spot_img
January 28, 2025, 7:38 am
spot_img

தங்கத்தைப் பற்றிய தெரிந்த மற்றும் தெரியாத உண்மைகளையும் ஏமாற்று வர்த்தக   நடைமுறைகளையும் அறிந்து கொள்ளுங்கள்!  (பகுதி -1)

சரித்திரம்

அழகில் கண்ணை கவரும் விலையில் விண்ணை முட்டும் தங்கம் எப்போது? யாரால்? கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கு துல்லியமான பதில்களை இதுவரை சரித்திர ஆய்வாளர்கள் கண்டறியவில்லை.  இருப்பினும், எகிப்தில் கி.மு. 450 ஆம் ஆண்டில் (அதாவது 2474 ஆண்டுகளுக்கு முன்பு) எகிப்தியர் ஒருவர் சுரங்கம் தோண்டிக் கொண்டிருந்த போது தங்கம் கிடைத்ததாக கூறப்படுகிறது.   இருப்பினும் இவ்வாறு கிடைத்த தங்கம் எகிப்தியர்களுடையது அல்ல என்றும் கி.மு. எட்டாம் நூற்றாண்டில்,  அதாவது 2874 ஆண்டுகளுக்கு முன்பு, துருக்கியில் பயன்படுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. 

சீனர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தங்க சுரங்கத்தில் தங்க உற்பத்தி தொழிலை மேற்கொண்டதாக தெரிகிறது. இருப்பினும், அமெரிக்காவைப் பொறுத்தவரை கடந்த 1848 -ல்தான் தங்கம் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்தியாவைப் பொறுத்தவரை சிந்து நதிக்கரையின் ஹரோப்பா மற்றும் மொகஞ்சதாரோ  அகழ்வாய்வில் கி.மு. 2600- 1900 ஆம் ஆண்டுகளில் தங்க நகைகளின் பயன்பாடு இருந்ததாக தெரியவந்துள்ளது.  தமிழகத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த தமிழ் காப்பியமான சிலப்பதிகாரம் விலையுயர்ந்த தங்க நகைகளை பற்றி விவரித்துள்ளது.  

தொடக்க காலத்தில் பெரும்பாலும் தங்கம் பணத்தைப் போல பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது பணத்தை கொடுத்து பொருளை வாங்குவது போல தங்கத்தை கொடுத்து தேவையானவற்றை வாங்குவது நடைமுறையில் இருந்த ஆதிகாலத்தில் மிகவும் அரிதாகவே தங்கத்தில் ஆபரணங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

தங்கச் சுரங்கம்

முதலில் தங்கம் நிலத்தடியில் இருக்கிறதா? என்று  துளையிடுதல் மூலம் ஆராயப்பட்டு சரி பார்க்கப்படுகிறது. துளையிடுதல் நிரப்புதல் (infill drilling) என்ற முறையில் தங்கம் கண்டு பிடிக்கப்பட்ட நிலப்பகுதியில் தொடர்ந்து இருக்கிறதா? என்று ஆய்வு செய்யப்படுகிறது.  தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் திறந்த குழி சுரங்கம் (open pit mining) தோண்டப்பட்டு அதற்குப் பிறகு நிலத்தடி சுரங்கம் (underground mining) கட்டமைக்கப்பட்டு தங்கத்தை எடுக்கும் பணிகள் தொடங்குகின்றன.

தங்க  உற்பத்தி 

அதிக தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் சீனாவும் (ஆண்டொன்றுக்கு 383 டன் – ஒரு மெட்ரிக் டன் = 1000 கிலோ கிராம் எடை) இரண்டாம் இடத்தில் ரஷ்யாவும் (331 டன்) மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியாவும் (327 டன்)  நான்காம் இடத்தில் அமெரிக்காவும் (190 டன்)  ஐந்தாம் இடத்தில் கனடாவும் (170 டன்)  உள்ளன.  

தங்க உற்பத்தியில் ஆறாம் இடத்தில் ஆப்பிரிக்க நாடான கானாவும் (138 டன்)  ஏழாம் இடத்தில் பிரேசிலும் (107 டன்)  எட்டாம் இடத்தில் உஸ்பெகிஸ்தானும்  (101 டன்) ஒன்பதாம் இடத்தில் மெக்சிகோவும் 101 டன்)  பத்தாம் இடத்தில் இந்தோனேசியாவும் (100 டன்) உள்ளன.

தங்க விற்பனை

கடந்த 2019 ஆம் ஆண்டு தங்க ஆபரணங்களையும் தங்க காசுகளையும் அதிகம் வாங்கிய மக்கள் உள்ள நாடுகள் வரிசையில் இந்தியா (136 டன்)   முதலாம் இடத்தையும், சைனா (132 டன்)   இரண்டாம் இடத்தையும், அமெரிக்கா (USA) (34 டன்)    மூன்றாம் இடத்தையும்,  ஐக்கிய அரபு நாடுகள் (UAE) (11 டன்)    நான்காம் இடத்தையும், இந்தோனேசியா (10.7 டன்)   ஐந்தாம் இடத்தையும், இங்கிலாந்து (10.3 டன்)  ஆறாம் இடத்தையும், ரஷ்யா (9.1 டன்)   ஏழாம் இடத்தையும், தென் கொரியா (8.8 டன்)  எட்டாம் இடத்தையும், ஈரான் (8.2 டன்)  ஒன்பதாம் இடத்தையும், இத்தாலி (8.1 டன்)  பத்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.

மற்றொரு அறிக்கையின்படி கடந்த 2022 ஆம் ஆண்டில் தங்க நுகர்வில் (consumption) முதலிடத்தில் இந்தியாவும் (600 டன்)    இரண்டாவது இடத்தில் சைனாவும் (571 டன்)   மூன்றாவது இடத்தில் கிழக்கு ஆசிய நாடுகளும் (190 டன்)   நான்காம் இடத்தில் அமெரிக்காவும்  (144 டன்)   ஐந்தாம் இடத்தில் ஐரோப்பாவும் (71 டன்)   ஆறாம் இடத்தில் துருக்கியும் (37 டன்)    ஏழாம் இடத்தில் இந்தோனேசியாவும் (28 டன்)   எட்டாம் இடத்தில் வியட்னாமும் (18 டன்)   ஒன்பதாம் இடத்தில் தென் கொரியாகவும்  (15 டன்)   பத்தாம் இடத்தில் ஜப்பானும் (15 டன்)   உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது? தங்க விற்பனையில் ஏமாற்று வர்த்தக முறைகள் எவை? என்பதை அடுத்த பகுதிகளில் விரைவில் காணலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்