spot_img
November 21, 2024, 3:05 pm
spot_img

ரெடிமேட் இட்லி – உஷார் மக்களே!

பெரும்பாலான தமிழக மக்களின் விருப்பத்துக்கு உரிய உணவாக திகழ்வது இட்லி.  ஆவியில் இட்லி வேக வைக்கப்படுவதால் எண்ணெய் கலப்படம் இல்லாத  மிகச்சிறந்த உணவுதான் இட்லி.  வயிற்றுக்கு மிகச் சிறந்த உணவு மட்டுமல்லாது சிறந்த சத்துக்களையும் அடக்கியதுதான் இட்லி. இவ்வாறு இட்லியை பற்றி சொல்வதென்றால் இன்னும் பல விவரங்களை சொல்லலாம். சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில் இட்லி தமிழர்களின் தனிப்பெரும் உணவு சின்னம்.  

வீடுகளில் அரிசி மற்றும் உளுந்தை போதிய அளவில் பயன்படுத்தி ஆட்டுக்கல்லில் அரைத்து இட்லி மாவு தயாரித்தால் அதில் உருவாகும் இட்லியின் சுவையே தனி.  அந்தக் காலம் மலையேறிவிட்டது.  இப்போது கடைகளில் மட்டுமல்ல வீட்டுக்கு வீடு கிரைண்டர். இதனால் ஆட்டுக்கல்லில் இட்லி மாவு என்பதை பார்ப்பது அரிதாகி விட்டது.  இருப்பினும், வீடுகளிலும் கடைகளிலும் உள்ள கிரைண்டர்களின் மூலமாக தயாரிக்கப்படும் இட்லி மாவுகளின் மூலம் கிடைக்கும் இட்லியும் நன்றாகவே உள்ளது என்பதை மனம் ஏற்றுக் கொண்டு விட்டது.

இதனையும் தாண்டி தற்போது பெருநகரங்களில் மட்டுமல்லாது அனைத்து கிராமங்கள் வரை ரெடிமேடு இட்லி பாக்கெட்டுகள் விற்பனைக்கு வந்து விட்டன.  நேரமின்மை காரணமாகவும் வேலையை குறைப்பதற்காகவும் பலரும் இட்லி மாவு பாக்கெட்டுகளில் வாங்கி பயன்படுத்த தொடங்கி விட்டனர். பாக்கெட்டுகளில் விற்கப்படும் இட்லி மாவு  எவ்வாறு சுகாதாரமாக தயாரிக்கப்படுகிறது? என்பது தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே அறிந்த உண்மையாகும்.   எவ்வாறு இருப்பினும் இவற்றை ஓரிரு நாட்கள் வைத்து விற்பனை செய்வதற்காக ரசாயனங்கள் சேர்க்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

எனக்கு ஒரு சம்பவம் நன்றாக ஞாபகம் உள்ளது. தற்போது எனக்கு 57 வயதாகிறது. பழனியில் உள்ள பழனியாண்டவர் பாலிடெக்னிக்கில் மூன்றாம் ஆண்டு நான் படித்துக் கொண்டிருந்த போது எனக்கு வயது 20. அப்போது எதிரில் உள்ள ஒரு கடையில்   இட்லி பூப்போல இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக சோடா உப்பை கலந்து விட்டதாக கூறி மாணவர்கள் அந்த கடையில் தகராறு செய்தார்கள். ஆனால், இன்று காலை எனக்கு ஏற்பட்ட அனுபவம் அதிர்ச்சிகரமாக இருந்தது.

பழனியில் இருந்து நுகர்வோர் பூங்கா மின்னிதழ் வெளியானாலும் பல நகரங்களுக்கு இந்த பத்திரிக்கை தொடர்பாக பயணிக்க வேண்டி உள்ளது.   இன்று காலை கொங்கு மண்டலத்தில் முட்டைக்கு பெயர் போன ஒரு நகரில் நுகர்வோர் பூங்காவின் ஆதரவாளர்களும் வாசகர்களும் அதிகமாக இருப்பதால் அவர்களை சந்திக்க சென்று இருந்தேன். காலையில் பேருந்தை விட்டு இறங்கியதும் வாசகர் வட்டத்தை சந்திப்பதற்கு முன்பாக வயிற்றுக்கு உணவை வழங்கி விட்டு வேலையை தொடங்கலாம் என்று நானும் என் உடன் வந்த நண்பரும் ஒரு உணவகத்துக்கு சென்றோம்.

என் நண்பர் உணவகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பணியாளரை அழைத்து ஆளுக்கு இரண்டு இட்லி  கொடுங்கள் என்று கேட்டார். நான் அப்போது பரிமாறிக் கொண்டிருந்த அந்த நபரிடம் இட்லி சூடா இருந்தா கொடுங்க. இல்லாவிட்டால் இட்லி எடுக்கும் வரை காத்திருக்கிறோம் என்றேன். அப்போது அவர் சொன்ன பதிலால்தான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து நான் மீளாமல் உள்ளேன்.

“சார் இட்லி எல்லாம் வெளியில் இருந்து வாங்குகிறது தான் சூடா எல்லாம் இருக்காது” என்றார் அந்த கடையின் பணியாளர். நான் அவரைப் பார்த்து ஆச்சரியத்துடன் “அப்படியா?” என கேட்டபோது அவர் சொன்னார் “இந்த ஊரில் மூன்று இட்லி பேக்டரி உள்ளது. இரண்டு பேக்டரியில் சிம்ரன் இட்லி பேக்டரி. ஒரு பேக்டரி குஷ்பு இட்லி பேக்டரி” .  அது என்ன சிம்ரன் இட்லி? குஷ்பூ இட்லி? என நான் கேட்பதாக பார்த்த பார்வையிலே தெரிந்து கொண்ட அவர் விளக்கினார் “குண்டாக  உள்ள இட்லி குஷ்பு இட்லி. சாதாரணமாக இருக்கக்கூடியது சிம்ரன் இட்லி” என வர்ணித்தார்.

ஆச்சரியத்துடன் பார்த்த என் முகத்தை பார்த்து அவரே தொடர்ந்தார் “பெரும்பாலான கடைகளில் தற்போது இட்லிக்கு மாவு ஊறவைத்து கிரைண்டரில் ஆட்டி   புளிக்க வைத்து மறுநாள் இட்லி பாத்திரத்தில் இட்லி”சுடுவதெல்லாம் இல்லை சார்” என்றார்.  “தற்போது பல உணவகங்கள்   பாக்டரியில் இருந்து தயாரிக்கப்படும் ரெடிமேட் இட்லி வாங்கி வைத்து நாள் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக” அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்த இன்னொருவர் என்னை அப்பாவியாக பார்த்து தெரிவித்தார்.  மேலும், அவரே சொன்னார் “இந்த இட்லிகளில் உளுந்து அதிகம் சேர்க்கப்படுவதில்லை. ஈஸ்ட் போன்ற ரசாயன பொருட்கள் மூலம் புளிக்க வைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. கெடாமல் இருக்க சில ரசாயனங்களை பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது”

எனக்கு தலை சுற்றியது. என்னுடன் வந்த நண்பர் இட்லி கேன்சல் என்றார். வேறு ஏதாவது சாப்பிடலாம் என நான் நினைக்கும் முன்பே அவர் எழுந்து கடையை விட்டு நடையை கட்டி விட்டார்.  நான் நுகர்வோர் பூங்காவின் ஆசிரியர். எனக்கு தோன்றுவதெல்லாம் இந்த இட்லியை உண்ணும் நுகர்வோர் ஆரோக்கியமாக இருப்பார்களா?   இது குறித்த ஆய்வை உடனே உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மேற்கொண்டு ரெடிமேட் இட்லிக்கான நெறிமுறைகளை வகுப்பது அவசியமாகும். இல்லாவிட்டால் நுகர்வோருக்கு இட்லி சுவைக்கிறதோ? இல்லையோ? மக்களின் உடல் நலத்துக்கு இந்த இட்லியினால் உறுதி அளிக்க முடியாது என்பதாகும். 

க.கதிர்வேல்
க.கதிர்வேல்
க.கதிர்வேல், ஊடகவியலார்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்