spot_img
April 2, 2025, 9:10 pm
spot_img

நுகர்வோர் பொதுநல வழக்குகளை நுகர்வோர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்வது எப்படி?

சேவை குறைபாடு, குறைபாடு உள்ள பொருளை விற்பனை செய்தல், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணத்தை வசூலித்தல், நியாயமற்ற வர்த்தக நடைமுறை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படும் எந்த ஒரு நுகர்வோரும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யலாம்.

பாதிக்கப்படும் நுகர்வோர் தமக்கு நிவாரணம் கேட்டு நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்வது   வழக்கமாக உள்ளது. பாதிக்கப்படும் நுகர்வோருக்கு ஏற்பட்ட பிரச்சனையை போல ஒத்த வகையில் பலர் பாதிக்கப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் தமக்காகவும்  தமக்கு ஏற்பட்ட பாதிப்பை போல பாதிக்கப்பட்ட மற்ற நுகர்வோர்களுக்காகவும் நுகர்வோர் பொதுநல வழக்கை (Consumer Interest Litigation) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி தாக்கல் செய்ய இயலும் (பிரிவு 35 (1) c, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019).

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நுகர்வோர்கள், அதே ஆர்வமுள்ள பல நுகர்வோர்கள் இருந்தால், மாவட்ட ஆணையத்தின் அனுமதியுடன், அனைத்து நுகர்வோர் சார்பாக அல்லது நலனுக்காக, வழக்கு தாக்கல் செய்யலாம் என்று நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் 35ஆம் பிரிவு தெரிவிக்கிறது. 

உதாரணமாக, ஒரு பயணி ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு பொது பேருந்து (public transport) மூலமாக பயணிக்கும் போது அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட ரூபாய் ஐந்து கூடுதல் கட்டணம் வசூலித்து அதற்கான பயணச்சீட்டை நடத்துனர் வழங்குகிறார் என்று வைத்துக்  கொண்டால் பாதிக்கப்படும் பயணி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அதே சமயம் அந்த பேருந்தில் உடன் பயணம் செய்தவர்களும் கூடுதல் தொகை செலுத்தி இருக்கும் நிலையில் – அவர்கள் அடையாளம் தெரியாத நிலையில் தம்மை போலவே பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கும்   இழப்பீட்டை பேருந்து நிறுவனம் வழங்கி நுகர்வோர் மாநில நுகர்வோர் நலநிதியில் செலுத்த வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிடலாம். இவ்வாறு தன்னைப்போல பாதிக்கப்பட்ட ஒரே மாதிரியான நுகர்வோர்களுக்கும் இழப்பீடு வழக்கு தாக்கல் செய்வதை நுகர்வோர் நல வழக்காகும்.

மற்றொரு உதாரணமாக, ஒரு உணவகத்தின் ஒரு வாடிக்கையாளர் உணவு உட்கொள்கிறார். அவருக்கு உடனடியாக வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டு (food poison) மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். சிகிச்சைக்கு பின்னர் தரமற்ற உணவை வழங்கியதற்காக அவர் உணவகத்தின்  மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய செய்யலாம். அவர் உணவு உட்கொண்ட சமயத்தில் அந்த உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த  சிலருக்கும் வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது அவருக்கு தெரிய வருகிறது. ஆனால், அவர்களை அடையாளம் தெரியவில்லை என்ற நிலையில் தமக்கு நிவாரணம் வழங்குவதோடு அடையாளம் தெரியாத பாதிக்கப்பட்ட ஒத்த பிரச்சனை கொண்ட நுகர்வோருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை உணவக  நிர்வாகம் வழங்கி அதனை மாநில நுகர்வோர் நலநிதியில் செலுத்த அந்த வாடிக்கையாளர் நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கில் கேட்கலாம்.

தமக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை நாடும் நுகர்வோர்     தம்மை போலவே ஒரே மாதிரியான பிரச்சினையில் பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு நிவாரணம் கேட்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற தகுந்த விண்ணப்பம் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையின் இறுதியில் அடையாளம் தெரியாத நுகர்வோர்களுக்கும் இழப்பீடு வழங்குவது அவசியம் என்று நீதிமன்றம் முடிவு செய்தால் இழப்பீட்டுத் தொகையை மாநில நுகர்வோர் நிதியில் செலுத்த  மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிடலாம். (பிரிவு 39(1) k, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019).

மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (GST) சட்டம், 1917 -ன் கீழ், நுகர்வோர் நலனை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் நுகர்வோர் நல நிதியை (CWF) அமைத்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் தமக்கு மட்டுமல்லாது தம்மை போல பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதியை பெற   வழி செய்யப்பட்டுள்ள நுகர்வோர் பொதுநல வழக்குகளை நுகர்வோரை பாதுகாக்க பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்