spot_img
November 21, 2024, 3:46 pm
spot_img

தங்க வர்த்தகத்தில் ஏமாற்று வர்த்தக   நடைமுறைகளை  அறிந்து கொள்ளுங்கள்!   (இறுதி பகுதி)

கேரட்

‘காரடேஜ்’ என்பது மற்ற உலோகங்களுடன் கலந்த தங்கத்தின் தூய்மையை (purity) அளவிடுவதாகும். 24 காரட் என்பது மற்ற உலோகங்கள் இல்லாத சுத்தமான தங்கம். உதாரணமாக 18 கேரட் தங்கம் என்றால் 18 காரட் தங்கத்தில் 75 சதவீதம் தங்கம் மற்றும் 25 சதவீதம் மற்ற உலோகங்கள் உள்ளதாகும்.

பி. ஐ. எஸ். ஹால்மார்க்

ஹால்மார்க் என்பது விலைமதிப்பற்ற உலோக பொருட்களில் உள்ள தூய்மை தன்மையை (purity) துல்லியமாக நிர்ணயம் செய்யும் அதிகாரப்பூர்வமான பதிவாகும். உதாரணமாக, விற்பனை செய்யப்படும் தங்கத்தில் எவ்வளவு சதவீதம் தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது? என்பதை ஹால்மார்க் குறியீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த குறியீடு பல நாடுகளில் பயன்படுத்தப்படும் நிலையில் இந்தியாவின் தர நிர்ணய அமைப்பான பி. ஐ. எஸ். (Bureau of Indian Standards) நிறுவனத்தால் தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஹால்மார்க் குறியீடு வழங்கப்படுகிறது.  ஹால்மார்க்கிங் திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள், கலப்படத்திற்கு எதிராக பொதுமக்களைப் பாதுகாப்பதும், உற்பத்தியாளர்களை நேர்த்தியான சட்டத் தரங்களைப் பேணுவதைக் கட்டாயப்படுத்துவதும் ஆகும்.

916 தங்கம் என அழைக்கப்படும் 22 கேரட் தங்கம் இந்தியாவில் தங்க நகைகள் செய்வதற்கு பொதுவான தேர்வாகும். இந்த தங்கத்தில் 91.6 சதவீதம் தூய தங்கமும் 8.4 சதவீதம் மற்ற உலோகங்களும் இருக்கும். இதனை பி. ஐ. எஸ்.  அங்கீகரித்துள்ளது. கே.டி.எம் (KDM) என்ற வகை அங்கிகாரம் பெற்ற தங்கத்தை பி ஐ எஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் 10 கேரட் வகை தங்கமே அனுமதிக்கப்பட்டுள்ளது.   டென்மார்க், கிரீஸ் போன்ற நாடுகளில் 8 கேரட் வரை மட்டுமே சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது.

கவனிக்க வேண்டியவை

தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான மூன்று அம்சங்கள் என்னவெனில் முதலாவதாக, வாங்கும் தங்கம் சொல்லப்படும் கேரட் அளவில் தூய்மையானதா? என்பதை கவனிக்க வேண்டும். இரண்டாவதாக, வாங்கும் தங்கத்தில் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டு   உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மூன்றாவதாக, வாங்கும் தங்கத்திற்கு வரியுடன் கூடிய ரசீது வாங்க வேண்டும்.  தங்க விற்பனையாளர்கள் வழங்கும் ரசீதில் நகையின் மொத்த எடையும் நகையில் பயன்படுத்திய தங்கத்தின் எடையும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

கல்களின் எடை

கல்கள் பதித்த தங்க ஆபரணங்களை வாங்கும் போது கல்லின்  எடையை நீக்கி விட்டு தங்கத்துக்கான பணத்தை மட்டுமே வசூலிக்காமல் கல்லின் எடையையும் சேர்த்து பணம் வசூலிப்பது ஏமாற்று நடைமுறைகளில் ஒன்றாகும்.  நகைகளில் 9 சதவீதத்துக்கு மேலான எடையில்   கல்களை பதிக்க கூடாது.  

வண்ண பெயிண்டுகள்

வண்ண பெயிண்டுகள் அடித்த வண்ண நகைகளை வாங்குவது சிலருக்கு பிடித்தமானதாக தற்போது உள்ள நிலையில் தங்கத்தின் மீது பூசப்பட்டுள்ள வண்ணத்தின் எடையை சேர்த்து தங்கத்துக்காக பணம் வசூலிப்பது ஏமாற்று நடைமுறைகளில் ஒரு வடிவமாகும். தங்கத்தை அளவீடு செய்யும் எடை இயந்திரத்தில் யுக்திகளை பயன்படுத்தி தங்க அளவை அதிகமாக காட்டும் வியாபார யுக்தி தவறான   ஒன்றானதாகும்.  

மெழுகை நிரப்பி

22 கேரட் தங்கம் எனக் கூறிவிட்டு கூடுதலாக மற்ற உலோகங்களை பயன்படுத்தி   தூய்மையான தங்கம் இல்லாமல் நகைகளை தயாரிக்கும் மோசடியாளர்களும் உள்ளனர்.  மற்ற உலோகங்களை பயன்படுத்தும் போது இரிடியம், ருத்ரேனியம் போன்ற உலோகங்களை  தங்கத்தில் பயன்படுத்தக் கூடாது என பல நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் அவற்றை பயன்படுத்துவதும் மோசடியானதாகும்.  தங்கத்துக்குள் அதிக  மெழுகை நிரப்பி அதிக  எடையை உருவாக்கும் நடைமுறையும் சிலரால் பின்பற்றப்படுகிறது.

சேதாரம்

தங்க ஆபரணங்கள் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட அளவு சேதாரம் ஏற்பட்டதாக கூறி சேதார தங்கத்துக்கான பணத்தை வாடிக்கையாளரிடம்  வசூலிப்பதில்  மோசடியான நடைமுறைகள் வழக்கத்தில் இருந்து வருகின்றன. கற்கள் பதிக்கப்படாத நகைகளில் 3.5 சதவீதத்துக்கு மேலாக சேதாரம் கணக்கிடப்படக்கூடாது. இதைப்போலவே பிஸ்கட், பதக்கங்கள் போன்றவற்றில் 1.25 சதவீதத்துக்கு மிகாமல் சேதாரம் கணக்கிடப்படக்கூடாது.   சில நாடுகளில் சேதாரத்துக்கான தொகை என்று எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.  ஏனெனில், தற்போதைய நவீன தங்க ஆபரணங்கள் உற்பத்தியில் சேதாரம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளது. இதனால், சேதாரம் என்ற பெயரில் தங்க நகை கடைக்காரர்கள் பணத்தை வசூலிப்பது சரியானது அல்ல என்று பலர்  வாதிடுகின்றனர்.  இந்த வாதம் தர்க்க ரீதியாக (logic)  ஏற்புடையதாகவே உள்ளது.  

தங்க முலாம்

தங்க முலாம் பூசி அசல் தங்கம் என கூறி நகைகளை விற்கும் சிலரும் உள்ளனர்.  தங்க நகைகளில் ஜிபி என குறியிடப்பட்டிருந்தால் தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும். ஜிஎஃப் என்றால் தங்கம் நிரப்பப்பட்ட நகையாகும். இதைப் போல உள்ள குறியீடுகளை கவனித்து அதன் பொருளை அறிந்து தங்க நகைகளை வாங்க வேண்டும்.  

தங்க சேமிப்பு

தங்க சேமிப்பு என்ற பெயரில் நடத்தப்படும் சீட்டுகளில் சேரும்போது பொதுமக்கள் கவனமாக நிபந்தனைகளை கவனிப்பதோடு அரசு அங்கீகாரம் பெற்ற சீட்டா? என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் தங்க பத்திரங்களில் முதலீடு செய்யும்போது நிபந்தனைகளை கவனித்து முதலீடு செய்ய வேண்டும்.  தங்கத்தின் விலை விண்ணை முட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ஏமாற்று முறைகளை கையாளும் சிலரும் இருக்கத்தான் செய்வார்கள். நுகர்வோர் கவனமாக எச்சரிக்கையுடன் இருந்து ஏமாற்றங்களை தவிர்க்க வேண்டும். ஏமாற்றப்படும் போது தக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் மேற்கொள்ளலாம்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்