spot_img
April 2, 2025, 9:36 pm
spot_img

பணத்தைப் பெற்றுக் கொண்டு பயிற்சி வழங்காத தனியார் பயிற்சி நிறுவனம் மாணவருக்கு ரூ.38,000/- வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

கம்ப்யூட்டர் தொடர்பான படிப்பை வழங்குவதற்கு மாணவரிடம் கல்வி கட்டணத்தை பெற்றுக்கொண்டு பயிற்சியை வழங்காத தனியார் நிறுவனம் மாணவியிடம் பெற்ற தொகையையும் இழப்பீடும் வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள புதூர் மலையாம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பழனியப்பன் மகன் தினேஷ்(24). கடந்த 2023 ஜூன் மாதத்தில் சென்னையில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில் குறுகிய கால கம்ப்யூட்டர் படிப்புக்கு ரூ 26,000/- செலுத்தி உள்ளார். பயிற்சி நிறுவனத்தில் இரண்டு வாரங்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெற்றுள்ளன. அதற்கு பின்னர் வகுப்புகளை பயிற்சி நிறுவனம் நடத்தவில்லை. இது குறித்து மாணவர் பயிற்சி நிறுவனத்தில் கேட்டபோது ஏற்கனவே வேலையில் இருந்த ஆசிரியர் வேறு வேலைக்கு சென்று விட்டதால் பயிற்சியை நடத்த இயலவில்லை என்றும் வேறு பயிற்சியாளர் நியமிக்கும் வரை காத்திருக்குமாறும் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். 

பல வாரங்கள் கடந்தும் பயிற்சி நிறுவனம் மீண்டும் வகுப்புகளை தொடங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் தினேஷ் மீண்டும் வேறொரு நிறுவனத்தில் பணம் செலுத்தி பயிற்சியில் சேர்ந்து உள்ளார். வகுப்புகளை நடத்ததால் கல்வி கட்டணத்தை திரும்பத் தருமாறு மாணவர் கேட்டும் பயிற்சி நிறுவனம் பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2024 மே மாதத்தில் தனியார் பயிற்சி நிறுவனத்தின் மீது வழக்கு தாக்கல் செய்தார்.

விசாரணை முடிவடைந்த நிலையில் (03-12-2024) நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ்  தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பில், பயிற்சி நிறுவனம் சேவை குறைபாடு புரிந்துள்ளதால் மாணவர் செலுத்திய ரூபாய் 26 ஆயிரமும் மாணவருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் 12 ஆயிரமும் ஒரு மாதத்துக்குள் மாணவருக்கு வழங்க பயிற்சி நிறுவனத்திற்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் பூங்கா கருத்து (Opinion of “The Consumer Park”): தனியார் பயிற்சி மையங்கள் தவறுதலாக வழிநடத்தும் விளம்பரங்கள் செய்வதை தடுக்கும் வகையில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பான (சென்ட்ரல் கன்ஸ்யூமர் புரொடக்சன் அத்தாரிட்டி) புதிய நெறிமுறைகளை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்