கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம், கொம்பநாடு அஞ்சல், கருகாபில்லியில் வசித்து வருபவர் டேவிட் மகன் சி.டி.ஜாய். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் கேரள அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், கடந்த 2024 ஜனவரி 7ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவிக்கு அழைத்துச் சென்றதில், உடனடியாக அவசர சிகிச்சையை சிறப்பு மருத்துவ வசதி உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வழங்க வேண்டும் என்று அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கொச்சியில் உள்ள ராஜகிரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜாய் அங்கு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார் சிகிச்சைக்காக அவர் ரூ.2,16,000/- ஐ செலவிட்டுள்ளார். இந்தத் தொகையை வழங்குமாறு ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கை விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்தபோது இன்சூரன்ஸ் நிறுவனம் கோரிக்கை விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது. இதனால், தமக்கு ஏற்பட்ட மருத்துவ சிகிச்சைக்கு உரிய பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்(DC/555/CC/505/2024).
அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஏற்படும் குறைகளை தீர்ப்பதற்காக குறைதீர் அமைப்பு (Medisep Grievance Redressal mechanism) ஒன்றை கேரளா அரசு ஏற்படுத்தியுள்ளது என்றும் வழக்கு தாக்கல் செய்துள்ளவர் அந்த அமைப்பை அணுக வேண்டும் என்றும் அதற்கு முன்னதாக நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக முடியாது என்றும் இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிக்க நுகர்வோர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் இடைக்கால மனு ஒன்றை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ளது (I.A.No.1146/2024).
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 100 -ல் “தற்போது நடைமுறையில் உள்ள வேறு எந்தச் சட்டத்தின் விதிகளையும் மீறுவதாக இல்லாமல் கூடுதலாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இருப்பதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜாய் தாக்கல் செய்துள்ள வழக்கை விசாரிக்க நுகர்வோர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என கூறி இன்சூரன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நுகர்வோர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கேரளா மாநில நுகர்வோர் ஆணையத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது (Revision Petition No. SC/32/RP/14/2025). இதனை விசாரித்த கேரள மாநில நுகர்வோர் ஆணையம் கடந்த 10 ஜூன் 2025 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது கடந்த 10 ஜூன் 2025 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 100-ன்படி ஜாய் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தனித்துவமான சட்ட ஏற்பாடு இல்லாத நிலையில் நுகர்வோர் நீதிமன்றம் இத்தகைய பிரச்சனைகளை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்றும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை பொறுத்தவரை அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு வழங்குவது ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகும். இந்தத் திட்டத்திற்கு விதால் மருத்துவ காப்பீட்டு நிறுவனம் என்ற அமைப்பு மூன்றாம் தரப்பாக இருந்து நிர்வாக ஏற்பாடுகளை செய்துள்ளது (Vidal Health Insurance, Third Party Administrative Services). தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை வழங்குவது ஒரு இன்சூரன்ஸ் நிறுவனமாகவும் நிர்வாக ஏற்பாட்டை கவனிப்பது மூன்றாம் தரப்பு நிறுவனம் ஒன்றாகவும் உள்ளது.
தமிழகத்திலும் மருத்துவ அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பிரச்சினை ஏற்படும் போது முதலாவதாக மாவட்ட அளவிலான குறை தீர்ப்பு குழுவை (District level committee) அரசு ஊழியர்கள் அணுகலாம். இந்தக் குழுவின் முடிவில் திருப்தி இல்லை எனில் மாநில அளவிலான குறை தீர்ப்பு குழுவை குழுவில் (State level committee) மேல்முறையீடு செய்யலாம். இந்தக் குழுவில் இந்த குழுவானது நிரந்தரமானது அல்ல. இதில் உள்ளவர்கள் வேறு அரசு பணிகளை கவனிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். பொதுவாக, இந்த குழுவில் மருத்துவ துறையின் ஒரு இணை இயக்குனரும் மாவட்ட கருவூல அலுவலரும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதியும் இருப்பார்கள். இந்த குழு குறிப்பிட்ட இடைவெளிகளில் கூட வேண்டும் என்ற விதிகள் எதுவும் கிடையாது. இந்த குழுவுக்கு ஒரு சட்டபூர்வமான ஏற்பாடு முழுமையாக இல்லை எனலாம். இதனால் தமிழகத்திலும் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ள அரசு ஊழியர்கள் இந்த குழுவின் மூலம் நிவாரணம் தேடுவது சிரமமாக உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மாநில அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ள அரசு ஊழியர்கள் மற்றும் முன்னாள் அரசு ஊழியர்களுக்கு கேரள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்பு உதவியானதாக இருக்கும் என்று அரசு ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த பலர் தெரிவிக்கின்றனர்.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பயன்கள் அவர்களுக்கு முறையாக சேர வேண்டும் என்பதே திட்டத்தை உருவாக்கிய அரசின் எண்ணம் ஆகும். இதில் ஏற்படும் தடைகளை நீக்கி தர வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது.