பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு உள்ளிட்டவற்றை வழங்கும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை போன்றவற்றை கல்வி நிறுவனங்களாகவும் பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு போன்றவற்றிற்கு தனியாக சிறப்பு பயிற்சிகளையும் நீட் (NEET), ஜெஇஇ (JEE) போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகளையும் அரசு போட்டி தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சிகளையும் வழங்கும் அமைப்புகளை பயிற்சி நிறுவனங்களாகவும் வகைப்படுத்தலாம்.
கல்வி நிறுவனங்கள் செய்யும் பணிகள் “சேவை (service)” என்ற வரையறைக்குள் வந்தால் மட்டுமே கல்வி நிலையங்களில் ஏற்படும் “சேவை குறைபாட்டிற்கு (deficiency in the service)” நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய இயலும். கல்வி நிலையங்கள் சேவை குறைபாடு புரிந்ததாக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நுகர்வோர் நீதிமன்றங்களால் இழப்பீடும் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 2022 நவம்பர் மாதத்தில் தேசிய நுகர்வோர் உரிமைகள் ஆணையம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் கல்வியை கற்பிக்கும் நிறுவனங்கள் தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி வழக்கு தாக்கல் செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் சிறப்பு பயிற்சிகளை வழங்கும் பயிற்சி நிலையங்கள் சேவை குறைபாடு புரிந்தால் நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்றும் இந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது (“Principal, LDRP Institute of Technology and Research Vs Apoorv Sharma – Revision Petition No: 2006 of 2019” ).
தற்போது தேசிய நுகர்வோர் ஆணையத்தின் உத்தரவு சரியானதா? என்பது குறித்த மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் இருந்து வருகிறது. கல்வி வழங்குவது “சேவை” என்ற வரையறைக்குள் வருமா? கல்வி நிறுவனங்கள் சேவை குறைபாடு புரியும் போது நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய இயலுமா? என்பதை அறிந்து கொள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.
இருப்பினும் கல்வி நிலையங்கள் நடத்தும் விடுதிகள் (hostels), அவை வழங்கும் போக்குவரத்து வசதி (transport facilities), வேலை வாய்ப்பு பயிற்சி (training and placement) போன்றவற்றில் சேவைகளை வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம் என அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் கடந்த 2022 நவம்பரில் நுகர்வோர் புகார் எண் (RBT CC No): 112/2022 என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த மாணவி ஒருவர் பொறியியல் கல்லூரியில் சேர்க்கைக்கு இறுதி நாள் முடிந்த பின்னர் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக இடம் கிடைத்து மாற்றுச் சான்றிதழை பெறுகிறார். கல்லூரி நிர்வாகம் செலுத்திய கட்டணத்தை வழங்க மறுத்துவிட்டது. இது தொடர்பாக மாணவி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் கல்லூரிக்கு செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்க உத்தரவிட முடியாது என்று கூறிய போதிலும் மாணவியால் உணவு விடுதிக்காக செலுத்தப்பட்ட பணத்தையும் பிளேஸ்மெண்ட் ட்ரைனிங் என்ற பெயரில் மாணவி செலுத்திய பணத்தையும் வழங்க உத்தரவிட்டுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.