2014 ஆம் ஆண்டு ரஜினி நடித்து வெளியான கோச்சடையான் திரைப்படம் தொடர்பான ஒரு வழக்கில் (Kochadaiyaan film related case) கடந்த 2025 பிப்ரவரி 28 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் வங்கியில் கடன் பெற்றவர் நுகர்வோர் அல்ல என்று இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு நுகர்வோர் மத்தியில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் முழு தீர்ப்பு மற்றும் தீர்ப்பு தொடர்பான விவரங்களை முழுமையாக அறிந்து கொண்டால் மட்டுமே வங்கியில் கடன் பெறுவோர் எல்லோரும் நுகர்வோர் அல்ல என்று எடுத்துக்கொள்ள முடியுமா? என்பதை அறிய முடியும்.
ரஜினிகாந்த் நடித்து வெளியான கோச்சடையான் பட தயாரிப்பு பணிக்கு பிந்தைய வேலைக்கு, கடந்த 2014 ஏப்ரல் மாதத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவிலிருந்து பீரோ அட்வெர்டைஸ்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ப்ராஜெக்ட் கடனாக ரூபாய் 10 கோடியை பெற்றது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கு சொந்தமான, சென்னை அபிராமபுரத்தில் மாரிஸ் சாலையில் இருந்த சொத்தை இந்த கடனுக்கு அடமானமாக வங்கி கடன் வழங்கும்போது பெற்றுள்ளது.
கடன் ஒப்பந்தப்படி தவணைத் தொகைகளை கடனை பெற்ற நிறுவனம் வங்கிக்கு செலுத்தாததால் கடன் கணக்கானது தவணை தவறிய கணக்காக (NPA: Non Performing Account) 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வங்கியால் அறிவிக்கப்பட்டது. சர்பாசி (‘SARFAESI Act: Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002) சட்டப்படி இந்த சொத்தை கடந்த 2014 மே மாதத்தில் வங்கி கையகப்படுத்தியது (symbolic possession). வங்கிக்கு வரவேண்டிய தொகையை வசூலிப்பதற்காக, கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் (DRT: Debt Recovery Tribunal) வங்கியால் தொடரப்பட்ட வழக்கில் கடன் பெற்ற நிறுவனம் வங்கிக்கு ரூ 4,65,39,715/. மற்றும் அதற்கு பணம் செலுத்தப்படும் நாள் வரை வட்டியை செலுத்த வேண்டும் என்று தீர்ப்பாயத்தால் கடந்த 2016 டிசம்பர் மாதத்தில் உத்தரவிடப்பட்டது.
இதன் பின்னர் வங்கி தரப்பிற்கும் கடன் பெற்ற நிறுவனத்தின் தரப்பிற்கும் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒரே முறையில் கடனை செலுத்தும் திட்டத்தில் ரூ 3.56 கோடி செலுத்தினால் (OTS: one time settlement) கடன் கணக்கு முடித்துக் கொள்வதாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த தொகையை கடன் பெற்றவர் செலுத்தியதால் கடன் கணக்கு முடிக்கப்பட்டதாகவும் கடன் நிலுவையில் இல்லை (No due certificate) என்றும் வங்கியால் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டது. தீர்ப்புச் சொன்ன பிறகும் ஒரு கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யறாங்களே? இது நமக்கு கிடைக்குமா? என்று மூக்கின் மீது விரல் வைக்காதீர்கள்! அதன் பின்பு நடந்த சம்பவங்கள் அறிய முழு கட்டுரையையும் படியுங்கள்!
(தொடர்ச்சி கீழே உள்ள அட்டவணை செய்திகளுக்கு கீழ்)
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கடன் வழங்கிய சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மீது கடன் பெற்ற அட்வர்டைசிங் பீரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தேசிய நுகர்வோர் ஆணையத்தில் கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது (Consumer Complaint No. 23/2021). வேண்டுமென்றே கடனை செலுத்த தவறியவர் (wilful defaulter) என்ற பட்டியலில் தங்களை இணைத்து வங்கி ரிசர்வ் வங்கிக்கு தெரிவித்த வங்கியின் நேர்மையற்ற வர்த்தக நடைமுறையால் (unfair trade practice) தங்களது சிபில் (CIBIL) ஸ்கோர் பாதித்ததாகவும் இதனால் தங்களுக்கு வரவேண்டிய ஒப்பந்தங்களை பெற இயலாதால் பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் வழக்கில் அந்த நிறுவனம் தெரிவித்தது.
இருதரப்பு விசாரணைக்கு பின்னர் கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. நேர்மையற்ற வணிக நடைமுறைக்காக வழக்கு தாக்கல் செய்த நிறுவனத்துக்கு வங்கி ரூபாய் 75 லட்சம் இழப்பீடு (compensation) வழங்க வேண்டும் என்று தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து வங்கியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு (Civil Appeal Noo: 7438 of 2023) செய்யப்பட்டது. வழக்கு தாக்கல் செய்த நிறுவனமும் வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானது அல்ல என உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
வழக்கு விசாரணைக்கு பின்னர் கடந்த 2025 பிப்ரவரி 28 அன்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி ஒரு பொருளை வாங்குபவர் அல்லது சேவையை பெறுபவர் நுகர்வோர் ஆவார் அதேசமயத்தில் வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கு (commercial transaction) பொருள் வாங்கப்பட்டாலும் அல்லது சேவை பெறப்பட்டாலும் அவர் நுகர்வோர் அல்ல என உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பரிவர்த்தனை வணிக நோக்கத்திற்காகவா? என்பது ஒவ்வொரு வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்தது. இருப்பினும், பொதுவாக, “வணிக புரிந்து கொள்ளப்பட்ட நோக்கம்” என்பது உற்பத்தி அல்லது தொழில்துறை செயல்பாடு அல்லது வணிக வணிக நிறுவனங்களுக்கு இடையிலான வணிக பரிவர்த்தனைகளை உள்ளடக்கியது. பொருள் அல்லது சேவையை வாங்குவது லாபம் ஈட்டும் செயல்பாட்டுடன் நெருக்கமான மற்றும் நேரடி தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும். வாங்குபவரின் அடையாளம் அல்லது பரிவர்த்தனையின் மதிப்பு என்பதை வைத்து அது வணிக நோக்கத்திற்காகவா? தீர்மானிக்க முடியாது என்று தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கோச்சடையான் படத் தயாரிப்புக்கு பின்னர் தேவைப்படும் பணிகளை செய்து லாபத்தை ஈட்டுவது கடன் பெற்ற நிறுவனத்தின் நோக்கமாக இருந்துள்ளது. ஒரு நிதி நிறுவனமும் ஒரு வணிக நிறுவனமும் நடத்திய பரிவர்த்தனை இதுவாகும். இந்நிலையில் நிறுவனமானது வணிக ரீதியான செயல்பாட்டை புரிந்துள்ளதால் வங்கிக்கு இந்த நிறுவனம் நுகர்வோர் அல்ல. இதனால் வங்கி மீது வழக்கு தாக்கல் செய்துள்ள நிறுவனம் வங்கியின் நுகர்வோர் என்ற முறையில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இயலாது என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், “வங்கி இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது”.
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: இந்தத் தீர்ப்பால் வங்கிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக இயலாதா? என்ற எண்ணம் பலருக்கு தோன்றியுள்ளதாக தெரிகிறது. ஆனால், சுயத்தொழில் செய்வதற்காக வங்கியில் கடன் பெறும்போது கடன் பெறுபவர் நுகர்வோர் என்பதில் மாற்றமில்லை.