spot_img
November 21, 2024, 3:45 pm
spot_img

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு  அதிகார அமைப்பு இருப்பதை தெரிந்து கொள்ளுங்கள்

நுகர்வோர் நீதிமன்றங்கள் என அழைக்கப்படும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள், நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்கள் மற்றும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பை (central consumer protection authority) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 அமைக்க வழி செய்தது என்பதை முந்தைய கட்டுரைகளில் பார்த்தோம். 

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பு

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 -ன்படி நுகர்வோர் உரிமை மீறல் (violation of consumer rights), நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் (unfair trade practice) மற்றும் தவறான (false) அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் (misleading advertisement) ஒழுங்குபடுத்துவதற்கும் (regulate) நுகர்வோரின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் மற்றும் நுகர்வோர்களின் உரிமைகளை ஒரு வகுப்பாக (as a class) மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் மற்றும் செயல்படுத்துவதற்கும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பை நிறுவ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 வழி வகுத்தது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன்படி மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பிற்கு தலைமை ஆணையரையும் (chief commissioner) தேவையான அளவிலான ஆணையர்களையும் (commissioners) மத்திய அரசு நியமனம் செய்கிறது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் இந்த அமைப்புக்கு மத்திய அரசு தலைமை ஆணையரையும் இரண்டு ஆணையர்களையும் நியமனம் செய்துள்ளது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பிற்கு   பிராந்திய அளவில் ஆணையர்களும் (regional commissioners) அவர்களது அலுவலகங்களும் உள்ளன. மத்திய அதிகார அமைப்பிற்கு அமைப்பில் புலனாய்வு பிரிவை (investigation) அமைக்கவும் சட்டம் வழி செய்து உள்ளது. 

மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம்

நுகர்வோர் உரிமை மீறல்கள், நியாயமற்ற வர்த்தக நடைமுறை, தவறான   அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள்தொடர்பாக புகாரை மாவட்ட ஆட்சியரிடம் எவர் ஒருவர் சமர்ப்பித்தாலும்   மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பு அல்லது அதன் பிராந்திய  ஆணையர்  ஒரு புகாரை விசாரணைக்கு அனுப்பி வைத்தாலும் மாவட்ட ஆட்சியர் புகாரை விசாரித்து அல்லது புலனாய்வு செய்து அறிக்கை மத்திய அதிகார அமைப்பிற்கு அல்லது பிராந்திய ஆணையருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

புகார்

நுகர்வோர் உரிமை மீறல்கள், நியாயமற்ற வர்த்தக நடைமுறை, தவறான அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் தொடர்பான புகார்களை கடிதமாக அல்லது இணையதளம் மூலமாக பொதுமக்கள் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பிற்கு அல்லது இந்த அமைப்பின் பிராந்திய ஆணையர்களுக்கு அல்லது மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்கலாம்.

பணிகள்

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் பணிகளாக பின்வருவனவற்றை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019  நிர்ணயித்துள்ளது.

  • நுகர்வோர்களின் உரிமைகளை ஒரு வகுப்பாகப்   பாதுகாத்தல், ஊக்குவித்தல் மற்றும் செயல்படுத்துதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நுகர்வோர் உரிமைகள் மீறப்படுவதைத் தடுப்பது;
  • நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுப்பது மற்றும் எந்த ஒரு நபரும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்தல்;
  • நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் விதிகள் அல்லது அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் அல்லது ஒழுங்குமுறைகளுக்கு முரணான எந்தப் பொருட்கள் அல்லது சேவைகளின் தவறான அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரம் எதுவும் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்தல்;
  • தவறான அல்லது தவறாக வழிநடத்தும் எந்தவொரு விளம்பரத்தையும் வெளியிடுவதில் எந்த நபரும் பங்கேற்கவில்லை என்பதை உறுதி செய்தல்;
  • தாமாக முன்வந்து புகாரை பதிவு செய்து அல்லது பொதுமக்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்படும் புகாரின் மீது அல்லது மத்திய அரசின் அறிவுரையின்படி நுகர்வோர் உரிமை மீறல், நியாயமற்ற வர்த்தக நடைமுறை குறித்த புகார்களை விசாரிப்பது அல்லது புலனாய்வு செய்தல்;
  •  தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் அல்லது   மாநில நுகர்வோர் குறையதீர் ஆணையம் அல்லது மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகாரை தாக்கல் செய்தல்;
  •  மாவட்ட ஆணையம் அல்லது மாநில ஆணையம் அல்லது தேசிய ஆணையத்தின் முன் நடக்கும் நுகர்வோர் உரிமைகள் மீறல் அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் தொடர்பான எந்தவொரு  நடவடிக்கையிலும் தலையிடுதல்;
  • நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி வழங்கப்பட்டுள்ள நுகர்வோர் உரிமைகள் ,நுகர்வோருக்கான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நுகர்வோர் உரிமைகளை நுகர்வோர் அனுபவிப்பதை தடுக்கும் காரணிகள் போன்றவற்றை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள பரிந்துரை செய்தல்;
  • நுகர்வோர் உரிமைகளை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக நுகர்வோர் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் சிறந்த சர்வதேச நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதை பரிந்துரை செய்தல்;
  • நுகர்வோர் உரிமைகள் துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்வது மற்றும் ஊக்குவித்தல்;
  • நுகர்வோர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புதல் மற்றும் மேம்படுத்துதல்;
  • நுகர்வோர் உரிமைகள் துறையில் பணியாற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களை நுகர்வோர் பாதுகாப்பு முகமைகளுடன் ஒத்துழைக்கவும் வேலை செய்யவும் ஊக்குவித்தல்;
  • நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுக்கவும், நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்கவும், தேவைப்படக்கூடிய, தனிப்பட்ட மற்றும் உலகளாவிய பொருட்களை அடையாளங்காட்டிகளைப்  பயன்படுத்துவதை கட்டாயப்படுத்துதல்;
  • அபாயகரமான, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய, பாதுகாப்பற்ற பொருட்கள் அல்லது சேவைகளுக்கு எதிராக நுகர்வோரை எச்சரிக்க பாதுகாப்பு அறிவிப்புகளை வெளியிடுதல்;
  • நுகர்வோர் நல நடவடிக்கைகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு ஆலோசனை வழங்குதல்;
  • நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுக்கவும் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்கவும் தேவையான வழிகாட்டுதல்களை வெளியிடுதல்;

அதிக அதிகாரம்

நுகர்வோர் பாதுகாப்புக்கான ஒழுங்குபடுத்துதல் அமைப்பாக (regulatory body) உருவாக்கப்பட்டுள்ள மத்திய நுகர்வோர் அதிகார அமைப்பிற்கு தவறு செய்பவர்கள் மீது லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கவும் சிறை தண்டனை விதிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை விரைவில் அடுத்த பகுதியாக காண்போம்.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்