால்சியம், அயன், பொட்டாசியம் உள்ளது. நாட்டுச் சர்க்கரையில் ரசாயனங்கள் சேர்க்காமல் இருப்பின் நாட்டுச் சர்க்கரையின் சத்துக்களும் அதிகமாகும். அதன்படி பார்த்தால் வெள்ளை சர்க்கரையை விட நாட்டுச் சர்க்கரை அதிகமான சத்துள்ளதாகும். ஆனால், இவ்வாறான நாட்டுச் சர்க்கரை நமக்கு கிடைப்பது அரிதாகும். நாட்டுச் சர்க்கரையும் அதிக அளவு எடுத்துக் கொள்வது உடல் நலத்துக்கு தீங்கானது
உலக சுகாதார அமைப்பானது 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி சர்க்கரை எந்த அளவிற்கு உட்கொள்ள வேண்டும் என்ற அளவு தெரியாமல் உட்கொண்டு, 1.5 மில்லியன் மக்கள் ஒரு ஆண்டுக்கு இறக்கின்றனர் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒரு நாளுக்கு 25 கிராமுக்கு, அதாவது 5 ஸ்பூன் அளவுக்கு மேல், சர்க்கரை எடுத்துக் கொண்டால் ஆபத்து என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கலப்படம்
சில வர்த்தகர்களும் நிறுவனங்களும் வெள்ளை சர்க்கரையில் அதிகப்படியாக யூரியாவை கலக்கின்றனர். இந்த யூரியா தண்ணீரில் மிக சுலபமாக கரைந்து விடும். சர்க்கரையை கலப்படப்படுத்துவதற்கு பிளாஸ்டிக், சுண்ணாம்பு, வாஷிங் சோடா, யூரியா மற்றும் இனிப்பை தரக்கூடிய வேறு வகையான பொருட்களையும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு சர்க்கரையில் கலப்படம் செய்வதால் அதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கு ரத்த அழுத்த நோயும், சர்க்கரை நோயும், உடல் பருமனும் ஏற்படுகின்றது. அந்த சர்க்கரையை எடுத்து தண்ணீரில் கலந்தால், அது யூரியா கலந்த சர்க்கரை எனில், அது கரைந்த பின்னர் அம்மோனிய நறுமணம் வரும். இதுவே, சுண்ணாம்பையும், நெகிழியையும், வாஷிங் சோடாவையும் கலந்த சர்க்கரை என்றால் அது தண்ணீரில் கலக்கும் பொழுது கீழே படிந்து நிற்கும்.
இனிக்கும் சர்க்கரை அளவை மீறி எடுத்துக் கொண்டால் உடலின் பாகங்களுக்கு கசப்பாக மாறி மருத்துவமனைகளுக்கு சென்று சிரமப்பட வேண்டிய நிலை உருவாகும் என்றல்லவா தெரிகிறது.