அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நிர்ஜுலி என்ற கிராமத்தில் வசிக்கும் டகாம் ஜேம்ஸ் என்பவர் கடந்த 2013 ஜூலை எட்டாம் தேதி வாகன விபத்துக்கு உள்ளாகி உள்ளார். நஹர்லகுனில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அவர் எடுத்துச் செல்லப்பட்டு முதலுதவி (first aid) வழங்கப்பட்டுள்ளது. மறுநாள், அசாம் தலைநகரான கௌஹத்திக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஜி என் ஆர் சி மருத்துவமனையில் மேற்சிகிச்சைக்காக (further treatment) அனுமதிக்கப்பட்டு சுமார் 20 நாட்கள் அந்த மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த பின்னர் விபத்துக்கு உள்ளானவருக்கு உணவு குழாயிலும் (food pipe) பேசுவதற்கான உறுப்புகளிலும் (vocal organs) பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரது உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்த போது முன்பு அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவமனையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் தவறு நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்துக்கு உள்ளானவருக்கு ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய மருத்துவ உதவியோடு அவரை அழைத்துக் கொண்டு, அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து சுமார் 3000 கிலோமீட்டர் தொலைவில் தமிழ்நாட்டில் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவமனையில் அவரை அவரது உறவினர்கள் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்கள். கௌகாத்தியில் சிகிச்சை வழங்கிய மருத்துவமனை கவனக்குறைவான மருத்துவ சிகிச்சையை வழங்கி உணவு குழாய் மற்றும் பேச்சுக் குழாய் ஆகியவற்றின் சேதத்தை ஏற்படுத்தி விட்டதால்தான் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக வேலூர் மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.
கௌஹாத்தி ஜி என் ஆர் சி மருத்துவமனை புரிந்த கவனக்குறைவான சிகிச்சையால் (medical negligence) ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு நிவாரணமாக ரூபாய் 12 கோடி 40 லட்சத்தை கேட்டு மருத்துவமனை மீது கடந்த 2014 ஆம் ஆண்டு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் விபத்துக்கு உள்ளானவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். (Consumer Complaint No. 581 of 2014). கடந்த 2025 ஏப்ரல் 30 அன்று இந்த வழக்கில் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (National Consumer Disputes Redressal Commission) தீர்ப்பு வழங்கியுள்ளது. மருத்துவமனை கவனக்குறைவாக சிகிச்சை வழங்கியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதால் வழக்கு தாக்கல் செய்தவருக்கு இழப்பீடாக ரூபாய் 20 லட்சமும் வழக்கின் செலவு தொகையாக ரூபாய் 50 ஆயிரமும் மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டும் என்று இந்த தீர்ப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை மீதான வழக்கு தள்ளுபடி
புதுடில்லியில் பாலம் காலணியில் சந்தீப் நகரில் வசிக்கும் ஸ்ரீ ஹுகம் சந்த்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு புது தில்லியில் உள்ள ராக்லேன்ட் மருத்துவமனையில் (Rockland hospital) கடந்த 2016 ஆம் ஆண்டு இரண்டு முறை அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால் தனது தந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை மீது இறந்தவரின் மகன் சந்திப் குமார் புது தில்லி மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் (State Consumer Commission) கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார் (Consumer Complaint No. 807 of 2017). இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை சார்பில் சரியான மருத்துவ நடைமுறைகள் (standard medical protocol) பின்பற்றப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் (medical experts) நுகர்வோர் நீதிமன்றத்தில் சாட்சியும் அளித்தனர். அதனை சுட்டிக்காட்டி இறந்தவரின் மகன் தாக்கல் செய்த வழக்கை புது தில்லி மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் கடந்த 2025 ஏப்ரல் 28 அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: மருத்துவ சிகிச்சையில் கவனக்குறைவை நிரூபிக்க எளிதான நடைமுறைகள் தேவை.