பெங்களூர் எம். எஸ். நகரில் வசிக்கும் கே. எஸ். விஜயகுமார் என்பவர் தமது மகன் பாலாஜிக்கு தகுந்த மணமகளை திருமணத்துக்காக தேடி வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூர் கல்யாண் நகரில் அலுவலகம் வைத்துள்ள டில்மில் மேட்ரிமோனி போர்டல் என்ற திருமண தகவல் அலுவலகத்தை பற்றி விளம்பரம் மூலம் அறிந்துள்ளார்.
கடந்த 2024 மார்ச் 17ஆம் தேதி அன்று விஜயகுமார் டில்மில் மேட்ரிமோனி போர்டல் திருமண தகவல் அலுவலகத்திற்கு சென்று தனது மகனின் புகைப்படம் மற்றும் இதர விவரங்கள் குறித்த ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். 45 நாட்களில் தகுந்த மணமகள் ஒருவரை அடையாளம் கண்டு தருவதாக திருமண திருமண தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனை நம்பி அவர்கள் கேட்டபடி ரூ 30,000/- ஐ அன்றே விஜயகுமார் செலுத்தியுள்ளார்.
மகனுக்கு வரனை அடையாளம் காண்பதற்காக பலமுறை விஜயகுமார் தான் பணம் செலுத்திய திருமண தகவல் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். ஆனால், எந்த ஒரு வரன் குறித்த தகவலையும் அவர்கள் விஜயகுமாருக்கு வழங்கவில்லை. மேலும், பணத்தை பெற்ற பிறகு போதுமான மதிப்பை (no hospitality) வாடிக்கையாளருக்கு கொடுத்து தகுந்த பதிலையும் (no proper response) தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 2024, ஏப்ரல், 30 அன்று திருமண தகவல் அலுவலகத்திற்கு விஜயகுமார் சென்று எவ்வித வரன் குறித்த தகவலையும் வழங்காததால் தான் செலுத்திய பணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார் ஆனால் அங்கிருந்த பணியாளர்கள் அவரை அவதூறாக பேசியுள்ளார்கள். இதனால், அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் கடந்த 2024, மே, 9 அன்று என்று திருமண தகவல் அலுவலகத்திற்கு சட்ட அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட எவ்விதப் பதிலையும் திருமண தகவல் அலுவலகம் வழங்கவில்லை. இதனால், வேறு வழி இன்றி டில்மில் மேட்ரிமோனி போர்டல் என்ற திருமண தகவல் அலுவலகம் மீது பெங்களூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் விஜயகுமார் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் கடந்த 2024 அக்டோபர் 28 அன்று பெங்களூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்குத் தாக்கல் செய்தவரின் மகனுக்கு தகுந்த வரனை 45 நாட்களுக்குள் அடையாளம் காண்பதாக வாக்குறுதி அளித்த திருமண தகவல் அலுவலகத்தினர் எந்த ஒரு வரனின் தகவலையும் 45 நாட்களுக்குள் வழங்கவில்லை என்பதும் இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்தவர் அலுவலகத்துக்குச் சென்று கேட்டபோது அவதூறாக நடத்தப்பட்டுள்ளார் என்பதும் விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்மில் மேட்ரிமோனி போர்டல் திருமண தகவல் அலுவலகம் சேவை குறைபாடு (deficiency in the service) புரிந்துள்ளதோடு நியாயமற்ற வர்த்தக நடைமுறையையும் (unfair trade practice) மேற்கொண்டுள்ளனர் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு தாக்கல் செய்தவர் செலுத்திய ரூ 30,000/-, திருமண தகவல் அலுவலகத்தின் சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ 20,000/-, வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ 5,000/- மற்றும் வழக்கின் செலவு தொகையாக ரூ 5,000/- ஆக மொத்தம் ரூ 60,000/- ஐ டில்மில் மேட்ரிமோனி போர்டல் திருமண தகவல் அலுவலகம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதே போலவே கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் ஒரு தனியார் திருமண தகவல் மையம் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் இந்திராணி என்பவர் தமது மகனுக்கு தகுந்த மணமகளை அடையாளம் கண்டு தருவதற்காக ஒரு தனியார் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இணையதள விதிமுறைகளின்படி சேவை கட்டணமாக ரூ 3,766/- செலுத்தியுள்ளார். பணத்தை செலுத்துவதற்கு முன்னர் எத்தகைய விதிமுறைகளையும் தெரிவிக்காத திருமண தகவல் இணையதள நிர்வாகம், பணத்தை செலுத்திய பின்னர் இந்திராணியின் மகனுக்கு 33 வயது என்பதால் விவாகரத்து பெற்ற அல்லது விதவை பெண்கள் தான் மணமகளாக கிடைப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.
இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் தாம் செலுத்திய பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். பலமுறை கேட்ட பின்னர் திருமண தகவல் இணையதள நிர்வாகம் அவருக்கு செலுத்திய பணத்தை காசோலை மூலமாக வழங்கியுள்ளது. அந்தக் காசோலையை வசூலுக்கு தாக்கல் செய்ததில் காசோலைக்குரிய பணத்தை வழங்காமல் வங்கி அதனை திருப்பி அனுப்பி விட்டது. இதனால், இந்திராணி தனியார் இணையதள தகவல் திருமண தகவல் நிர்வாகம் மீது திருப்பூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. புகார் நிரூபிக்கப்பட்டுள்ளதால் வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ 10,000/- ஐ இழப்பீடாக வழங்கவும் சேவை கட்டணமாக செலுத்திய ரூ 3,766/- ஐ வட்டியுடன் திரும்ப வழங்கவும் தனியார் இணையதள திருமண தகவல் நிர்வாகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
.