நாமக்கல் நல்லிபாளையத்தில் வசிக்கும் சிவகாமியின் கணவர் பெரியசாமி கடந்த 2021 ஜனவரி மாதத்தில் இறந்து விட்டார். அவருக்கு வழங்க வேண்டிய இன்சூரன்ஸ் பணத்தை தராததால் சிவகாமி நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு (bench) கடந்த ஜூன் மாதத்தில் வழங்கிய தீர்ப்பில் இயற்கையான மரணத்தை தற்கொலை எனக்கூறி இன்சூரன்ஸ் பணத்தை வழங்க மறுப்பது சேவை குறைபாடு என்று தெரிவித்துள்ளது.
தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூபாய் 50 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் பாலிசியை 2021 ஜனவரி மாதத்தில் பெரியசாமி பிரிமிய தொகையை செலுத்தி பாலிசியை பெற்றுள்ளார். பாலிசி எடுத்து 10 நாளில் அவர் குளியல் அறையில் வழுக்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். அவர் நாமக்கல்லிலும் கோயம்புத்தூரிலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நிலை முன்னேற்றம் இல்லாத காரணத்தால் நாமக்கல்லில் அரசு மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்ட நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார்.
பாலிசி எடுத்தவர் இறந்த பின்னர் அவரது மனைவி பாலிசி தொகை ரூபாய் 50 லட்சத்தை தமக்கு வழங்குமாறு இன்சூரன்ஸ் கம்பெனியில் விண்ணப்பம் செய்துள்ளார். பெரியசாமிக்கு விபத்து ஏற்பட்டவுடன் மருத்துவமனையில் சேர்க்கும் போது காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்ததால் அவரது மனைவி புகார் கொடுத்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரியசாமி தற்கொலை செய்து கொண்டதாக இன்சூரன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பாலிசி எடுத்து ஓராண்டுக்குள் தற்கொலை செய்து கொண்டால் இன்சூரன்ஸ் தொகை வழங்க முடியாது என்று நிபந்தனை இருப்பதாக கூறி பணம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்து விட்டது.
காவல்துறையினர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை (final report) தாக்கல் செய்து இறந்து போனவரின் மரணம் இயற்கையானது என்று தெரிவித்துள்ளதாலும் தடயவியல் அறிக்கையில் (forensics Report) இறந்து போனவரின் வயிற்றில் இருந்த உணவுப் பொருட்களில் விஷம் அல்லது ரசாயனம் (poison or chemical) எதுவும் இல்லை என தெரிவித்துள்ளதாலும் அரசு மருத்துவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு இறப்பிற்கு காரணம் என்று தெரிவித்துள்ளதாலும் பெரிய சாமியின் இறப்பு இயற்கையானது என்று நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
தங்கள் விசாரணையில் பெரியசாமி தற்கொலை செய்து கொண்டார் என்று நீதிமன்றத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்ததற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்பதால் இன்சூரன்ஸ் நிறுவனம் பெரியசாமியின் பாலிசி தொகை ரூபாய் 50 லட்சம் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடு ரூபாய் 2 லட்சம் ஆகியவற்றை நான்கு வார காலத்திற்குள் அவரது மனைவிக்கு வழங்க வேண்டும் என்றும் தவறினால் நான்கு வாரம் முடிவுற்ற நாளிலிருந்து பணம் வழங்கப்படும் நாள் வரை 52 லட்சத்துக்கு ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.