குறைபாடான பொருள் (defective goods)
தரத்தில் (sub-standard and less quality) குறைபாடு உள்ள பொருள், குறிப்பிட்ட எடை அல்லது ஏதேனும் ஒரு அளவு கொண்டது என விற்கப்படுவதில் அத்தகைய அளவு இல்லாத பொருள் (lessor quantity than mentioned), நிறைவற்ற முறையில் தயாரிக்கப்பட்ட பொருள் (imperfect), தூய்மையற்ற, கலப்படமான பொருள் (no purity), குறிப்பிட்ட ஆற்றல் உள்ளது என விற்பனை செய்யப்படும் பொருளில் அத்தகைய ஆற்றல் இல்லாத பொருள் (no potency) உள்ளிட்டவற்றை குறைபாடு உடைய பொருட்கள் எனலாம்.
சுருங்கக் கூறின், தற்போதைக்கு நடைமுறையில் உள்ள அல்லது எந்தவொரு ஒப்பந்தத்தின் கீழும் அல்லது எந்தவொரு சட்டத்தின் கீழும் குறிப்பிட்ட அளவு, தரம், தூய்மை போன்றவற்றுடன் பராமரிக்கப்பட வேண்டும் என வரையறைக்கப்பட்டுள்ள பொருட்களை அத்தகைய நிலை இல்லாமல் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் குறைபாடான பொருட்கள் என அழைக்கப்படுகிறது.
சேவை குறைபாடு (deficiency in the service)
“குறைபாடு” என்பது தற்போதைக்கு நடைமுறையில் உள்ள அல்லது ஒரு நபரால் மேற்கொள்ளப்படும் அல்லது செயல்படுத்தப்படும் எந்தவொரு சட்டத்தின் கீழும் பராமரிக்கப்பட வேண்டிய தரம், இயல்பு மற்றும் செயல்திறன் (quality, nature and manner of performance) ஆகியவற்றில் ஏதேனும் தவறு, நிறைவற்ற முறை, குறைபாடு, போதாமை (fault, imperfection, shortcoming or inadequacy) ஆகியவற்றைக் குறிக்கிறது. ஒப்பந்தம் மற்றும் சேவை தொடர்பானவற்றிற்கும் இவை பொருந்தும்.
உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளர் அல்லது சேவை வழங்குபவரின் அலட்சியம் (negligence), ஒரு செய்ய வேண்டிய செயலை செய்யாமல் விடுதல் (omission), செய்யக்கூடாத செயலை செய்தல் (commission) ஆகியவற்றின் காரணமாக நுகர்வோருக்கு ஏற்படும் இழப்பு (loss) மற்றும் தீங்கு (injury) ஆகியவை சேவை குறைபாடு என்ற பட்டியலில் அடங்குகிறது. இதை போலவே, பொருள் அல்லது சேவைதொடர்புடைய தகவல்களை நுகர்வோருக்கு வழங்காமல் இருப்பதும் சேவை குறைபாடாகும்.
தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் (misleading advertisement)
ஒரு பொருளைப் பற்றி அல்லது வழங்கப்படும் சேவையைப் பற்றி தவறாக எடுத்துக் கூறும் விளம்பரம், ஒரு பொருள் அல்லது சேவையின் தன்மை, பொருள், அளவு, தரம் (nature, substance, quantity or quality) குறித்து நுகர்வோரை தவறாக வழிநடத்தும் விளம்பரம், தவறான உத்தரவாதத்தை வழங்கும் விளம்பரம் ஆகியன தவறாக வழிநடத்தும் விளம்பரங்களின் வகைகளாகும்.
உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளர் அல்லது சேவை வழங்குபவரால் செய்யப்படும் நியாயமற்ற வர்த்தக நடைமுறையை (unfair trade practice) உருவாக்கும் வெளிப்படையான அல்லது மறைமுகமான விளம்பரம், விற்பனை செய்யப்படும் பொருள் அல்லது வழங்கப்படும் சேவையை பற்றிய முக்கியமான தகவல்களை மறைக்கும் விளம்பரம் ஆகியனவும் தவறாக வழி நடத்தும் விளம்பரங்களின் வகைகளாகும்.
நுகர்வோரை பாதிக்கும் குறைபாடான பொருளை விற்பனை செய்தல், சேவையை வழங்குதல் மற்றும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் ஆகியன முற்றிலும் அகற்றப்பட வேண்டியவை ஆகும்.