அமைவிடம்
தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான வால்பாறை மலைத்தொடர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பொள்ளாச்சியில் இருந்து 65 கி.மீ., தூரத்திலும் கோயம்புத்தூரிலிருந்து 102 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. தேயிலை தோட்டங்கள் நிறைந்த, சுற்றுசுழல் மாசற்ற சூழலுடன், பசுமை போர்த்திய மலைகள் மற்றும் அழகிய காடுகளால் மிகுந்த செழிப்பாக உள்ள வால்பாறைக்கு பொள்ளாச்சியிலிருந்து காரில் பயணிக்க இரண்டு மணி நேரமாகும். வால்பாறையிலிருந்து 27 கி.மீ., தூரத்தில் கேரளா மாநில திருச்சூர் மாவட்டத்தின் மலக்கப்பாரா என்ற மலைவாசஸ்தலம் (hill station) உள்ளது.
சரித்திர பின்னணி
பூனாச்சிமலை என்பதே வால்பாறையின் ஆதிகால பெயராக இருந்துள்ளது. “பசுமையான காடுகள் வழியாக செல்லும் பாதைகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக அலைமோதும் – சில காடர் பழங்குடிகள் மட்டுமே வசிக்கின்றனர்” என வால்பாறை குறித்து ஆங்கிலேயர்களின் 1850-களுக்கு முந்தைய குறிப்புகளில் இடம்பெற்றுள்ளது. 1846-ல் ராமசாமி முதலியார் என்பவர் வால்பாறையில் முதன் முதலில் காபியைப் பயிரிட்டுள்ளார். அதன்பின் 1864-ல் கர்நாடிக் காபி கம்பெனி அப்போதைய சென்னை அரசிடம் வால்பாறை மலைத்தொடரில் விவசாயத்துக்கு ஏக்கருக்கு ரூ.5 செலுத்தி பெரும் நிலப்பரப்பை வாங்கியுள்ளது. ஆனால், காபி விவசாயத்தில் வெற்றி இயலாததால் சிறிது சிறிதாக நிலத்தை விற்று விட்டனர். 1890, 1898, 1904, 1911, 1927 ஆண்டுகளிலும் ஆங்கிலேய அரசாங்கம் பல நிறுவனங்களுக்கு தேயிலை தோட்டங்களுக்காக (tea estates) நிலத்தை விற்பனை செய்துள்ளது. இதன்பின் பல்வேறு தரப்பினர் தேயிலைச் செடிகளைப் பயிரிட்டு தோட்டங்களை உருவாக்கியுள்ளனர். தற்போது 56 தேயிலை தோட்டங்கள் (tea estates) வால்பாறை மலை தொடரில் உள்ளது.
மக்கள்
வால்பாறையில் 80 சதவீதம் தேயிலை தோட்டம், 10 சதவீதம் காபி தோட்டம், மீதமுள்ள 10 சதவீத பரப்பில் மிளகு, ஏலம் சாகுபடி உள்ளது. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை விவசாயம் நடைபெறுகிறது. இதனால் இங்கு வாழும் மக்கள் பெரும்பான்மையோர் தோட்டத் தொழிலாளிகள் ஆவார்கள். வால்பாறை மலைத்தொடர்களில் வாழும் பூர்வீக மலைவாழ் மக்கள் மலசர், மலை மலசர், ஏறாவலர், காதர், புலயர் மற்றும் முடுவர் என்ற வகையில் அழைக்கப்படுகிறார்கள். பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி போன்ற வட்டாரங்களில் உள்ள கிராம பகுதிகளில் இருந்து தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு சென்றவர்களும் வால்பாறை மலைத்தொடரில் வசித்து வருகிறார்கள். 13.64 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட வால்பாறை நகராட்சி எல்லைக்குள் மட்டும் கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 70,589 மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் 1,241 மக்கள் பூர்வீக மலைவாழ் மக்கள் ஆவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் சரணாலய பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டார்கள்.
இயற்கை
பொள்ளாச்சியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் சமவெளியில் பயணம் செய்த பின்னர் அழகிய ஆழியார் அணையில் இருந்து 40 கொண்டை ஊசி வளைவுகள் மூலம் சுமார் 40 கிலோ மீட்டர் வால்பாறைக்கு பயணம் செய்வது இயற்கை அழகை கண்டு களிக்கும் வரப் பிரசாதமாக அமையும். புலிகள் காப்பகம், பசுமை போர்த்திய மடிப்பு மடிப்பாக தேயிலை தோட்டங்கள், பள்ளத்தாக்குகள், வனப்பகுதி, நீர்வீழ்ச்சிகள், காட்சி முனைகள் (view points), பறந்து விரிந்த புல்வெளிகள், நீரோடைகள், தலையை உரசி செல்லும் மேகங்கள், நறுமணம் வீசும் காற்று, பறவை பிரியர்களின் விருப்பமான இடம், ஆங்காங்கே வரவேற்கும் வரையாடுகள் என இயற்கை அழகை தன்னகத்தை கொண்டதாக உள்ள வால்பாறை பூமியின் ஏழாவது சொர்க்கம் என அழைக்கப்படுகிறது.
சுற்றுலா
கோடை காலத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்வதை காட்டிலும் குறைவான செலவில் வால்பாறைக்கு சென்று வரலாம், இங்கு தனியார் தங்குமிடங்கள் சிலவும் அரசின் பொதுப்பணித்துறை, மின்சார வாரியம், வனத்துறையின் பயணியர் விடுதிகளும் உள்ளன.
காண வேண்டிய இடங்கள்
பொள்ளாச்சியில் இருந்து செல்லும்போது வன சோதனை சாவடிக்கும் முன்னதாக உங்களை வரவேற்பது ஆழியார் அணை. ஆழியார் அணையின் அழகை ரசிப்பதோடு அருகாமையில் வாழ்க வளமுடன் அமைப்பின் அறிவு திருக்கோயில் பரந்து விரிந்துள்ளது. ஆழியார் அணையிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் மூன்று பக்கங்களிலும் அடர்ந்த காடுகளாலும் மறுபுறம் குன்றாலும் சூழப்பட்ட 60 மீட்டர் உயரமுள்ள குரங்கு நீர்வீழ்ச்சி இயற்கையாக அமைந்துள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கண மக்கள் வந்து செல்கின்றனர்.
வால்பாறை நகரத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நல்ல முடி வியூ பாயிண்ட் வால்பாறையில் உள்ள சுற்றுலா இடங்களின் பட்டியலில் முதலாவதாக உள்ளது. தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரமான ஆணை முடி மலைத்தொடரை இங்கிருந்து காண முடிகிறது. வால்பாறை நகரத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சின்ன கல்லார் அருவி மகிழ்ச்சியூட்டும் இடமாகும். இந்த அருவி வனப் பகுதியில் அமைந்திருப்பதோடு இந்தியாவில் அதிக மழைப்பொழிவை தரும் மூன்றாவது இடமாக கருதப்படுகிறது. இதனால் இந்த பகுதியை தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என அழைக்கின்றனர்.
இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம் என அழைக்கப்படும் ஆனைமலை புலிகள் காப்பகம் மாநிலத்தின் மிகப்பெரிய சரணாலயமாகும். சுமார் 2000 வகையான தாவரங்கள் மற்றும் மூலிகைகளை கொண்ட இந்த பகுதியை தவறாமல் காண வேண்டும். ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதிக்குள் அமைந்துள்ள இயற்கை விரும்பிகளின் சொர்க்கம் புல்மலை. வால்பாறையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஹார்ன்பில் வியூ பாயிண்ட் அட்டகட்டி செக்போஸ்ட்க்கு எதிரே அமைந்துள்ளது. இங்கிருந்து ஆழியார் மற்றும் காடம்பாறை பவர் ஹவுஸ் ஆகிய காட்சிகளை காண முடிகிறது.
வால்பாறையில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது கூழாங்கல் நதிக்காட்சியாகும். ஆழமற்றதாக உள்ள இந்த நீரோடை தேயிலை தோட்டங்களின் மத்தியில் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. மலையின் அடிவாரத்தில் உள்ள ஆழியார் அணையைத் தவிர வால்பாறையைச் சுற்றிலும் ஏழு அணைகள் உள்ளன. வால்பாறையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அப்பர் சோலையார் அணை பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும். இது ஆசியாவின் இரண்டாவது பெரிய பாறை அணையாக கருதப்படுகிறது. பாசனம் மற்றும் மின்னுற்பத்திக்காகத் துவங்கப்பட்ட நீராறு அணை வால்பாறையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அடர்த்தியான காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.
வரும் கோடை காலத்தில் வால்பாறைக்கு சென்று வாருங்கள்!. இயற்கையின் அழகை ரசித்து பாருங்கள் !!.