spot_img
October 22, 2024, 11:20 am
spot_img

மின்சார இருசக்கர வாகனம் (இ பைக்) வாங்க போறீங்களா? பிரச்சனைகளை தெரிஞ்சுக்கங்க! போன்ற உரை வீச்சுகளுடன் நுகர்வோர் சாமி

இன்று காலை  நுகர்வோர் இதழ் அலுவலகத்திற்கு நுகர்வோர் சாமி வருகை புரிந்தார். அவருக்கு வணக்கம் செலுத்தி செலுத்தி விட்டு “ஏதேனும் முக்கிய செய்திகள் உண்டா சாமி? என கேட்டதற்கு “நுகர்வோர் முழுமையான விழிப்புணர்வு அடையும் வரை நுகர்வோர் பாதுகாப்புக்கான செய்திகள் இருக்கத்தானே செய்யும்”  என்றார் நுகர்வோர் சாமி.

“கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டை சேர்ந்த பிரோஸ் ராஜன் என்ற இளைஞர், பெங்களூருவை சேர்ந்த ஒரு மின்சார ஸ்கூட்டர் விற்பனை நிறுவனத்தில் மின்சார ஸ்கூட்டர் வாங்க கடந்த 2023 செப்டம்பர் 01 ஆம் தேதி  ஆன்லைன் மூலம் வாகன விலையாக ரூ  1,67,000/- மற்றும் வாகனத்துக்கான காப்பீட்டு தொகையாக ரூ.6,199-ஐ செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் வாகனத்தை வழங்காததால் அதிர்ச்சி அடைந்த பிரோஸ் ராஜன் இ பைக் நிறுவனம் மீது கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதில் கடந்த வாரம் வழங்கப்பட்ட தீர்ப்பில், வாடிக்கையாளர் செலுத்திய பணத்தையும் அதற்கு வட்டியையும் இழப்பீடாக ரூபாய் பத்தாயிரமும் வழங்க வாகன உற்பத்தி நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்றார் நுகர்வோர் சாமி. 

“இது மட்டுமா, ஹைதராபாத்தில் உள்ள மின்சார இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனத்தின் மீது நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் ஏழு வாடிக்கையாளர்களால் தொடங்கப்பட்ட வழக்கில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் கடந்த வாரம் அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த ஏழு வாடிக்கையாளர்களும் சுமார் ஒரு லட்சம் வரை ஒவ்வொருவரும் செலுத்தி ஹைதராபாத் நிறுவனத்தின் விநியோகஸ்தராக நாமக்கல்லில் செயல்பட்டு வந்த இ பைக் ஏஜென்சியில் செலுத்தியுள்ளனர். வாகனங்களை சில மாதங்கள் ஒட்டிய நிலையில் வாகனத்தின் பேட்டரிகள் செயலிழந்துவிட்டன.   பேட்டரிகளுக்கு மூன்று ஆண்டுகள்  உத்தரவாதத்தை வாகன உற்பத்தி நிறுவனம் வழங்கியிருந்ததால் அதனை மாற்றித் தருமாறு பலமுறை கேட்டும் அந்த நிறுவனம் பேட்டரியை மாற்றி புதிய பேட்டரிகளை வழங்கவில்லை. இதனால் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் வாடிக்கையாளர்கள் வாகனத்தை வாங்குவதற்கு செலுத்திய தொகையும் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஒரு லட்சம் இழப்பீடும் ஒவ்வொருவருக்கும் வழக்கும் செலவு தொகையாக ரூபாய் பத்தாயிரமும் வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது” என்றார் நுகர்வோர் சாமி. 

“கடந்த ஓராண்டில் ஓலா இ பைக் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சுமார் 10,000 -க்கு மேற்பட்ட புகார்கள் நேஷனல் கன்ஸ்யூமர் ஹெல்ப்லைன் எனப்படும் அரசின் இணையதளத்தில் பதிவாகியுள்ளன. இந்த புகார்களில் உள்ள பிரச்சனைகளை சரி செய்யுமாறு அந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்தியும் சரியான நடவடிக்கைகளை எடுக்காததால் சென்ட்ரல் கன்ஸ்யூமர் புரொடக்சன் அத்தாரிட்டி எனப்படும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பு புகார்களை விசாரிக்க தொடங்கியுள்ளது” என்றார் நுகர்வோர் சாமி.” 

“எத்தகைய புகார்கள் சாமி விளக்கமாக கூறுங்கள்” என நான் கேட்டபோது “இலவச சர்வீஸ் காலத்தில் அதிக கட்டணத்தை கேட்பது, உத்திரவாதம் உள்ள பாகங்கள் மாற்றப்படும் போது கட்டணத்தை கேட்பது, தாமதமாகவும் திருப்தியற்ற வகையிலும் சர்வீஸ் செய்து தருவது, விளம்பரப்படுத்தப்பட்டது போல இல்லாதது, செயல் திறன் குறைவானது, விலை பட்டியல் சரியாக இல்லாதது, புகார் கொடுத்தால் அதனை சரி செய்யாமலேயே புகாரை முடித்து விடுவது, பேட்டரி பாகங்களில் சிக்கல்கள் உள்ளிட்ட பல புகார்கள் இந்த நிறுவனத்தின் மீது வந்துள்ளது” என்றார் நுகர்வோர் சாமி. 

.“சாமி! மின்சார பைக்குகள் குறித்து எனக்குத் தெரிந்த தகவல்களை கூறுகிறேன். மின்சார வாகனங்களில் பொருத்தப்படும் பேட்டரிகள்தான் அவற்றின் செயல்பாட்டிற்கு மிக முக்கியமானவைகள் ஆகும்.  லெட் ஆசிட் பேட்டரிகள், லித்தியம் அயன் பேட்டரிகள், சாலிட் ஸ்டேட் பேட்டரிகள் என்பவைதான் தற்போது மின்சார வாகன உற்பத்திக்கு உகந்தவைகளாக உள்ளன. விலை மலிவாகவும் நம்பகத்தன்மை உடையதாகவும் உள்ளவை லெட் ஆசிட் பேட்டரிகள். ஆனால், அவற்றின் எடை  அதிகமாக உள்ளதாலும் ஆயுள் காலம் குறைவாக உள்ளதாலும் பிரச்சனை ஏற்படுகிறது. இதன் விலை குறைவாக இருப்பதால் சிலர் இத்தகைய பேட்டரி வாகனங்களை தேர்வு செய்கின்றனர். லித்தியம் அயன் பேட்டரிகள் செயல் எடையும் குறைவாக, திறன் மிகுந்தவையாக இருப்பதோடு அதிக தூர பயணத்துக்கு ஏற்றதாகவும் உள்ளது.  இதன் விலை அதிகமாக உள்ளது. சாலிட் ஸ்டேட் பேட்டரிகள் மின்சார வாகனங்களுக்கு சிறந்ததாக கருதப்பட்டாலும் இதன் விலை மிக அதிகமாக இருப்பதால் அதிக பயன்பாட்டிற்கு இந்த வகை பேட்டரிகள் இன்னும் வரவில்லை. இந்த வகை பேட்டரிகளை குறைந்த விலையில் தயாரித்தால் எதிர்காலத்தில் இந்த பேட்டரிகள் தான் அதிக பயன்பாட்டில் இருக்கும்” என்றேன்.

“நீ சரியாக அறிவியல் விவரங்களை தெரிந்து வைத்திருக்கிறாய். பேட்டரிகள் அடிக்கடி செயல் இழந்து விடுதல் மற்றும்   தீ விபத்துக்களை ஏற்படுத்துதல் போன்ற பிரச்சனைகள் முற்றிலும் இல்லாதவாறு மின்சார வாகனங்கள் தயாரிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இத்தகைய பாதுகாப்பும் குறைந்த விலையில் பேட்டரி தயாரிப்பு தொழில் நுட்பமும் உருவானால்தான் அதிக அளவில் மின்சார வாகனங்கள் விற்பனையாகும். பலரும் மின்சார வாகனங்களை வாங்கினால் செலவு குறைவு என கருதுகிறார்கள். எதிர்காலத்தில் மின்சார வாகனங்களின் பேட்டரிகளுக்கு சார்ஜ் போடுவது மற்றும் உத்தரவாத காலத்துக்கு பின்னர் பேட்டரிகள் செயலிழந்தால் மாற்றுவது ஆகியவற்றில் ஏற்படும் பண பிரச்சனைகளையும் கவனத்தில் கொண்டு வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு கிளம்பினார் நுகர்வோர் சாமி. “ஒவ்வொரு வாரமும் வாருங்கள் – தங்கள் உரைவீச்சை தாருங்கள் சாமி” என்று கூறி அவரை வழி அனுப்பி வைத்தேன்.

நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி
நா.சின்னச்சாமி, பணி நிறைவுபெற்ற வருவாய்துறை அலுவலர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்