மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் (central consumer protection authority) பணிகள் குறித்த விபரங்களை முந்தைய கட்டுரை ஒன்றில் பார்த்தோம். இந்த அமைப்பிற்கு சிறை தண்டனை வழங்கும் அதிகாரம் உள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது.
புலனாய்வு
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பில் டைரக்டர் ஜெனரல் அந்தஸ்திலான ஒருவரை தலைவராக கொண்ட புலனாய்வு பிரிவு உள்ளது. புலனாய்வின் போது தேவைப்படும் இடங்களை சோதனை செய்யவும் தேவைப்படும் ஆவணங்களை அல்லது பொருட்களை கைப்பற்றவும் புலனாய்வு பிரிவிற்கு அதிகாரம் உள்ளது. சோதனையிட தகுந்த காரணம் இல்லை என்ற நிலையில் டைரக்டர் ஜெனரல் அல்லது எந்த ஒரு அலுவலரும் தேவையற்ற சோதனையை நடத்தியதாக நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது பத்தாயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழி வகுத்துள்ளது.
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பின் உத்தரவின்படி இந்த புலனாய்வு பிரிவு புலனாய்வுகளை மேற்கொள்கிறது. தேவை என கருதினால் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட எந்த ஒரு அமைப்பையும் ஒரு குறிப்பிட்ட புகாரை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பு உத்தரவிடலாம்.
திரும்பப் பெறுதல்
புலனாய்வின் அறிக்கையின் மூலம் நுகர்வோர் உரிமைகள் மீறப்பட்டுள்ளது அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறை நடைபெற்றுள்ளது என அறியும் நிலையில் ஆபத்தான அல்லது பாதுகாப்பற்ற விற்பனை செய்யப்பட்ட பொருட்களை திரும்ப பெறுமாறும் சேவைகளை திரும்பப் பெறுமாறும் உத்தரவிடும் அதிகாரத்தை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பு கொண்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பொருளை அல்லது சேவையை பெற பணம் செலுத்தியவருக்கு பணத்தை திரும்ப வழங்குமாறும் சேவையை வழங்குவதை நிறுத்துமாறும் உத்தரவிடும் அதிகாரமும் இந்த அமைப்புக்கு உள்ளது.
தவறாக வழிநடத்தும் விளம்பரம்
எந்த ஒரு விளம்பரமும் தவறானது அல்லது தவறாக வழிநடத்தக் கூடியது என விசாரணையின் மூலம் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பு முடிவு செய்யுமானால் சம்பந்தப்பட்ட விளம்பரத்தை வெளியிட்ட வணிகர் அல்லது உற்பத்தியாளர் அல்லது விளம்பரதாரர் அல்லது வெளியீட்டாளரை சம்பந்தப்பட்ட விளம்பரத்தை நிறுத்துமாறு அல்லது குறிப்பிட்ட மாற்றத்தை செய்யுமாறு உத்தரவிடும் அதிகாரம் இந்த அமைப்புக்கு உள்ளது. மேலும், தவறான அல்லது தவறாக வெளிநடத்தும் விளம்பரத்தை வெளியிட்டதற்கு ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தண்டனை அதிகாரங்கள்
பொருட்களை அல்லது சேவையை திரும்ப பெற வேண்டும் அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும் என்ற அதிகார அமைப்பின் உத்தரவுகளை மதிக்க தவறுபவர்களுக்கு 20 லட்சம் வரை அபராதம் அல்லது ஆறு மாத சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய அதிகாரங்களை கொண்ட மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பின் செயல்பாடுகள் எப்படி உள்ளன? என்பதை விரைவில் ஒரு கட்டுரையாக நுகர்வோர் பூங்காவில் திறனாய்வு பகுதியில் காண்போம்.