spot_img
November 11, 2024, 7:16 am
spot_img

விரைவான நீதிக்கும் நீதித்துறையை பாதுகாப்பதற்கும் என்ன செய்ய வேண்டும்?

விரைவான நீதிக்கு வழி வகுக்க வேண்டும்: பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நீதிமன்றங்களை அணுகும் போது தங்கள் வழக்கு விரைவில் விசாரிக்கப்பட்டு நீதி கிடைக்க வேண்டுமென விரும்புவது இயற்கையானது. நாட்டின்  குடிமக்கள் வழக்குகளில் விரைவில் தீர்வை பெற  நீதிமன்றங்களையும் அதிகரிப்பதோடு அதற்கேற்ப ஊழியர்களின் எண்ணிக்கை, தகவல் தொழில் நுட்ப பயன்பாடு உள்ளிட்ட உட்கட்டமைப்புகளையும் வலுப்படுத்த வேண்டும். இதற்கான பணிகளை மாநில அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.  

சட்ட உதவி பணிகளை வலுப்படுத்த வேண்டும்: மாநில அளவில் உள்ள சட்ட உதவி பணி அமைப்பையும் மாவட்ட, வட்ட அளவில் இயங்கும் சட்ட உதவி பணி குழுக்களையும் வலுப்படுத்தி மக்களிடையே சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு வசதியற்ற மக்களுக்கு நீதியை எளிதில் பெற வாய்ப்புகளை உருவாக்கும் வேண்டும். இதன் மூலம் வசதி படைத்தவர்கள்தான் நீதிமன்றங்களை அணுக முடியும் என்ற எண்ணத்தை மாற்றலாம். மேலும் நிறுவனங்களில் ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் வெளிநபர்கள் மூலம்  நடத்தப்படும்  உள் விசாரணை (domestic enquiry) நடவடிக்கைகள் சட்ட பணி அமைப்புகளின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். 

விசாரணை அமைப்புகளில காலக்கெடு தேவை:  ஊழல் புகார்களை விசாரிக்கும்  லோக்ஆயுக்தா, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் மற்றும் மாவட்ட நுகர்வோர் ஆணையங்கள், மாநில மனித உரிமைகள் ஆணையம்,  மின் ஒழுங்குமுறை ஆணையம், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் ஆணையங்கள்  போன்ற விசாரணை அமைப்புகளில் சமர்பிக்கப்படும் புகார்களை விசாரித்து தீர்வு வழங்க கால நிர்ணயம் செய்வதோடு அதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.

புகார்களை விசாரிக்கும் பிரிவுகளில் சுதந்திரம் தேவை : சில ஆணையங்கள் புகார்களை விசாரிப்பதோடு கண்காணிப்பு (monitor) பணிகளையும் மேற்கொள்கின்றன. இத்தகைய ஆணையங்களில் நிர்வாக பிரிவும் விசாரணை பிரிவும் தனிதியங்குவது அவசியமானது. புகார்களை விசாரிக்கும் பிரிவில்  பதிவாளர் பதவி உருவாக்கப்பட்டு  அப்பதவியில் பத்து ஆண்டுகளுக்கு குறையாத வழக்கறிஞர் அனுபவம் உள்ளவரோ அல்லது தலைமை செயலக சட்டத்துறையில் சார்பு செயலாளலருக்கு குறையாத நிலையில் உள்ளவரோ நியமிக்க வேண்டும்.  இத்தகைய விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக இயங்க ஆணையங்களுக்கான நிர்வாக துறையை ஏற்படுத்தலாம் அல்லது குறைந்த பட்சம் எந்த துறை மீது ஒரு ஆணையம் அதிக கண்காணிப்பை கொண்டுள்ளதோ அத்துறை அதிகாரிகளுக்கு சம்பந்தப்பட்ட ஆணையத்தில் அயல்பணி வழங்க கூடாது. புகார்களை இணையதளம் மூலம் சமர்பிக்க வழி வகுப்பதோடு எழுத்து மூலமான புகார்களும் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு புகாரின் நிலையை அறிந்து கொள்ளும் வசதியும் உருவாக்கப்பட வேண்டும்.

மாநில சட்ட பயிற்சி மையம்: ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாநில நீதித்துறை பயிற்சி மையத்தில் நீதிபதிகளுக்கு பணிக்காலத்தில் அவ்வப்போது புதிய சட்டங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற, உயர்  நீதிமன்ற தீர்ப்புகளை விளக்கும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதைப் போலவே மாநில சட்ட பயிற்சி மையம் (state law academy) அமைக்கப்பட்டு வழக்கறிஞர் திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இம் மையங்களில் ஆய்வு மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள், மருத்துவர்கள், தணிக்கையாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்டவர்களுக்கு தொடர்புடைய சட்டங்களில் பயிற்சிகளை வழங்கலாம். மேலும் வழக்கறிஞர் சங்கங்களில் உள்ள நூலகங்களை மேம்படுத்த வேண்டும். 

வழக்கறிஞர் நலன்: வழக்கறிஞர்கள் பொருளாதார ரீதியாக சிரமம்  இல்லாமல் இருந்தால்தான் வழக்கு நடத்தும் பொது மக்களுக்கு நல்லது. இதனால் சட்டப்பணிகளை தவிர வேறு வருமானத்தை வழக்கறிஞர்கள் சார்ந்திருக்க வேண்டிய நிலை மாறும். இளம் வழக்கறிஞர்கள் பலருக்கு பொருளாதார உதவி தேவைப்படுகிறது. வழக்கறிஞராக பதிவு செய்ததிலிருந்து முதல் மூன்றாண்டுகளுக்கு மாதமொன்றுக்கு ரூ 5000/- உதவித் தொகை வழங்கலாம். மூன்றாண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள பல வழக்கறிஞர்களும் வாழ்க்கைக்கான குறைந்தபட்ச வருமானம் என்பது உறுதிப்படுத்த வேண்டும். வழக்கறிஞர்களுக்கு இத்தகைய சமூக பாதுகாப்பு சட்டத் தொழிலின் மேன்மையை காக்க மிக அவசிமானது. இதற்கான திட்டத்தை  அரசின் நிதி உதவியின்றி உருவாக்க இயலும். இத்தகைய திட்டம்  குறித்த ஆய்வறிக்கை இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே சமர்பிக்ப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்த தகவல்கள் அரசின் கவனத்துக்கு இதுவரை வரவில்லை. 


வளர்ச்சி: பொதுவாக  நீதித்துறையின் சிறப்பான செயல்பாடும் மக்களின் சட்ட விழிப்புணர்வும் அதிகரிக்கும் போது நாட்டின் அமைதியும் வளர்ச்சியும் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையும் உயரும் என்தில்  ஐயமில்லை. இதனை உருவாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்