நாம் உப்பு இல்லாமல் உண்கின்ற உணவிற்கு சுவை இல்லை. உப்பு சிறிது சேர்த்தால் தான் உணவில் உள்ள அத்தனை சுவைகளும் நம் நாக்குக்கு புலப்படும் என்பதே நிதர்சனம். இயற்கையாக சோடியம், குளோரைடு ஆகிய இரண்டிற்கும் வேதிவினைகள் நடைபெற்று சோடியம் குளோரைடு உப்பாக நமக்கு கிடைக்கின்றது.
கடல் உப்பு, இந்துப்பு, பிளாக் உப்பு, மேசை உப்பு, கேசர் உப்பு, சாம்பல் நிற உப்பு, பிளேயர் டீ உப்பு, காலா நாமக் உப்பு, சீவல் உப்பு, பிளாக் ஹவாயன் உப்பு, சிகப்பு ஹவாயன் உப்பு, புகைபிடிக்கப்பட்ட உப்பு, ஊறுகாய் உப்பு இப்படி நமக்கு தெரியாத உப்புக்கள் நிறைய உள்ளது.
பழங்காலத்தில் இருந்து தற்போது காலம் வரை இயல்பாகவே கடல் உப்பு தான் உபயோகிக்கின்றோம். கடல் உப்பில் சோடியம், குளோரைடு மற்றும் பொட்டாசியம் காணப்படுகின்றது. இவ்வகை உப்பால் நரம்பு மண்டலம் மற்றும் தசைகள் சுறுசுறுப்பாக இயங்கும்.
இந்துப்பு என்பது பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகை உப்பாகும். இந்த பாறைகள் பஞ்சாப், ஹரியானா, இமயமலை போன்ற பகுதிகளில் கிடைக்கின்றது. இதில் காப்பர், பொட்டாசியம், இரும்பு சத்து, கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம், காப்பர் சத்துக்கள் உள்ளன. இந்து உப்பு அதிகமாக ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் இன்றும் பயன்படுத்துகின்றனர்.
பிளாக் உப்பில் அதிகப்படியான தாதுக்களும் வைட்டமின்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வகை உப்பு பார்ப்பதற்கு கருப்பு படிக்கங்களாக இருக்கும். நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் மேசை உப்பு மீண்டும் கட்டியாகாமல் தடுக்க ரசாயனம் சேர்க்கப்படுகின்றது. இந்த உப்பை சுத்தம் செய்யும் போது உப்பில் உள்ள கனிமங்களும் அகற்றப்பட்டு விடுகின்றன. இதனால் இந்த உப்பை உபயோகிக்கும் போது அயோடின் குறைபாடு ஏற்படுகிறது.
தற்பொழுது உப்பை அதிகமாக உட்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால் ஏற்படும் விளைவுகளை நோய் வந்த பின்னரே மக்கள் கவனிக்கின்றனர். என்ன இப்படி சொல்றீங்க உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று தானே பெரியவங்க சொல்லி இருக்காங்க? அவ்வளவு ஏன் எங்க பாட்டி காலத்துல எவ்வளவு ஊறுகாய், வடகம், வற்றல், உப்பில் காய வைத்த மீன் இப்படி எல்லாம் சாப்பிட்டு அவங்க 90 வயசு வரைக்கும் வாழ்ந்தாங்களே? என்று கேட்கிறீர்களா?
பெரியவர்கள் கூறிய இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம் பஞ்சம் ஏற்படும் காலத்தில் உப்பு சேர்க்கப்படாத உணவை நெடு நாட்களுக்கு வைத்து உபயோகிக்க முடியாது எனவே உப்பில்லா பொருட்கள் சிறிது நாட்களில் கெட்டுப் போகும். இதனால் உப்பு சேர்த்து அதை பயன்படுத்தினர். அதை புரிந்து கொள்ளாமல் நாம் உப்பை மிகுதியாக சேர்த்து உண்ணத் துவங்கி விட்டோம்.
சரியாக ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு 5 கிராம் உப்பு மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நாம் உண்ணும் துரித உணவுகள், செறிவூட்டப்பட்ட உணவுகள், சாக்லேட், பிஸ்கட் போன்றவற்றில் சோடியம் கார்பனேட், சோடியம் பென்சைட், சோடியம் நைட்ரேட் இவ்வாறான உப்புக்களை சேர்க்கின்றனர். நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த உப்புகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்க நேரிடுகிறது.
இந்தியாவில் மட்டும் 22 கோடி மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உயர் இரத்த அழுத்த பாதிப்புக்கு உள்ளாகும் போது தினமும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதனை வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய நிலை ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லாமல் போனால் பக்கவாதம், மாரடைப்பு போன்ற ஆபத்துகளும் ஏற்படுகிறது.
பொதுவாக, நம் நாக்கு எதை பழகுகிறதோ அதற்கே அடிமையாகும் தன்மை கொண்டது. உப்பை சற்று குறைவாக சுவைக்க பழகிக் கொள்வதே நம் உடலுக்கு நல்லது. மனிதனின் கழுத்துப் பகுதியில் காணப்படும் தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோன்தான் உடலின் வளர்ச்சியை தூண்டுகிறது. இந்த ஹார்மோனின் அடிப்படை பொருள் அயோடின். இதில் சுரக்கும் அயோடின் அளவு குறைவதால் முன் கழுத்துக்கழலை என்ற நோய் வரும் வாய்ப்பு அதிகம். அயோடின் அதிகம் சேர்த்துக் கொண்டால் ஹைப்போ தைராய்டிசம் மற்றும் பிற நோய்கள் வரும் வாய்ப்புள்ளது. நம் தேவைக்கேற்ப அயோடின் கலந்த உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.