நுகர்வோர் பூங்கா இதழ் அலுவலகத்திற்கு காலையிலேயே நுகர்வோர் சாமி வருகை தந்தார். அவரை வரவேற்று, “என்ன சாமி, காலையிலேயே வந்துள்ளீர், செய்திகள் என்ன?” என்று கேட்டேன்.
“ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வல்லக்குண்டாபுரம் என்ற ஊருக்கு சென்றிருந்தேன். அங்கு உள்ள மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்த போது நண்பர் ஒருவரை பார்த்தேன். அவர் சோகமாக இருந்தார். என்ன நண்பரே சோகம் என்று கேட்டேன். – “சாமி, கடந்த வாரம் ஒரு தொழில் செய்ய கடன் பெறலாம் என்று வங்கிக்கு சென்றேன். அவர்கள் எனது சிபில் ஸ்கோரை பார்த்து விட்டு ஏற்கனவே வேறு தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை கட்டாமல் இருப்பதால் ஸ்கோர் அதிகமாக இருக்கிறது கடன் தர முடியாது என தெரிவித்தனர். நான் எந்த நிதி நிறுவனத்திலும் வங்கிகளும் கடனை பெறவில்லை. எப்படி ஸ்கோர் அதிகமானது? என பார்த்தபோது திருச்சியில் யாரோ ஒருவர் எனது ஆதார் ஜெராக்ஸை பயன்படுத்தி திருச்சியில் தொழில் செய்வதாக அலுவலக முகவரி ஒன்றை கொடுத்து தனியார் நிறுவனத்தில் கடன் பெற்று கட்டாமல் விட்டுள்ளார். நிதி நிறுவனம் திருச்சியில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த இடியாப்ப சிக்கலை தீர்க்க யாரை கேட்டாலும் நல்ல யோசனை கிடைக்கவில்லை” என்றார் அவர்” என கூறி முடித்தார் நுகர்வோர் சாமி.
“உஷாரய்யா! உஷாரு! நுகர்வோர் ஐயா!” என நான் கூறியதை ரசிக்காமல் நுகர்வோர் சாமி தொடர்ந்தார். “இது மட்டுமா, துறையூர் அருகே உள்ள ஒரு விவசாயி விவசாய நிலத்தை அடமானம் வைத்து தனியார் வங்கியில் நாமக்கல்லில் கடன் பெற்றுள்ளார். அவர் கடனை செலுத்தாததால் சர்ப்பசி சட்டப்படி சொத்தை சுவாதீனம் செய்து ஏலம் விட வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. விவசாய கடனுக்கு எல்லாம் சர்ப்பசி என்றால் விவசாயி நிலை என்ன ஆவது? என்றார் நுகர்வோர் சாமி.
“நானும் ஒன்றை சொல்கிறேன் சாமி. வங்கிகளில் கடன் பெறும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதனை கட்டாமல் போகும் போது வரா கடனாக வங்கியில் அதை அறிவிக்கின்றனர். பின்னர், பெரும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் கடன் வங்கிக்கு வர வேண்டும் என்றால் குறைந்த பணத்தைப் பெற்றுக் கொண்டு கடன் பெற்றவரிடம் வசூல் செய்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும் அதிகாரத்தை விட்டு விடுகின்றனர். இதன் பின்னர் வங்கிக்கும் அந்த கடனுக்கும் சம்பந்தமில்லை விலைக்கு வாங்கிய கடனை விலைக்கு வாங்கிய தனியார் நிறுவனங்கள் கடன் வாங்கியவர்களை தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் மிரட்டும் தோரணை மிக அபரிமிதமாக உள்ளது. அஸெட் ரீகன்ஸ்ட்ரக்சன் என்ற பெயரில் இந்த தொழிலுக்கு சட்டமும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனால் பாதிக்கும் சாதாரண மக்கள் பிரச்சினையை எப்படி தீர்ப்பது? என தெரியாமல் முழிக்கிறார்கள். வங்கிக்கு ஒரு லட்சம் கட்ட வேண்டியது இருந்தால் இன்று கட்டினால் ஐந்து லட்சம், அடுத்த வாரம் கட்டினால் 10 லட்சம் என மிரட்டும் விதம் பயமாக இருக்கிறது என்கிறார்கள் அவர்கள். இது போன்ற அஸெட் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனி ஒன்றின் மீதும் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை நண்பர் தாக்கல் செய்திருக்கிறார் என்றேன்”.
“பலே! பலே! என்னோடு பேசி பேசி நீயும் புத்திசாலியாகி விட்டாய்” என தெரிவித்து விட்டு போலி கோபத்தோடு விடைபெற்றார் நுகர்வோர்சாமி.