spot_img
October 6, 2024, 9:37 am
spot_img

விதிகள் தயார் – நுகர்வோர் கவுன்சில்கள் அமைக்கப்படுவது எப்போது?

1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச்   சட்டம் நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு கடந்த 2020 ஜூலை மாதம் முதல்   அமலில் உள்ளது. 

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி, தேசிய அளவில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில், மாநில அளவில் மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்   என மூன்று வகையான நுகர்வோர் பாதுகாப்புக்கான ஆலோசனை அமைப்புகள்   அமைக்கப்பட்டு செயல்பட வேண்டும். நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கவும் மேம்படுத்துவோம் தேவையான ஆலோசனைகளை  வழங்குவது இந்த   அமைப்புகளின் நோக்கமாகும்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி, மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்,  மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்  ஆண்டுக்கு இரண்டு முறையாவது நடத்தப்பட வேண்டும் தேவைப்பட்டால் அவ்வப்போது கூட்டங்களை நடத்தலாம். இத்தகைய கவுன்சில்கள் அமைக்கப்பட வேண்டும் என்று 2019   ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் கூறியபோதிலும் சட்டம் இயற்றப்பட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து, தமிழ்நாட்டில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்களை அமைப்பதற்கான விதிகள் கடந்து 2023 நவம்பர் மாதத்தில் உருவாக்கப்பட்டு அரசு இதழில் வெளியிடப்பட்டது. இந்த விதிகள் என்ன கூறுகின்றன என்பதை அறிந்து கொள்வது அவசியமானதாகும்.

மாநில கவுன்சில்

தமிழ்நாடு மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 2023 -ன்படி, மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைவராக நுகர்வோர் பாதுகாப்பு விவகாரங்களை கவனிக்கும் தமிழக அரசின் அமைச்சர் செயல்படுவார். தமிழக அரசால் நியமனம் செய்யப்படும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த குழுவில் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான ஆணையர், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் பதிவாளர் ஆகியோர் மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் பதவி வழி (ex officio) உறுப்பினர்களாக இருப்பார்கள்.

ஐந்துக்கும் மேற்படாத அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்களின் பிரதிநிதிகளைம் ஐந்துக்கும் மேற்படாத நுகர்வோர் அமைப்புகளின் (Consumer Organizations) பிரதிநிதிகளைம் மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தமிழக அரசு நியமிக்க வேண்டும். நுகர்வோர் நலனுக்கான செயல்பாட்டாளர்கள், ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவன வல்லுநர்கள், கல்வியாளர்கள், விவசாயிகள், வர்த்தகம் அல்லது தொழில் துறையினர் போன்ற பிரிவுகளில் இருந்து ஐந்துக்கும் மேற்படாத உறுப்பினர்களை மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலுக்கு மாநில அரசு நியமிக்க வேண்டும். இதில் ஒருவர் மகளிராக இருக்க வேண்டும்.

தமிழக அரசின் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் செயலாளர் மாநில நுகர்வோர் பாதுகாப்பு உறுப்பினர்-செயலாளராக (Member-Secretary) செயலாளராக இருப்பார்.

மாவட்ட கவுன்சில்

தமிழ்நாடு மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 2023 -ன்படி, மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்படுவார். ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த குழுவில் இருப்பார்கள். நுகர்வோர் நலன் தொடர்புடைய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களின் இரண்டு பிரதிநிதிகளும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் மூன்று பிரதிநிதிகளும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற வேண்டும்.

விவசாயிகள், உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோர் பிரிவிலிருந்து இரண்டு பிரதிநிதிகளையும், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க பிரிவிலிருந்து இரண்டு பிரதிநிதிகளையும் நுகர்வோர் நலன் தொடர்பான திறமை வாய்ந்த மூன்று பிரதிகளையும் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய குழு மற்றும் மாவட்ட ஊராட்சி ஆகியவற்றிருந்து தலா இரண்டு உறுப்பினர்களையும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அதன் தலைவரான மாவட்ட ஆட்சித் தலைவர் நியமிக்க வேண்டும்.

நுகர்வோர் நீதிமன்றம் என்று அழைக்கப்படும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் அல்லது அவரால் பரிந்துரைக்கப்படும் ஆணைய உறுப்பினர்களில் ஒருவர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலில் பதவி வழி (ex officio) உறுப்பினராகவும் இருப்பார். இந்த கவுன்சிலுக்கு மாவட்ட உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உறுப்பினர்-செயலாளராக (Member-Secretary) செயல்படுவார்.

தாமதம்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அமைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் இந்தியாவில் சில மாநிலங்களைத் தவிர மாநில மற்றும் மாவட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்கள் உருவாக்கப்படவில்லை. சில மாநிலங்களில் இவற்றை அமைப்பதற்கான விதிகள் இன்னும் வெளியிடப்படவில்லை ஆனால், தமிழகத்தில் இதற்கான விதிகள் உருவாக்கப்பட்டு அரசு இதழில் வெளியிடப்பட்டு விட்டது. இந்நிலையில் மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்பது நுகர்வோர் ஆர்வலர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களின் ஆசையாக உள்ளது. நாகப்பட்டினம், நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இத்தகைய மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்