spot_img
November 21, 2024, 2:53 pm
spot_img

மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற உத்தரவுப்படி வாடிக்கையாளருக்கு ரூ  76,280/- வழங்கிய பிரபல நிறுவனம்

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி   டாக்டர் வீ.ராமராஜ் ரூ  76,280/- க்கான வரைவோலையை (demand draft) திருமதி உதய பிரியாவுக்குவழங்கிய போது எடுத்த படம்

நாமக்கல், மோகனூர் சாலையில் உள்ள பரணி நகரில் வசித்து வருபவர் ரவிக்குமார் மனைவி உதயப்பிரியா (56). இவர் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் பிரபல யுரேகா ஃபோர்ப்ஸ் நிறுவனத்தில் அவரது வீட்டிற்கு சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு ரூபாய் 65,000/- ஐ கடந்த 2019 அக்டோபர் மாதத்தில் செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட நிறுவனம் உதயப்பிரியாவிற்கு கட்டணம் இல்லாமல் ஹாலிடே ரிசார்ட்-ல் மூன்று நாட்கள் குடும்பத்துடன் தங்கிக் கொள்ள வவுச்சர் ஒன்றும் வழங்கியுள்ளது.

வாடிக்கையாளரால் கேட்டுக்கொண்ட காலத்துக்குள் சிசிடிவி கேமராவை பொருத்தித் தருவதாக ஒப்புக்கொண்ட நிறுவனம் உரிய காலத்தில் பொருத்தித் தராமல் இருந்து வந்துள்ளது. இறுதியாக கடந்த 2022   ஆம் ஆண்டில் கேமராவை பொருத்தி தந்துள்ளனர். ஒப்புக்கொண்டபடி பொருத்தப்பட வேண்டிய கேமராக்களில் ஒரு கேமராவை பொருத்தித் தரவில்லை. மேலும், ஹாலிடே ரிசார்ட்-ல் தங்குவதற்கு வழங்கப்பட்ட வவுச்சர் காலாவதியானதாக இருந்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் கடந்த அக்டோபர் மாதத்தில் யுரேகா நிறுவனத்தின் மீது நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ்  தலைமையிலான அமர்வு   வழங்கிய தீர்ப்பில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு இழப்பீடாக ரூ  60,000/-   மற்றும் வழக்கின் செலவு தொகையையும் நான்கு வார காலத்திற்குள் வழங்க ஜனவரி மாதத்தில் உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீட்டுத் தொகையை வழங்க தவறியதால் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் உதயப்பிரியா வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனத்தின் கிளை மேலாளர் உள்ளிட்ட அலுவலர்களை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் மனு தாக்கல் செய்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நேற்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆஜரான  பிரபல வீட்டு உபயோக விற்பனை நிறுவனத்தின் கிளை மேலாளர் நீதிமன்ற உத்தரவுபடி இழப்பீட்டுத் தொகையும் செலவு தொகையும் காலதாமதத்திற்கான வட்டியும் சேர்த்து ரூ  76,280/- க்கான வரைவோலையை (demand draft) நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதனை நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி   டாக்டர் வீ.ராமராஜ் உதய பிரியாவுக்கு வழங்கினார். நுகர்வோர் நீதிமன்றங்கள் வழங்கும் உத்தரவுகளை நிறைவேற்ற தவறினால் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் அதிகாரம் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு 2019 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப்படி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.

ஜிவிடி
ஜிவிடி
நிர்வாக அலுவலர், அமைதிக்கான உத்திகள் நிறுவனம்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்