ஒவ்வொரு நாட்டிலும் அரசியலமைப்புச் சட்டமே உயர்வான சட்டமாகும். ஒவ்வொரு நாடும் எவ்வாறு ஆட்சி செய்யப்பட வேண்டும்? அரசாங்க முறை எவ்வாறு இருக்க வேண்டும்? அரசாங்கத்தின் அமைப்புகள் எப்படி இருக்க வேண்டும்? குடிமக்களின் உரிமைகள் – கடமைகள் என்ன? என்பது உள்ளிட்ட அனைத்தையும் கொண்டதுதான் அரசியலமைப்பு. இந்திய தேசம் அதிபர் ஆட்சி (Presidential form of Government) முறையை / ஒற்றை ஆட்சி (Unitary form of Government) முறையை நோக்கி நகர்கிறதா? என்ற கேள்விக்கு பதில் காண்பதற்கு முன்பாக அரசியல் அறிவியலில் உள்ள சில அடிப்படை அம்சங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
உலகில் உள்ள நாடுகளில் பெரும்பாலும் பாராளுமன்ற முறையிலான அரசாங்கம் அல்லது அதிபர் முறையிலான அரசாங்கம் என்ற அமைப்பு முறை உள்ளது. ஓரிரு நாடுகளில் விகிதாச்சார முறையிலான அரசாங்கம் (Proportional Representation) அல்லது மன்னர் வழியில் அரசாங்கம் இயங்குகிறது. அதிபர் ஆட்சி முறையிலான அரசாங்கத்திற்கு அமெரிக்க ஐக்கிய நாடு முன்மாதிரியாகவும் பாராளுமன்ற ஆட்சி முறையிலான அரசாங்கத்திற்கு இங்கிலாந்து முன்மாதிரியாகவும் திகழ்கின்றன.
அதிபர் அரசு முறையில் நாட்டின் தலைவர் நேரடியாக மக்களால் அல்லது மறைமுகமான தேர்தலால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதிபர் முறை அரசு உள்ள நாடுகளில் சட்டம் இயற்ற மத்தியில் பாராளுமன்றம், மாநிலங்களில் சட்டமன்றங்கள் தனியாக செயல்படுகின்றன. ஆனால், பாராளுமன்ற முறையை கொண்டுள்ள நாடுகளில் தேசிய அளவில் பிரதம அமைச்சரும் மாநில அளவில் மாநில முதலமைச்சரும் முக்கிய நிலையை வகிக்கிறார்கள்.
விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை கொண்ட நாடுகளில் தேர்தலின் போது மக்கள் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள். தேர்தலின் போது ஒவ்வொரு கட்சியும் அந்தந்த கட்சிகளின் வேட்பாளர் பட்டியலை ஒன்று முதல் மொத்த தொகுதி எண்ணிக்கை வரை வெளியிட வேண்டும். ஒவ்வொரு கட்சியும் பெறக்கூடிய வாக்கு சதவீதத்துக்கு ஏற்ப ஒவ்வொரு கட்சிக்கும் பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் உறுப்பினர்கள் எண்ணிக்கை வழங்கப்படுகிறது. எத்தனை பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த கட்சிக்கு வழங்கப்பட வேண்டுமோ அத்தனை உறுப்பினர்களுக்கான பதவி வேட்பாளர் பட்டியலில் உள்ள முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இத்தகைய அரசாங்க முறைக்கு சுவிட்சர்லாந்து அரசியலமைப்பு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.
இந்தியா பல மொழிகளை பேசும் மக்களையும் பிராந்தியங்களையும் உள்ளடக்கி இருப்பதாலும் பல கலாச்சாரங்களை பின்பற்றும் சூழல் உள்ளதாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை உயர்த்தி பிடிக்கும் நாடாக விளங்குவதாலும் இந்தியாவிற்கு பாராளுமன்ற முறையிலான அரசாங்கம் சரியானது என இந்திய அரசியல் நிர்ணய சபை இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் போது முடிவு செய்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் விளங்கும் மாநில கலாச்சாரத்திற்கும் மொழிகளுக்கும் ஏற்றவாறு மாநில அரசுகள் செயல்பட வேண்டிய நிலையில் மாநில அரசுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் பாராளுமன்ற முறை இந்தியாவுக்கு ஏற்புடையது என்று கருதப்படுகிறது.
உலகில் பல நாடுகளில் ஒற்றை ஆட்சி முறையும் பல நாடுகளில் கூட்டாட்சி முறையும் பின்பற்றப்படுகிறது. ஒற்றையாட்சி முறையில் தேசிய அரசாங்கம் அதிக அதிகாரங்களை கொண்டு விளங்கும். மாநிலங்களுக்கு மிகக் குறைந்த அதிகாரங்களை வழங்கப்பட்டு இருக்கும். கூட்டாட்சி முறையில் தேசிய அரசாங்கம் எந்தெந்த துறைகளில் சட்டம் இயற்றலாம் என்ற பட்டியலும் மாநில அரசாங்கங்கள் எந்தெந்த துறைகளில் சட்டம் இயற்றலாம் என்ற பட்டியலும் இரண்டு அரசுகளும் எந்தெந்த துறைகளில் சட்டம் இயற்றலாம் என்ற பொது பட்டியலும் இருக்கும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் கூட்டாட்சி முறைக்கு சிறந்த உதாரணங்களாகவும் பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஒற்றை ஆட்சி முறைக்கு சிறந்த உதாரணங்களாகவும் திகழ்கின்றன. இந்தியாவின் தன்மைக்கு ஏற்றவாறு கூட்டாட்சி முறையை சரியானது என்று இந்திய அரசியல் நிர்ணய சபை முடிவு செய்து அரசியலமைப்பு இயற்றப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது அரசியலமைப்பின் ஏழாம் அட்டவணையில் 97 துறைகள் (subjects) அடங்கிய மத்திய அரசின் அதிகார பட்டியல் (Central list), 66 துறைகள் அடங்கிய மாநில அரசின் அதிகார பட்டியல் (State list) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் பொது பட்டியலில் (Concurrent list) கண்டுள்ள 47 துறைகள் குறித்த சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இயற்றலாம். மத்திய, மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட அதிகார பட்டியலில் உள்ள துறை தொடர்பான சட்டங்களை மட்டுமே இயற்ற முடியும். இந்திய அரசியலமைப்பு வழங்கிய பாராளுமன்ற முறையிலான கூட்டாட்சி அரசாங்க முறை தற்போது படிப்படியாக மாற்றம் பெற்று அதிபர் முறையிலான ஆட்சியை, ஒற்றையாட்சி வடிவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டிய தருணம் இதுவாகும்
(தொடரும்)
Good Information Thank You