அசாம் மாநிலம், ஹோஜாய் நாகான், ஹோஜாய் பி டபிள்யு டி காலனிக்கு அருகில் பிரபுல்லா பைஷ்யா ரோ நாட்டுன் பஜாரில் உள்ள சதீஷ் பைஷ்யா என்பவருக்கு எச்டிஎப்சி வங்கியில் சேமிப்பு கணக்கு இருந்துள்ளது. தமது வங்கி கணக்குள்ள எச்டிஎஃப்சி, ஹோஜாய் கிளைக்கு 12-08-2013 ஆம் தேதியில் வேறொரு பரிவர்த்தனைக்காக சென்ற போது தமது கணக்கில் ரூ 35, 000/- குறைந்துள்ளதை அறிந்துள்ளார்.
பணம் குறைந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த சதீஷ் பைஷ்யா வங்கி அலுவலர்களிடம் இதுகுறித்து தெரிவித்த போது ஏடிஎம் மூலம் பணம் எடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் ஏடிஎம் தங்களிடமே உள்ளதால் எடுக்கப்பட்ட பணம் குறித்து தாங்கள் எதுவும் செய்ய முடியாது என்றும் பதில் தெரிவித்துள்ளார்கள். ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் எஸ். எம். எஸ். மூலம் தகவல் வரும் என்றும் ரூ 35,000/- எடுக்கப்பட்டது குறித்து தமக்கு தமது மொபைல் போனுக்கு எவ்வித எஸ்.எம்.எஸ். வரவில்லை என்றும் தெரிவித்த போதும் வங்கி தரப்பில் சரிவர பதில் அளிக்கவில்லை. இதனால் வங்கியின் மீது அவர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் (CC No. 31 of 2013) வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
2013 ஆகஸ்ட் 12 ஆம் தேதியில் நான்கு முறை வழக்கு தாக்கல் செய்தவரின் கணக்கிலிருந்து ஏடிஎம் மூலமாக ரூ 35,000/- எடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த பரிவர்த்தனைகளுக்கு முன்பும் இந்த பரிவர்த்தனைகளுக்கு பின்பும் ஒவ்வொரு முறையும் பரிவர்த்தனை செய்யும்போது வங்கியில் இருந்து எஸ்எம்எஸ் வந்துள்ளது ஆனால், பணம் காணாமல் போன நான்கு பரிவர்த்தனைகளுக்கு வங்கியில் இருந்து எஸ்எம்எஸ் வரவில்லை என்றும் இத்தகைய சூழ்நிலையில் வங்கி சேவை குறைபாடு புரிந்துள்ளது என்றும் இதனால் வழக்கு தாக்கல் செய்தவருக்கு அவரது கணக்கில் இருந்து கழிக்கப்பட்ட ரூ 35,000/- , இழப்பீடு ரூ 5,000/- மற்றும் வழக்கு செலவு தொகை ரூ 5,000/- ஐ வழங்க வேண்டும் என வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் 2015 ஜூலை 04 அன்று தீர்ப்புரைத்தது.
மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வங்கி நிர்வாகம் அஸ்ஸாம் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு (Appeal No. A/37/2015) செய்தது. மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் ஆணையை உறுதி செய்து மேல்முறையீட்டை மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் கடந்த 24 மே 2023 அன்று தள்ளுபடி செய்தது. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழங்கிய தீர்ப்பின் மீது வங்கி நிர்வாகம் புது தில்லியில் உள்ள தேசிய நுகர்வோர் ஆணையத்தில் சீராய்வு விண்ணப்பம் (Revision Petition No. 57 of 2024) தாக்கல் செய்ததில் அதனை விசாரித்த தேசிய ஆணையம் கடந்த 9 ஜூலை 2024 அன்று தீர்ப்பு வழங்கியது.
ஏடிஎம் கார்டு (ATM) மற்றும் ரகசிய குறியீடு (PIN) ஆகியன வாடிக்கையாளரிடமே உள்ளது என்ற நிலையில் வாடிக்கையாளர் அதனை பயன்படுத்தாமல் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியாது என்ற நிலை உள்ளதால் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டுமென வங்கி தேசிய ஆணையத்தில் வாதிட்டது. சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனைகளுக்கு மட்டும் எஸ்எம்எஸ் அனுப்பும் சேவையை வங்கி புரியவில்லை என்றும் அந்தப் பரிவர்த்தனைகளுக்கு முன்பும் பின்பும் வங்கி எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளது என்றும் இதனை கருத்தில் கொள்ளும்போது வங்கி நிர்வாகம் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்திருக்க வேண்டும் என்றும் ஆனால் அதனை வங்கி நிர்வாகம் செய்ய தவறிவிட்டது என்றும் இதனால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றமும் மாநில நுகர்வோர் ஆணையமும் வழங்கிய தீர்ப்புகள் சரியானது என்றும் கூறி வங்கியின் சீராய்வு விண்ணப்பத்தை தேசிய நுகர்வோர் ஆணையம் தள்ளுபடி செய்தது.
எந்தவொரு பரிவர்த்தனைகளையும் எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்கள் (alert) மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்படுவதை வங்கிகள் உறுதிசெய்ய கடமைப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் வங்கிகளின் உடனடி மற்றும் போதுமான சேவையின் முக்கியத்துவத்தை இந்த வழக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.