உத்திர பிரதேச மாநிலம், மீரட் நகரில் அவுரங் ஷாஹ்பூர் டிக்கிகர் சாலை, கதவு எண் 290 -ல் வசித்து வந்தவர் ஹேமந்த் மிஸ்ரா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் பைனான்ஸில் வீடு கட்டுவதற்காக ரூ 35,58,263/- கடனாக பெற்றுள்ளார் இவ்வாறு கடன் பெறும் சமயத்தில் கடன் பெறுவோர் இறந்து விட்டால் நிலுவையில் இருக்கும் கடனை இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்திக் கொள்ளும் வகையில் பாலிசி ஒன்றை எடுக்குமாறு ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் ஹேமந்த் மிஸ்ராவும் பார்தி ஆக்சா லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வீட்டு கடனுக்கான இன்சூரன்ஸ் மற்றும் விபத்து இன்சூரன்ஸ் பாலிசிக்காக ரூ 1,29,288/- பிரிமியத்தை குழு காப்பீட்டு திட்ட அடிப்படையில் கடன் பெற்ற நிறுவனம் மூலமாக 2016 ஜூன் மாதத்தில் செலுத்தியுள்ளார். (Bharti Axa Life Group Accidental Death Benefit Rider, a Group Insurance Policy). இன்சூரன்ஸ் நிறுவனம் கேட்டதன் அடிப்படையில் உடல்நிலை குறித்த உறுதிமொழி அறிக்கையை ஹேமந்த் மிஸ்ரா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சமர்ப்பித்துள்ளார். இதனை பெற்றுக் கொண்ட இன்சூரன்ஸ் நிறுவனம் அவருக்கு இன்சூரன்ஸ் பாலிசியை வழங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த 2016 டிசம்பர் மாதத்தில் ஹேமந்த் மிஸ்ரா இறந்துவிட்டார்.
இறந்த ஹேமந்த் மிஸ்ராவின் வாரிசுகளான அவரது மனைவி மது மிஸ்ரா மகன் சுர்பி மிஸ்ரா, மகன் உத்கர்ஷ் மிஸ்ரா ஆகியோர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஹேமந்த் மிஸ்ரா இறந்ததை தெரிவித்து வங்கியில் நிலுவையில் உள்ள கடன் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வங்கிக்கு செலுத்துமாறு கேட்டுள்ளார்கள். தாங்கள் விசாரித்த போது இன்சூரன்ஸ் பாலிசியை பெற்றிருந்த ஹேமந்த் மிஸ்ரா கடந்த 2015 ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் என்றும் அவருக்கு இருந்த நோய்கள் குறித்த விவரத்தை ஹேமந்த் மிஸ்ரா சமர்ப்பித்த உடல்நலம் குறித்த அறிக்கையில் மறைத்து விட்டார் என்றும் இதனால் இன்சுரன்ஸ் பணமாக அவர் பெற்றிருந்த கடனை செலுத்த முடியாது என்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வீடு கட்டுவதற்கு ஹேமந்த் மிஸ்ரா பெற்றிருந்த கடனை இன்சூரன்ஸ் பாலிசி மூலம் செலுத்த இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டதால் ஹேமந்த் மிஸ்ராவின் மனைவி மற்றும் இரண்டு வாரிசுகளும் உத்தரப்பிரதேச மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இன்சூரன்ஸ் நிறுவனம் மீது வழக்கு (C.C. No: 78/2018) தாக்கல் செய்தனர். வழக்கு விசாரித்த உத்தரப்பிரதேச நுகர்வோர் ஆணையம் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் தீர்ப்பு வழங்கியது.
“இறந்தவர் பெற்றிருந்த கடன் மற்றும் அதற்கான வட்டியை பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் பைனான்சுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்துவதோடு இறந்தவரின் வாரிசுகளுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று உத்தரப்பிரதேச நுகர்வோர் ஆணைய தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் தேசிய நுகர்வோர் ஆணையத்தில் மேல்முறையீடு (F.A.No: 291/2022) தாக்கல் செய்யப்பட்டதில் அதனை விசாரித்த தேசிய ஆணையம் கடந்த 02 செப்டம்பர் 2024 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இறந்த ஹேமந்த் மிஸ்ரா 2015 ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பதை தங்களது புலனாய்வு நிறுவனம் தெரிவிப்பதாக இன்சூரன்ஸ் நிறுவனம் தேசிய நுகர்வோர் ஆணையத்தில் தெரிவித்தது. இதற்கு ஆதாரமாக சிகிச்சைக்கான ஆவணங்களின் ஜெராக்ஸ் நகல்களை இன்சூரன்ஸ் மூலம் தேசிய ஆணையத்தில் சமர்ப்பித்தது. முந்தைய நோயை இறந்தவர் சமர்ப்பித்த உடல்நலம் குறித்த உறுதி மொழியில் தெரிவிக்காமல் ஏமாற்றி இன்சூரன்ஸ் பெறப்பட்டுள்ளதால் இன்சூரன்ஸ் தொகையை வழங்க முடியாது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் வாதிட்டது.
“இன்சூரன்ஸ் நிறுவனம் சமர்ப்பித்துள்ள ஜெராக்ஸ் நகல்களை வைத்து நிறுவனத்தின் வாதத்தை ஏற்க முடியாது என்றும் இறந்தவர் கடுமையான நோய்க்கு சிகிச்சை பெற்றார் என்பதற்கு ஆதாரமாக மருத்துவரின் சாட்சியம் அல்லது ஏற்புடைய சாட்சியங்கள் எதனையும் சமர்ப்பிக்க இன்சூரன்ஸ் நிறுவனம் தவறிவிட்டது என்றும் இறந்தவர் பெற்ற கடனையும் அதற்கான வட்டியையும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டும்” என்று உத்திரவிட்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேல்முறையீட்டை தேசிய நுகர்வோர் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது.