இருசக்கர வாகனத்தின் அசல் வாகன பதிவு சான்றிதழை வழங்காத விற்பனையாளர் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வசித்து வரும் சந்திரன் மனைவி மாதேஸ்வரி இருசக்கர வாகனம் வாங்குவதற்காக கடந்த 2021 மார்ச் மாதத்தில் ஈரோட்டில் உள்ள லோட்டஸ் ஏஜென்சி என்ற இருசக்கர விற்பனை நிலையத்தை அணுகியுள்ளார். ரூ 63,509/- மதிப்புள்ள வாகனத்தை தேர்வு செய்து ரூபாய் 10 ஆயிரத்தை விற்பனையாளரிடம் முன்பணமாக செலுத்தியுள்ளார். ஈரோட்டில் உள்ள எச்டிஎப்சி வங்கி மூலமாக வாகனத்தின் மீத தொகைக்கு இருசக்கர விற்பனையாளர் கடன் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருசக்கர வாகனத்தை பதிவு செய்த பின்னர் அசல் பதிவு சான்றிதழை மாதேஸ்வரி கேட்டபோது கடனுக்காக அசல் பதிவு சான்றிதழை வங்கியில் கொடுத்து விடுவோம் என்று இருசக்கர வாகன விற்பனையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசல் கடனையும் வட்டியையும் செலுத்திய பின்னர் வங்கிக்கு சென்று அசல் வாகன பதிவு சான்றிதழை கேட்டபோது தங்களிடம் சான்றிதழ் இல்லை என்று வங்கி தரப்பில் மாதேஸ்வரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் வழக்கறிஞர் மூலம் சட்ட அறிவிப்பு அனுப்பி பதிவு சான்றிதழை தருமாறு வங்கியில் கேட்டபோதும் அசல் சான்றிதழ் தங்களிடம் இல்லை எனக் கூறி வங்கி கூறியதோடு அசல் பதிவு சான்றிதழில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட கடன் குறிப்பு நீக்குவதற்கான படிவத்தை மட்டும் வங்கி வழங்கி உள்ளது. இதனால் வாகன விற்பனையாளரை அணுகி அசல் பதிவுச் சான்றிதழை கேட்டபோது தாங்கள் வங்கியில் கொடுத்து விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாதேஸ்வரி கடந்த 2024 மே மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வங்கியின் மீதும் வாகன விற்பனையாளர் மீதும் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு 12 பிப்ரவரி 2025 -ல் தீர்ப்பு வழங்கியது.
அசல் வாகன பதிவுச் சான்றிதழ் யாரிடம் வழங்கப்பட்டது என்பதற்கான அறிக்கையை விசாரணையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சமர்ப்பித்துள்ளார். இதில் அசல் பதிவு சான்றிதழை பெற்றுக் கொண்டதாக வாகன விற்பனையாளரின் தரப்பில் கையொப்பம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அசல் பதிவு சான்றிதழை வைத்துக்கொண்டு அதனை தர மறுக்கும் வாகன விற்பனையாளரின் செயல் நேர்மையற்ற வர்த்தக நடைமுறை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நான்கு வார காலத்துக்குள் அசல் வாகன பதிவுச் சான்றிதழை வழக்கு தாக்கல் செய்துள்ள மாதேஸ்வரிக்கு இருசக்கர வாகன விற்பனையாளர் வழங்க வேண்டும் என்றும் மாதேஸ்வரிக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எவ்வித தவறும் இல்லாததால் வங்கியின் மீதான புகார் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.