அனுப்புநர் பெயர்ல… என் எதிரியோட பெயரை போட்டு வச்சேன்
என்னோட கேஸ்ல தீர்ப்பு கொடுக்க போற ஜட்ஜோட பெயர் என்ன சார்?’ கேள்வி கேட்ட ஆனந்தனை வியப்பாய் பார்த்தார் வக்கீல் ராமமூர்த்தி. ‘ஜட்ஜோட பெயர் உனக்கு எதுக்கு?’ எதிர் கேள்வி கேட்ட வக்கீலிடம் நிதானமாக பதில் சொன்னான் ஆனந்தன், ‘என்கிட்ட ரொம்ப பழமையான 20 பாட்டில் ஒயின் இருக்கு. ரேர் பீஸ். யாருக்கும் அவ்வளவு ஈஸியா கிடைச்சுராது. அதை அவருக்கு பரிசா அனுப்பி வைக்கணும்’
காதுகளுக்குள் தேள் கொட்டியது போல் அதிர்ந்தார் வக்கீல். அவசர அவசரமாக ஆனந்தனிடம் கேட்டார், ‘அவருக்கு எதுக்கு அதை அனுப்பி வைக்கப் போற..?’ ‘எதுக்கா..? என்ன சார் நீங்க..! இது கூட தெரியாம இருக்கீங்க. நாம ஏதாச்சும் பரிசு கொடுத்தாதான நமக்கு சாதகமா தீர்ப்பு கொடுப்பாரு’ பதறிப் போய் எழுந்தார் வக்கீல். உதறலான குரலோடு பேசினார், ‘அப்படி எதுவும் செஞ்சு தொலைச்சிடாத. இப்போ இருக்கிற ஜட்ஜ் ரொம்ப நேர்மையானவர். குறுக்கு வழியில் தீர்ப்பை நீ வாங்கப் போறேன்னு தெரிஞ்சா உனக்கு எதிரா தீர்ப்பு கொடுத்துடுவார். ஏற்கனவே வழக்கு நமக்கு சாதகமான சூழ்நிலையில் இல்லை. வழக்கில் ஜெயிக்கிறதுக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன். அப்புறம் இத்தனை நாள் நான் பட்ட பாடெல்லாம் வீணாகிப் போயிரும்’
அலட்டிக் கொள்ளாமல் சொன்னான் ஆனந்தன், ‘நீங்க சொல்லலைன்னா போங்க சார். நான் எப்படியாச்சும் அவர் பெயரை தெரிஞ்சுக்கிட்டு பரிசை அனுப்பி வைக்கிறேன்’ கிளம்பிப் போனான் ஆனந்தன். அடுத்தடுத்த வேலைகளில் இந்த சம்பவத்தை வக்கீல் ராமமூர்த்தி மறந்து போனார். தீர்ப்பு நாள் வந்தது. ஆனந்தனுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கினார் நீதிபதி. நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த வக்கீலை கட்டிப்பிடித்து சந்தோஷத்தோடு சொன்னான் ஆனந்தன்,
‘அன்னைக்கு என்னமோ பயந்தீங்களே சார். நான் கஷ்டப்பட்டு நீதிபதியோட பெயரை கண்டுபிடிச்சு அந்த நீதிபதிக்கு அனுப்பி வச்ச 20 பாட்டில் ஒயின் எவ்வளவு பெரிய வெற்றியை தேடி தந்திருக்கு பார்த்தீங்களா..?’ வக்கீலால் நம்ப முடியவில்லை. மிகவும் நேர்மையானவர் என ஊரெல்லாம் புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த நீதிபதியா லஞ்சம் வாங்கினார் ..? எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்பது தெரியாது எனச் சொல்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. இந்த உலகில் யாரை நம்புவது என்று தெரியவில்லையே..!
‘நீதிபதிக்கு பரிசு அனுப்பாதேன்னு நான் சொன்ன பிறகுமா நீ அனுப்பி வச்ச ஆனந்தா..?’ குழப்பமாய் கேட்டார் வக்கீல். குழப்பம் இல்லாமல் பதில் சொன்னான் ஆனந்தன், ‘ஆமா சார்..! சாமி சத்தியமா அவருக்கு 20 பாட்டில் ஒயின் பரிசா அனுப்பி வச்சேன். அனுப்பி வச்ச கொரியர் பில் இந்தா இருக்கு பாருங்க. ஆனா அனுப்புநர் பெயர்ல… என் எதிரியோட பெயரை போட்டு வச்சேன்…