spot_img
November 21, 2024, 3:07 pm
spot_img

நுகர்வோரை பாதிக்கும் கூடுதல் விலை, நியாயமற்ற ஒப்பந்தம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வணிக முறை ஆகியவற்றை அறிந்து கொள்வோம்

கூடுதல் விலை வசூல் (excessive price), நியாயமற்ற ஒப்பந்தம் (unfair contract) கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறை (restrictive trade practice) போன்றவற்றை   பொருளின் உற்பத்தியாளர், விற்பனையாளர், ஒரு சேவையை வழங்குபவர் பின்பற்றுவதால் நுகர்வோர் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்த விவரங்களை அறிந்து கொள்வதன் மூலம் நுகர்வோர் ஏமாற்றங்களுக்கு உட்படுவதிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள இயலும்.

வர்த்தகர் அல்லது சேவை வழங்குபவர்   விற்பனை செய்யப்படும் ஒரு பொருளுக்கு (goods) அல்லது வழங்கப்படும் ஒரு சேவைக்கு (service) அமலில் உள்ள சட்டத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலையை விட கூடுதலாக வசூலிப்பது, பொருளின் மீது   குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட கூடுதலாக கேட்பது, காட்சிப்படுத்தப்பட்டுள்ள விலை பட்டியலில் உள்ள விலையை விட கூடுதலாக கேட்பது, ஒரு பொருளை அல்லது சேவையை  வழங்குவதற்கு நுகர்வோரிடம் ஒப்புக்கொண்ட விலையை விட கூடுதலாக தருமாறு நிர்பந்தம் செய்வது ஆகியன நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி கூடுதல் விலையை கேட்கும் (excessive price) தவறான   நடைமுறையாகும்.  இத்தகைய சூழ்நிலைகளில் பாதிக்கப்படுவோர் நுகர்வோர்   குறைதீர் ஆணையங்களில் வழக்கு தாக்கல் செய்யலாம்.

உற்பத்தியாளர் அல்லது வர்த்தகர் அல்லது சேவை வழங்குபவருக்கும்   நுகர்வோருக்கும் இடையே ஏற்படுத்தப்படும்   ஒப்பந்தங்களில் நுகர்வோரின் உரிமைகளை பாதிக்கும் கீழ்க்கண்ட வகையான அம்சங்கள் இடம் பெற்று இருந்தால் அத்தகைய ஒப்பந்தங்கள் நியாயமற்ற ஒப்பந்தங்கள் (unfair contract) என நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வரையறை செய்துள்ளது.

  • விற்பனை மற்றும் சேவை ஒப்பந்தங்களில்   பொருத்தம் இல்லாத வகையில் மிக அதிகமான காப்புத்தொகை (security deposit) செலுத்த வேண்டும் என்று கேட்பது.
  • ஒப்பந்தத்தில் உள்ள ஒரு நிபந்தனையை மீறியதற்காக,  அவ்வாறு நுகர்வோர் நிபந்தனையை மீறியதால் ஏற்பட்ட இழப்பை விட மிக மிக அதிகமாக தண்டத்தொகை (penalty) வழங்க வேண்டும் என்று நிர்பந்திப்பது.
  • பெற்ற கடனை ஒப்பந்த காலத்திற்கு முன்னதாகவே ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள அபராதத்துடன் கடனை நுகர்வோர் திரும்ப செலுத்த முன் வரும்போது பணத்தை   பெற்றுக் கொண்டு கடனை முடித்து தர மறுப்பது.
  • நுகர்வோரிடம் ஒப்பந்தம் செய்து கொள்ளும் உற்பத்தியாளர் அல்லது வர்த்தகர் அல்லது சேவை வழங்குபவர் நியாயமான காரணம் இன்றி அவர்களாகவே ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியும் என்ற நிபந்தனையுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது.
  • செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் நுகர்வோரின் அனுமதியின்றி இன்னொரு தரப்பினரை அனுமதிப்பது.
  • நுகர்வோருக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் நியாயமற்ற கட்டணங்கள் அல்லது நியாயமற்ற நிபந்தனைகளை விதித்து ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது.

உற்பத்தியாளர் (manufacturer)  அல்லது வர்த்தகர் (trader) அல்லது சேவை வழங்குவபர் (service provider)   நுகர்வோரிடம் நியாயமற்ற ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டால் அதனை எதிர்த்து மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் அல்லது தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். அதே சமயத்தில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இத்தகைய பிரச்சனைக்கு வழக்கு தாக்கல் செய்ய இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

நியாயப்படுத்த இயலாத செலவுகளையும் கட்டுப்பாடுகளையும் நுகர்வோருக்கு  விதிக்கும் வகையில் விலைகளை கையாளுதல் (கட்டுப்படுத்துதல்),  பொருள் அல்லது சேவையை வழங்குவதில் கட்டுப்பாடுகளை விதித்தல்,  சந்தையில் பொருள் அல்லது சேவை கிடைப்பதை பாதிக்கும் வகையில் சூழலை உருவாக்குதல் போன்றவை நுகர்வோருக்கு எதிரான கட்டுப்படுத்தப்பட்ட வணிக நடைமுறைகளாகும்.

விலை உயர்வுக்கு வழி வகுக்கும் வகையில் உற்பத்தியாளர் அல்லது வர்த்தகர் அல்லது சேவை வழங்குபவர்  பொருட்களை, சேவைகளை வழங்குவதில் நுகர்வோரிடம் ஒப்புக்கொண்ட   காலத்துக்குள் வழங்காமல்  தாமதம் செய்தல்  மற்றும் நுகர்வோர் ஏதேனும் பொருட்களை வாங்க, வாடகைக்கு  பெற  அல்லது சேவையை பெற நிபந்தனையாக வேறு பொருளை அல்லது சேவையை பணம் செலுத்தி வாங்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்வது கட்டுப்படுத்தப்பட்ட வணிக   முறைகளாகும்.

குறைபாடான பொருள் (defective goods), சேவை குறைபாடு (deficiency in the service) மற்றும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் (misleading advt.) ஆகியவை பற்றி விரைவில் தனி கட்டுரையாக பார்க்கலாம்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்