spot_img
October 18, 2024, 10:01 pm
spot_img

முதியவர்களின் பணத்தை சூறையாடிய கார் டிரைவர். 97 லட்சம் வழங்க வங்கிக்கு உத்தரவிட்ட  நுகர்வோர் ஆணையம்

ஹைதராபாத் நகரைச் சார்ந்த வயதான கணவன், மனைவி ஆகியோர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து வந்துள்ளார்கள். இவர்களது சேமிப்பு   கணக்கில் ரூ 26,74,527/- லட்சம் இருந்து வந்துள்ளது. மேலும், இதே வங்கியில்   நிரந்தர வைப்புத் தொகையாக (fixed deposit) ரூபாய் 40 லட்சம் இருந்து வந்துள்ளது. இந்த தம்பதிகள்   இன்டர்நெட் மூலமாக பரிவர்த்தனை செய்ய இன்டர்நெட் பேங்கிங் (internet banking) வசதியை பெறாமல் இன்டர்நெட் மூலமாக கணக்குத் தொகைகளை பார்த்துக் கொள்ளும் இன்டர்நெட் வியூ ஒன்லி (view only) வசதியை மட்டும் வங்கியில் இருந்து பெற்றுள்ளார்கள்.

வயதான தம்பி தம்பதிகள் இருவரும் கடந்த 2019 ஏப்ரல் 4ஆம் தேதி   வங்கிக்கு சென்று வங்கியில் உள்ள நிரந்தர வைப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கு ஆகியவற்றில் உள்ள தொகைகளையும் அதற்கு வழங்கப்பட்டுள்ள வட்டி விவரங்களையும் விசாரித்துள்ளனர். வைப்புத் தொகையில் இருந்த ரூ 40,000,00/-, சேமிப்பு கணக்கில் இருந்த ரூ 23,74,527/-   எடுக்கப்பட்டு விட்டதாகவும் சேமிப்பு கணக்கில் மூன்று லட்சம் மட்டுமே  இருப்பதாகவும் வங்கியில் அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள். 

இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதிகள் தங்களது பணம் முறைகேடாக கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது குறித்து வங்கியின் மேலாளரிடம் தெரிவித்துள்ளனர்.  வங்கியின் தரப்பில் இன்டர்நெட் பேங்கிங் மூலம் சேமிப்பு கணக்கில் இருந்த பணம் ரூபாய் 20 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் நிரந்தர வைப்பு கணக்கு முடிக்கப்பட்டு சேமிப்பு கணக்குக்கு மாற்றப்பட்டு ரூபாய் 40 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் தங்கள் தரப்பில் எவ்வித தவறும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். வேறு வழியின்றி முதியவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காவல் துறையின் விசாரணையில் தெரிய வந்த விவரம் பின் வருமாறு. பாதிக்கப்பட்ட முதியவர்களின் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்த நபர் மோசடியாக வங்கிக் கணக்கை பார்வையிடும் வசதியை மாற்றி பரிவர்த்தனை செய்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும் அல்லது வேறு கணக்குக்கு மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்கும் இன்டர்நெட் பேங்கிங் வசதியை முதியோர்களின் கணக்கில் ஏற்படுத்தி உள்ளார். 

பாதிப்புக்கு உள்ளான முதியவர்கள் இருவரும் தங்களது பணத்தை பெறுவதற்கும் பாதிப்பால் ஏற்பட்ட சிரமங்களுக்கான நிவாரணத்தை பெறுவதற்கும் வங்கியின் மீது தெலுங்கானா மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த தெலுங்கானா மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் 2022 ஆகஸ்ட் 4 ஆம் தேதி அன்று வழங்கிய தீர்ப்பில், “எஸ்பிஐ வங்கி பாதிக்கப்பட்ட   நுகர்வோர்களான முதியோர்களுக்கு வங்கி கணக்கில் இருந்த பணம் ரூ 63,74,527/- மற்றும் அதற்கு பணம் வழங்கும் வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டி ஆகியவற்றையும்   முதியோர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு நிவாரணமாக ரூ 3,00,000/- மற்றும் வழக்கின் செலவுக்காக ரூ 20,000/- வழங்க” உத்தரவிட்டது. 

மாநில நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து வங்கியின் தரப்பில் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. முதியவர்களின் வங்கிக் கணக்கில் 37 முறை பரிவர்த்தனை செய்யப்பட்டு ரூ 63,74,527/-   முறையற்ற வகையில் எடுக்கப்பட்டுள்ளது. வங்கி   கணக்கில் இருக்கும் தொகையைப் பார்த்துக் கொள்ளும் வசதி மட்டுமே முதியவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களது மொபைல் போனில் இருந்து கடந்த 2018 ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று வங்கியின் இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளின்படி முதியவர்களின் அங்கீகரிக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி (One Time Password) அனுப்பப்பட்டது. அதனை பயன்படுத்தி வங்கியில் இருந்து கணக்கு வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் வசதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தங்களது மொபைல் போனை மற்றவர்கள் பயன்படுத்தி வங்கியின் இன்டர்நெட் பேங்கிங் வசதியை ஏற்படுத்தாத வகையில் வைத்துக் கொள்ள வேண்டியது வாடிக்கையாளர்களின் பொறுப்பாகும். வங்கியின் தரப்பில் முதியவர்களின் மொபைல் ஃபோனுக்கு ஓடிபி அனுப்பி அதன் பின்னரே இண்டர்நெட் பேங்கிங் வசதி வழங்கப்பட்டது இதனால் தங்கள் தரப்பில் எவ்வித தவறும் நடைபெறவில்லை என்று வங்கியின் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரித்து கடந்த 30 ஜூலை 2024 அன்று தீர்ப்பளித்துள்ளது. கணக்கில் உள்ள பண  விவரத்தை பார்வையிடும் வசதி மட்டுமே முதியவர்களின் வங்கி  கணக்குக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், பணத்தை பரிவர்த்தனை செய்து கொள்ளும் இன்டர்நெட் பேங்கிங் வசதியை  வழங்கும் போது முறையான சரிபார்ப்பு (verification) இல்லாமல்   முதியவர்களின் வங்கி  கணக்குக்கு வழங்கி உள்ளது சேவை குறைபாடு என்று மாநில நுகர்வோர் ஆணையம் தெரிவித்த கருத்தை தேசிய   குறைதீர் ஆணையம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 

முதியவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து முறையற்ற வகையில் எடுக்கப்பட்ட பணம் ரூ 63,74,527/-   மற்றும் இந்த பணத்திற்கு ஆண்டொன்றுக்கு ஒன்பது சதவீத வட்டி (2024 செப்டம்பர் 10ஆம் தேதி வரை வட்டி    ரூ 3,20,000/-) ஆகியவற்றையும் முதியவர்கள் அடைந்த சிரமங்கள் மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூபாய் 3 லட்சம் மற்றும் வழக்கின் செலவு தொகையாக ரூ 20,000/- ஆகியவற்றையும் வழங்க தேசிய நுகர்வோர் குறைவீர் ஆணையம் குறைதீர் ஆணையம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்