spot_img
December 4, 2024, 9:02 pm
spot_img

மொபைல் போன் முதல் வாகனங்கள், சுய தொழில் இயந்திரங்கள் வரை வாங்கிய பொருட்களில் ஏற்படும் குறைபாட்டை நிரூபிக்க திணறும் நுகர்வோருக்கு தேசிய ஆணையத்தின் தீர்ப்பு வரப்பிரசாதமா?

மொபைல் போன், கை கடிகாரம், மிக்ஸி, அயன் பாக்ஸ் உள்ளிட்ட தனிநபர் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை  பணம் செலுத்தி வாங்குகிறோம்.  இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், சொந்த தொழிலுக்காக பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்களையும் தேவையான இயந்திரங்களையும் பணம் செலுத்தி வாங்குகிறோம். புதிதாக வாங்கிய பொருட்களில் அடிக்கடி பிரச்சினை ஏற்படும் போது நுகர்வோருக்கு மன உளைச்சல் மற்றும் பண இழப்பு போன்ற சிரமங்கள் ஏற்படுகிறது.

பொதுவாக, வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் தொழிலுக்கான உபகரணங்களை உற்பத்தி செய்பவர்கள் பெரு நிறுவனங்களாக இருக்கிறார்கள். வாங்கிய பொருட்களில் அடிக்கடி பழுது ஏற்படும்போது பொருளின் உற்பத்தியாளர்களை அல்லது விற்பனையாளர்களை அணுகும் போது பல நேரங்களில் முழுமையான தீர்வை நுகர்வோரால் பெற இயலாமல் போகிறது. இதனால், வாங்கிய உற்பத்தி குறைபாடு உள்ள பொருளை மாற்றி புதிய பொருளை வழங்கவும் இழப்பீடு கேட்டும் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

நுகர்வோர் நீதிமன்றத்தில் உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளர் மீது வழக்கு தாக்கல் செய்யும்போது வாங்கிய பொருள் உற்பத்தி குறைபாடாக உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை வழக்கை தாக்கல் செய்பவரின் பணியாக உள்ளது.  நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி, ஒரு பொருள் அல்லது உபகரணம் உற்பத்தி குறைபாடு உடையதாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினால் அந்தப் பொருளை அல்லது உபகரணத்தை நுகர்வோர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து ஆய்வகத்துக்கு (for testing) அனுப்ப விண்ணப்பித்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தி ஆய்வகத்தில் இருந்து வரும் அறிக்கையின் மூலம் ஒரு பொருள் அல்லது உபகரணம் உற்பத்தி குறைபாடு உடையது என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை நுகர்வோருக்கு உண்டு. இவ்வாறு நிரூபித்தால் மட்டுமே பாதிக்கப்படும் நுகர்வோர் உரிய தீர்வை பெற முடியும்.  

சிரமப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிய பொருளில் அல்லது உபகரணத்தில் அடிக்கடி பழுது ஏற்படும்போது தீர்வு காண நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் நுகர்வோர் உற்பத்தி குறைபாடு பொருளில் அல்லது உபகரணத்தில் உற்பத்தி குறைபாடு என்பதை நிரூபிக்க மிகவும் சிரமப்படக்கூடிய சூழ்நிலை உள்ளது.  உற்பத்தியாளர்கள் அல்லது விற்பனையாளர்கள் இத்தகைய வழக்குகளில் பெரிய வழக்கறிஞர்களை நியமித்து வாதிடுகிறார்கள். 

பொருளை அல்லது உபகரணத்தை சரியாக பயன்படுத்த நுகர்வோருக்கு தெரியாததால் (lack of knowledge) பிரச்சனை ஏற்பட்டுள்ளது, பொருளை அல்லது உபகரணத்தை வாங்கிய நுகர்வோர் அதனை சரிவர பயன்படுத்தாமல் தவறுதலாக கையாண்டு உள்ளார்கள் (mishandling), தவறுதலாக பயன்படுத்தியதால் அல்லது வெளிப்புற தாக்குதலால் பொருளுக்கு உபகரணத்துக்கு சேதம் (physical damage) ஏற்பட்டுள்ளது போன்ற வாதங்களை உற்பத்தியாளர்கள் அல்லது விற்பனையாளர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் முன் வைக்கிறார்கள்.  

இவ்வாறான நிலவரம் இருந்து வரக்கூடிய நிலையில் நுகர்வோரால் வாங்கப்பட்ட உபகரணத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டுள்ளது என்பதை நிரூபித்தாலே உபகரணமானது உற்பத்தி குறைபாடு உள்ளது என்பதாகும் என்ற தீர்ப்பை வழங்கி  நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க சமீபத்தில் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை நுகர்வோர் நீதியில் ஒரு மைல் கல்லாகவே கருத வேண்டி உள்ளது கருதலாம். (Order dated: 06 November 2024, First Appeal No. 324 of 2021, National Consumer Disputes Redressal Commission, New Delhi).

மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள வழக்கின் சுருக்கம்: கடந்த 2017 டிசம்பர் மாதத்தில், சுய தொழில் செய்வதற்காக, பாஸ்தா மெஷின் ஒன்றை ரூ 8 ,02,000/- செலுத்தி ஒருவர் வாங்கியுள்ளார். இந்த இயந்திரத்தில் அடிக்கடி சின்ன சின்ன பிரச்சனைகள் முதல் பெரிய பிரச்சனைகள் வரை ஏற்பட்டுள்ளது. இதனால் பழுது நீக்குவதற்காக இயந்திரத்தை உற்பத்தி செய்த நிறுவனத்தின் தொழில்நுட்ப பணியாளர்களை அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுயதொழில் உற்பத்தி பாதிப்பு, பொருளாதார இழப்பு ஏற்பட்டதோடு வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும் இயந்திரத்தை வாங்கிய நுகர்வோரால் இயலவில்லை. இருந்தும் வாங்கப்பட்ட இயந்திரத்தில் முழுமையாக பழுதை உற்பத்தி நிறுவனம் செய்து கொடுக்கவில்லை. இதனால், வேறு வழியின்றி இயந்திரத்தை வாங்கியவர் மாநில நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மாநில ஆணையம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உற்பத்தியாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை தேசிய நுகர்வோர் ஆணையம் விசாரித்தது.

தங்களால் விற்கப்பட்ட இயந்திரத்தை சோதனை செய்து பார்த்து திருப்தி அடைந்த பின்னரே நுகர்வோர் விலைக்கு வாங்கினார் என்றும் இந்த இயந்திரத்தை சரிவர இயக்க தெரியாததால் தவறான கையாளுதல் காரணமாக அடிக்கடி பழுது ஏற்பட்டுள்ளது என்றும் உற்பத்தி குறைபாடு இயந்திரத்தில் இல்லை என்றும் இயந்திரத்தை வழக்கு தாக்கல் செய்தவர் ஆய்வுக்கு அனுப்பவில்லை என்றும் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் இந்த வழக்கில் வாதிடப்பட்டது.  

வாங்கப்பட்ட இயந்திரத்தை இயக்கியவர் சம்பந்தப்பட்ட இயந்திரத்தை இயக்கும் பணியில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் என்பதை வழக்கு தாக்கல் செய்தவர் நிரூபித்துள்ளார்.  ஒவ்வொரு முறை பழுது ஏற்படும்போதும் உற்பத்தியாளர் சார்பில் ஜாப் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலமுறை பழுது ஏற்பட்டு வழங்கப்பட்ட ஜாப் கார்டு விவரங்களை வழக்கு தாக்கல் செய்துள்ளவர் சமர்ப்பித்துள்ளார். அடிக்கடி பழுது ஏற்படுகிறது என்பதை வழக்கு தாக்கல் செய்துள்ளவர் நிரூபித்துள்ளதால் விற்பனை செய்யப்பட்ட பொருள் உற்பத்தி குறைபாடு உள்ளது என்பதாகவே கருதப்படும் என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இறுதியாக, வழக்கு தாக்கல் செய்தவருக்கு குறைபாடு இல்லாத புதிய இயந்திரத்தை வழங்கவும் இழப்பீடாக ரூ 3,00,000/- வழங்கவும் மாநில நுகர்வோர் ஆணையம் உற்பத்தியாளருக்கு உத்தரவிட்டது சரியானது என இந்த வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.

ஆகவே, நுகர்வோர்களே! எந்த பொருளையும் அல்லது உபகரணத்தையும் வாங்கினாலும் அதன் ரசீது மற்றும் உத்தரவாத ஆவணங்களை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்! பழுது ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளரின் சர்வீஸ் சென்டரில் சென்று பழுது நீக்கும் பணியை செய்யுங்கள்! அவர்கள் வழங்கும் ஜாப் கார்டுகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்! தாங்கள் வாங்கிய பொருளில் அல்லது உபகரணத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டால் நுகர்வோர் நீதிமன்றத்துக்கு செல்வதற்கு இவை உபயோகமாக இருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்