spot_img
December 5, 2024, 12:47 am
spot_img

வாகன உரிமையாளர் விபத்து காப்பீட்டை பெற (பெர்சனல் ஆக்சிடென்ட் கவரேஜ்இன்சூரன்ஸ்) நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவு

இரு சக்கர வாகனங்கள் முதல் அனைத்து வகையான வாகனங்களுக்கும் வாகனத்தை ஓட்டும் போது விபத்து ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகும் போது இழப்பீட்டை  வாகன உரிமையாளர்கள் வழங்குவதற்கு பதிலாக இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் பிரிமிய தொகை செலுத்தி இன்சூரன்ஸ் பாலிசியை பெறுவதால் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையை வழங்குகின்றன. 

தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ்

வாகன உரிமையாளர் அல்லது அவரது ஓட்டுநர் ஒட்டி செல்லும் போது ஒரு மோட்டார் வாகன    விபத்து ஏற்பட்டு வாகன உரிமையாளர் அல்லது ஓட்டுநர் அல்லாத மூன்றாம் நபருக்கு பாதிப்பு ஏற்பட்டு அவர் மருத்துவ சிகிச்சை பெற நேரிட்டாலோ அல்லது அவர் இறந்து விட்டாலோ இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மூன்றாம் நபருக்கு இழப்பீடு வழங்குவதை தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் (Third Party Insurance) என அழைக்கிறோம்.

வாகன விபத்தில் பாதிக்கப்படும் நபர்கள் அல்லது வாகன விபத்தில் இறந்தவரின் வாரிசுகள் இழப்பீட்டுத் தொகையை கேட்டு விபத்தை ஏற்படுத்திய   வாகனம் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ள நிறுவனத்திற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீட்டு விண்ணப்பத்தை நிராகரித்தாலோ அல்லது குறைந்த அளவிலான இழப்பீட்டுத் தொகையை வழங்கினாலோ, விபத்தால் பாதிக்கப்பட்டவர் அல்லது விபத்தால் இறந்தவரின் வாரிசுகள் வாகன விபத்து தீர்ப்பாய நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். 

விபத்தை ஏற்படுத்திய வாகனத்துக்கு இன்சூரன்ஸ் இல்லாவிட்டால் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டியது வாகன உரிமையாளரின் கடமையாகும். இதனால் எந்த ஒரு வாகனத்தை வைத்திருப்பவரும் இன்சூரன்ஸ் பாலிசியை பெறாமல் வாகனத்தை இயக்கக் கூடாது. 

பர்சனல் ஆக்சிடென்ட்

ஒரு வாகனத்தின் உரிமையாளர் அவரே அந்த வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது விபத்து ஏற்பட்டால் விபத்தில் பாதிக்கும் மூன்றாம் மனிதர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீட்டை வழங்குகின்றன. ஆனால், வாகனத்தை ஓட்டும் வாகனத்தின்   உரிமையாளர் விபத்தில் பாதிக்கப்பட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ எவ்வித இழப்பீட்டுத் தொகையும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்குவதில்லை என்ற நிலையே சில காலங்களுக்கு முன்பு இருந்து வந்தது. 

வாகன உரிமையாளர் வாகனத்தை ஓட்டும் போது வாகன விபத்தில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பர்சனல் ஆக்சிடென்ட் கவரேஜ் பாலிசிகளை அறிமுகப்படுத்தினார். இந்த பாலிசியில் பாதிக்கப்படுபவருக்கு ஏற்படும் ஊனத்திற்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படுகிறது. விபத்தில் வாகன உரிமையாளர் இறந்துவிட்டால் ரூபாய் 15 லட்சம் வரை சுய விபத்து காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது. இத்தகைய பர்சனல் ஆக்சிடென்ட் பாலிசியை வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசி வழங்கும்போது வழங்கப்பட வேண்டும் என்பதை சில ஆண்டுகளுக்கு முன்பு ஐ ஆர் டி ஏ எனப்படும் இந்திய இன்சுரன்ஸ் ஒழுங்குமுறை அமைப்பு கட்டாயம் ஆக்கியுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவு

கடந்த 2012 நவம்பர் 15 அன்று சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட சண்முகம் என்பவர் விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்கான மருத்துவ செலவு மற்றும் சிரமங்களுக்கான இழப்பீட்டை பர்சனல் ஆக்சிடென்ட் பாலிசி அடிப்படையில் பாலிசியை வழங்கியிருந்த டாட்டா ஏ.ஐ.ஜி. ஜெனரல் இன்சூரன்ஸ்   கம்பெனியிடம் இழப்பீடு வழங்குமாறு விண்ணப்பம் செய்துள்ளார்.   இன்சூரன்ஸ் கம்பெனி பணம் வழங்காததால் பாதிக்கப்பட்டவர் சேலம் மாவட்டத்தில் சங்ககிரியில் உள்ள மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் (சார்பு நீதிமன்றத்தில் – MCOP No: 404/2013)   ரூபாய் 5 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் கடந்த 2020 ஜூலை 06 அன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் வழக்கு தாக்கல் செய்த சண்முகத்துக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ 75,000/- இழப்பீடு வழங்குமாறு  தீர்ப்பு வழங்கியுள்ளது.   சங்ககிரி சார்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டை (CMA No: 1395/2021) தாக்கல் செய்திருந்தது. 

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேல்முறையீடு வழக்கில் கடந்த 2024 ஆகஸ்ட் 19 அன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வாகன விபத்துகளில் பாதிக்கப்படும் மூன்றாம் நபர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான பிரச்சனைகளை மட்டுமே வாகன விபத்து காப்பீட்டு தீர்ப்பாயம் விசாரிக்க முடியும் என்றும் வாகன விபத்தில் வாகன உரிமையாளர் பாதிக்கப்பட்டால் அவரால் கேட்கப்படும் இழப்பீடு குறித்த பிரச்சினைகளை விசாரிக்க வாகன விபத்து காப்பீட்டு   தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் கீழ் நீதிமன்றத்தில் வைத்த வாதத்தை   கீழமை நீதிமன்றம் நிராகரித்துள்ளது தவறானதாகும். வாகன விபத்துகளில் வாகனத்தின் உரிமையாளர் பாதிக்கப்பட்டால் அவருக்கான இன்சூரன்ஸ் கோரிக்கைகளை நுகர்வோர் நீதிமன்றத்தில் மட்டுமே கேட்டு பெற முடியும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்