விமல் பான் மசாலா (pan masala) விளம்பரம் தவறாக வழிநடத்தும் வகையில் இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் மற்றும் விமல் பான் மசாலா தயாரிப்பு நிறுவனமான ஜேபி இண்டஸ்ட்ரீஸ் தலைவர் ஆகியோர்களுக்கு ஜெய்ப்பூர்-II மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் (consumer court) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வசித்து வரும் யோகேந்திர சிங் பதியால் என்பவர் ஜெய்ப்பூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த வாரத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறப்பட்டுள்ளதாவது.
விமல் பான் மசாலாவை தயாரிக்கும் ஜேபி இண்டஸ்ட்ரீஸ், நாடு முழுவதும் அதன் தயாரிப்பை விளம்பரப்படுத்துகிறது. நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் (actors) ஆகியோர் விமல் பான் மசாலாவின் விற்பனையை அதிகரிப்பதற்காக விளம்பரப் படத்தில் நடித்துள்ளனர். விமல் பான் மசாலாவில் குங்குமப்பூ இருப்பதாக விளம்பரத்தில் நடிகர்கள் தெரிவிக்கிறார்கள் (“Daane daane mein hai kesar ka dum” – every grain has the strength of saffron). உண்மை என்னவென்றால், குங்குமப்பூவின் விலை ஒரு கிலோ சுமார் நான்கு லட்சம். விமல் பான் மசாலா பை ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், குங்குமப்பூ நறுமணத்தைக் கூட அதில் சேர்க்க முடியாது. குங்குமப்பூவைக் கொண்டதாக விமல் பான் மசாலாவை விளம்பரப்படுத்துவதன் மூலம் நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
விமல் பான் மசாலா உற்பத்தி நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வணிகத்தை செய்து வருகிறது. மறுபுறம், குட்கா எனப்படும் புகையிலையுடன் பான் மசாலாவின் தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆபத்தான கலவையை உட்கொள்வதன் மூலம் பொது மக்கள் புற்றுநோய் (cancer) போன்ற நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். குட்கா என்று அழைக்கப்படும் இந்த பான் மசாலா கலவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. இந்த விவரம் உற்பத்தி நிறுவனத்திற்கும் விளம்பரத்தில் நடித்துள்ள நடிகர்களுக்கும் நன்கு தெரியும். இதுபோன்ற சூழ்நிலையில், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில், பான் மசாலாவில் குங்குமப்பூ இருப்பதாக விளம்பரம் செய்வது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் செயலாகும். இதுபோன்ற சூழ்நிலையில், “தவறான தகவல்களை” பரப்பியதற்காக நடிகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த விளம்பரங்களை நிறுத்த உடனடி உத்தரவிட வேண்டும் என்றும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
விமல் பான் மசாலா உற்பத்தி நிறுவனத்திற்கும் பான் மசாலா பிராண்ட் தொடர்பான தவறான விளம்பரங்கள் தொடர்பாக பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூ, ரூ.5 பான் மசாலா பையில் எவ்வாறு இருக்க முடியும்? என்ற கேள்விக்கும் தவறாக பொது மக்களை வழிநடத்தும் விளம்பரமா? (misleading advertisement) என்ற கேள்விக்கும் உற்பத்தி நிறுவனமும் நடிகர்களும் வரும் மார்ச் 19 அன்று நேரில் அல்லது வழக்கறிஞர்கள் மூலம் ஆஜராகி பதில் தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: பொருட்களையும் சேவைகளையும் விற்பனை செய்து பணம் சம்பாதிப்பதற்காக பொதுவெளியில் பல்வேறு வகையில் மக்களையும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் வெளியாகின்றன. இது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்பதை இந்த செய்தி எடுத்துக்காட்டுகிறது.