spot_img
November 21, 2024, 9:40 pm
spot_img

முதியவருக்கு ரூ 1.5 லட்சம் வழங்க அஞ்சல் துறைக்கு நாமக்கல் மாவட்டம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள கடச்சநல்லூர்   கிராமத்தில் வசிப்பவர் ராமலிங்கம் மகன் திருமாறன் (70). இவரது பேத்தி ஜி. காருண்யா என்பவருக்கு சுகன்யா சம்ரித்தி திட்டத்தின் கீழ்   ஈரோடு, எஸ்பிபி காலனியில் உள்ள அஞ்சலகத்தில் (post office) கடந்த 2015 மார்ச் மாதத்தில் கணக்கு தொடங்கியுள்ளார்.

கணக்கு தொடங்கிய மாதத்திலிருந்து 2021 மார்ச் மாதம் வரை மாதம் ஒன்றுக்கு ரூ 12,500/- ஐ  திருமாறன் அஞ்சலகத்தில் செலுத்தி வந்துள்ளார். கடந்த 2021 ஜூலை மாதத்தில் மூன்று மாதத்திற்கான பணத்தை கணக்கில் செலுத்த இவர் அஞ்சலகத்திற்குச் சென்றபோது அஞ்சலக அதிகாரி பணத்தை வாங்க மறுத்ததோடு கணக்கை முடித்துக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார். இதற்கான காரணத்தை திருமாறன் கேட்டபோது பெற்றோர்  உயிருடன் இருக்கும் போது பேத்திக்காக தாத்தா சுகன்யா சம்ரித்தி திட்டத்தின் கீழ்   கணக்கை தொடங்க முடியாது என்றும் இதனால் கடிதம் கொடுத்தால் செலுத்திய பணத்தை மட்டும் திருப்பித் தருவோம் என்றும் அஞ்சலக அதிகாரி தெரிவித்துள்ளார்.

அஞ்சலக அதிகாரி  கட்டாயப்படுத்தியதால்   பேத்தியின் பெயரில் தொடங்கிய கணக்கை முடிக்க திருமாறன் அஞ்சலகத்துக்கு கடிதம் கொடுத்துள்ளார். இதனைப் பெற்றுக் கொண்ட அஞ்சல் துறையினர் அவர் செலுத்திய ரூ 3,37,730/- க்கு மட்டும் காசோலை வழங்கியுள்ளனர். இதன் பின்னர் பணம் செலுத்திய காலத்துக்கு வட்டி தருமாறு பலமுறை அஞ்சல் துறைக்கு திருமாறன் விண்ணப்பம் அனுப்பியும் அஞ்சல் துறையினர் வட்டி தொகையை வழங்கவில்லை.

பாதிக்கப்பட்ட முதியவர் கடந்த 2023 மார்ச் மாதத்தில் அஞ்சல் துறையினர் மீது நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அஞ்சல் துறை விதிகளின்படி பெற்றோர் உயிருடன் இருக்கும் போதும் குழந்தை வெளிநாட்டில் இருக்கும் போதும் சுகன்யா சம்ரித்தி திட்டத்தின் கீழ்   கணக்கை தொடங்க முடியாது என்றும் வழக்கு தாக்கல் செய்தவரின்  பேத்தியின் பெற்றோர் உயிருடன் இருப்பதாலும் இந்த குழந்தை பெற்றோருடன் வெளிநாட்டில் வசித்து வருவதாலும் விதிகளை மீறி குழந்தையின் பெயர்கள் தொடங்கப்பட்ட  கணக்கை முடித்து   தங்களிடம் முதியவரால் செலுத்தப்பட்ட பணத்தை வட்டி இல்லாமல் திரும்பி வழங்கியதாக அஞ்சல் துறையினர் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் (June 2024)விசாரணையில் அஞ்சல் துறையினர் சேவை குறைபாடு புரிந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியவர் பேத்திக்கு   கணக்கு தொடங்கும் விண்ணப்பத்தில் பெற்றோர் உயிருடன் உள்ளனரா? மைனர் குழந்தை எங்கு வசிக்கிறார்? என்பது போன்ற கேள்விகள் அஞ்சல் துறையினரால் கேட்கப்படவில்லை.  கணக்கு தொடங்க அனுமதித்த பின்னர் தவறுதலாக விதியை மீறி கணக்கு தொடங்கப்பட்டதாக அறியப்பட்டாலும் வாடிக்கையாளரால் செலுத்தப்பட்ட தொகைக்கு வட்டி வழங்கப்படும் என்பது வாடிக்கையாளர்களின் சட்டபூர்வமான எதிர்பார்ப்பாகும் (legitimate expectation). இதனால் அஞ்சலக வாடிக்கையாளரான முதியவர் செலுத்திய அசல் தொகைக்கு வட்டி  ரூ 1,00,162/-     மற்றும் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ 50,000/- ஆகியவற்றை அஞ்சல் துறையினர் நான்கு வாரங்களுக்குள் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட  நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்