நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் வசித்து வருபவர் சிங்காரம் மகன் கணேசன், சென்னையில் உள்ள மகனுக்கு சைக்கிள் ஒன்றை சேலத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கும் கேபிஎன் பார்சல் நிறுவனத்தின் பரமத்தி வேலூர் கிளையில் கடந்த 2023 ஜூன் மாதத்தில் ஒப்படைத்து அதற்காக ரூ 520/- ஐ கட்டணமாக செலுத்தியுள்ளார்.
ஓரிரு நாளில் சைக்கிள் சென்னையில் உள்ள தங்கள் நிறுவன அலுவலகத்துக்கு சென்று விடும் என்றும் அங்கு சைக்கிளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் பார்சல் நிறுவனம் உறுதி அளித்திருந்த நிலையில் இரண்டு மாதங்கள் கடந்தும் சைக்கிளை பார்சல் நிறுவனம் வாக்குறுதி அளித்தபடி சென்னைக்கு கொண்டு சேர்க்கவில்லை. இதுகுறித்து பலமுறை சைக்கிளை அனுப்பியவர் கேட்டும் பரமத்தி வேலூர் கிளை அலுவலகத்திலும் பார்சல் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் முறையான பதில் சொல்லப்படவில்லை.
இதனால், சைக்கிளை பார்சலில் அனுப்பிய கணேசன் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் பார்சல் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகத்தின் மீது கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.
பார்சல் நிறுவனமும் அதன் கிளை அலுவலகமும் ஒப்படைக்கப்பட்ட சைக்கிளை உரிய இடத்தில் வாக்குறுதி அளித்தபடி வழங்காததால் சேவை குறைபாடு புரிந்துள்ளனர் என்றும் இத்தகைய சேவை குறைபாட்டால் வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஏற்பட்ட இழப்பு, மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூபாய் ஒரு லட்சத்தை நான்கு வாரங்களுக்குள் பார்சல் நிறுவனமும் கிளை அலுவலகமும் வழங்க வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.