தீயாகப் பரவும் இருண்ட வணிக நடைமுறைகளைப் பற்றி பார்த்துக் கொண்டுள்ளோம். முதலாவது பகுதியில் அவசரப்படுத்தி பணம் செலுத்தத் தூண்டும் நடைமுறைகளை பார்த்தோம். இரண்டாம் பகுதியில் சம்மதம் இல்லாமல் பணத்தை அபகரிக்கும் நடைமுறைகளை பார்த்தோம். இந்த மூன்றாம் பகுதியில் கட்டாயப்படுத்தி பணம் அபகரிக்கும் (Forced Action), சந்தா பொறிமுறை (subscription trap) நடைமுறைகளை பார்க்கிறோம்.
ஒருவர் ஒரு பொருளை அல்லது சேவையை (சர்வீஸ்) பணம் கொடுத்து வாங்கும் போது கூடுதலாக இன்னொரு பொருளையும் வாங்க வேண்டும் அல்லது ஏதாவது ஒன்றிற்கு சந்தா செலுத்த வேண்டும் அல்லது பணம் செலுத்துபவருக்கு தொடர்பு இல்லாத ஒரு சேவையில் இணைய வேண்டும் அல்லது சொந்த விவரங்களை விற்பனையாளருக்கு தெரிவிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி பணத்தை பறிக்கும் செயல்களை இருண்ட வடிவ வணிக நடைமுறை என்று மத்திய அரசு கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் தெரிவித்துள்ளது.
உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட வகையான பொருளை அல்லது சேவையை தொடர்ந்து வழங்குமாறு பணம் செலுத்தி ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் போது அந்தப் பொருளின் அல்லது சேவையின் மேம்படுத்தப்பட்ட (அப்கிரேட்டு – upgraded version) மற்றொரு வகைக்கு கூடுதல் பணத்தை செலுத்தி தொடர்ந்து பொருளை அல்லது சேவையை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிப்பது. மற்றொரு உதாரணம், ஒரு பொருளை அல்லது சேவையை விலைக்கு வாங்கும் போது அது தொடர்பான ஒரு செய்தி கடிதத்துக்கு (நியூஸ் லெட்டர்) சந்தா செலுத்துமாறு கட்டாயப்படுத்துவது.
விளம்பரப்படுத்தப்பட்டுள்ள ஒரு பொருளை அல்லது சேவையை விலைக்கு வாங்கும் போது அது தொடர்பான மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும் என கூறுவது ஏற்புடையது. ஆனால், அதே விற்பனையாளர் அவ்வாறு டவுன்லோட் செய்யும் போது மற்றொரு அப்ளிகேஷனையும் இணைத்து டவுன்லோடு ஆகும் போல வகையில் அப்ளிகேஷனை வடிவமைத்திருப்பது இரண்ட இருண்ட வடிவ நடைமுறைகளில் ஒன்றாகும். உதாரணமாக வீடு வாடகைக்கு கிடைக்கும் மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை டவுன்லோட் செய்யும்போது கட்டாயமாக வீடு பெயிண்ட் அடிக்கும் தொழில் குறித்த ஒரு அப்ளிகேஷனையும் டவுன்லோட் ஆக செய்வது.
ஒரு பொருளை அல்லது சேவையை வாங்கும்போது அதற்கு தேவைப்படாத போதும் ஆதார் அட்டையில் உள்ள அல்லது கடன் அட்டையில் உள்ள அல்லது வேறு ஏதாவது சுய விவரங்களை கேட்பது, நுகர்வோரின் தொடர்பு எண்கள் மற்றும் சமூக ஊடகங்களில் உள்ள கணக்கு விவரங்களை கேட்பது போன்றவைகளும் கட்டாயப்படுத்தும் இருண்ட வணிக முறைகளாகும். பிரைவசி செட்டிங்ஸில் கடினமான நடைமுறைகளை வைத்திருப்பது, அதனை பராமரிக்க சுய விபரங்களை பதிவு செய்தால் மட்டும் அனுமதிப்பது போன்றவைகளும் கட்டாயப்படுத்தும் இருண்ட வணிக முறைகளாகும். இவ்வாறு நேரடியாக கட்டாயப்படுத்தி பணத்தை வசூலிப்பது அல்லது மறைமுகமாக கட்டாயப்படுத்தி ஆதாயம் பெற நடவடிக்கைகளை மேற்கொள்வது முற்றிலும் அகற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.
சப்ஸ்கிரைப்சன் ட்ராப் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சந்தா பொறிமுறை ஒருவகையான இருண்ட வணிக வடிவமாகும். இணையதளங்களில் பணம் செலுத்தியுள்ள ஒரு சந்தாவை வேண்டாம் என்று நினைக்கும் போது அதனை கேன்சல் செய்வதை கடினமான நடைமுறைகளிலும் நீண்ட நடைமுறையை பின்பற்றும் வகையிலும் வைத்திருப்பது, சந்தாவை கேன்சல் செய்வதற்கான ஆப்சன் பட்டனை வெளியில் தெரியாமல் வைத்திருப்பது, குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சந்தா (ஃப்ரீ ட்ரையல்) எனக் கூறிவிட்டு அதனை நாம் உபயோகிக்க முற்படும்போது இலவச நாட்கள் முடிந்த பின்னர் எவ்வாறு பணம் செலுத்துவீர் என்று வங்கிக் கணக்கு போன்ற விவரங்களை கேட்பது, சந்தாவை ரத்து செய்ய முயற்சிக்கும் போது தெளிவற்ற, மறைந்த, குழப்பமான, சிரமமான நடைமுறைகளை வைத்திருப்பது போன்றவை சந்தா பொறிமுறைகளில் சிலவனவாகும்.
அரசு வெளியிட்டுள்ள இருண்ட வடிவ வணிக நடைமுறை குறித்த வழிகாட்டுதல்களின் இதர அம்சங்கள் ஓரிரு நாட்களில் அடுத்த பகுதியாக வெளியிடப்படும்.