தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் திரு. கிச்சன்நகரி சர்வேஸ்வர ரெட்டி சொந்த வீடு ஒன்றை வாங்கும் கனவில் ஆர். எச். சி. வென்ச்சர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அணுகிய போது ரூபாய் 42 லட்சத்துக்கு ஹைதராபாத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை கட்டித் தர அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் சார்பில் 24 மாதத்தில் வீட்டை கட்டி முடித்து ஒப்படைப்பதாக தெரிவிக்கப்பட்ட வாக்கை நம்பி சர்வேஸ்வர ரெட்டி ரூபாய் 30 லட்சத்தை முன்பணமாக செலுத்தி உள்ளார்.
மீத தொகையை செலுத்த தயாராக இருந்தும் வீடு கட்டும் நிறுவனம் உரிய காலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கட்டி முடித்த வீடு ஒன்றை சர்வேஸ்வர ரெட்டி முன் பதிவு செய்தபடி வீட்டை ஒப்படைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தெலுங்கானா மாநில நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். பலமுறை மாநில நுகர்வோர் ஆணையத்தில் இருந்து அறிவிப்பு அனுப்பியும் வீடு கட்டும் நிறுவனம் ஆணையத்தில் ஆஜராகி எவ்வித கருத்தையும் தெரிவிக்காததால் வீடு கட்டும் நிறுவனத்திற்கு எதிராக மாநில ஆணையம் தீர்ப்பு வழங்கியது.
இத்தீர்ப்பை எதிர்த்து வீடு கட்டும் நிறுவனம் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு (First Appeal No. 95 of 2020) செய்தது. இந்த வழக்கை விசாரித்து கடந்த வாரம் தீர்ப்பு வழங்கிய தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் நுகர்வோர் செலுத்திய ரூபாய் 30 லட்சத்தை ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் வீடு கட்டும் நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
விற்பனையாளர் அல்லது சேவை வழங்குபவர் நுகர்வோருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள காலத்தில் ஒப்பந்தத்தை நிறைவேற்ற தவறினால் ஒப்பந்தம் மேற்கொண்ட நுகர்வோர் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் செலுத்திய பணத்தை வட்டியுடன் பெறவும் இழப்பீடு பெறவும் வழக்கின் செலவு தொகையை பெறவும் உரிமை உடையவர் என்று இந்த தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.