spot_img
November 23, 2024, 3:16 pm
spot_img

விவசாய நிலத்தை சர்பாசி சட்டத்தின் கீழ் ஏலம் விட நடவடிக்கை எடுத்தது ஏன்? வங்கி மேனேஜர் ஆஜராகி பதில் அளிக்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிடாரம் கிராமத்தில் வசிப்பவர் நாச்சிமுத்து கவுண்டர் மகன் வெங்கடாசலம் (57). விவசாய நிலங்களை தவறான வழிமுறைகளை கையாண்டு கடன் தொகையை வசூலிக்க தனியார் வங்கி முயற்சிப்பதாக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது.

தாமும் மனைவியும் இரண்டு மகள்களும் ஒரு மகனும் கிடாரம் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமான சுமார் 12 ஏக்கர் விவசாய நிலத்தின் அசல் ஆவணங்களை கடந்த 2020 அக்டோபர் மாதத்தில் அடமானம் வைத்து நாமக்கல்லில் சேலம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் (கத்தோலிக்கன் சிரியன் வங்கி) ரூபாய் 50 லட்சம் கடன் பெற்றோம். கடன் விண்ணப்பத்திலும் வங்கியின் சரிபார்ப்பு அறிக்கையிலும் விவசாய கடன் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

விவசாய விளைச்சல் சரியாக இல்லாத காரணத்தால் வங்கியில் ஒப்புக்கொண்டபடி தவணைத் தொகைகளை செலுத்த இயலவில்லை. இந்நிலையில் வங்கி நிர்வாகம் சர்பாசி சட்டப்படி எங்களது விவசாய நிலத்தை சுவாதீனம் எடுத்து ஏலம் விட உள்ளதாக கடந்த மே மாதத்தில் நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்து வங்கிக்கு சென்று   விவசாய நிலங்களை சர்பாசி சட்டத்தின் கீழ் ஏலம் விட முடியாது என தெரிவித்த போது வங்கியின் சார்பில் சரிவர பதிலளிக்கவில்லை. 

மேலும், கடனை புதுப்பிக்க எவ்வித கையெழுத்தும் செய்யாத நிலையில் கடன் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களில் மோசடியாக வங்கி நிர்வாகத்தால் கையொப்பம் செய்யப்பட்டுள்ளது. விவசாய கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட நிலங்களை விவசாயம் அல்லாத கடன் பெறப்பட்டது என மோசடியாக ஆவணங்களை உருவாக்கி சொத்தை கைப்பற்றி ஏலத்துக்கு விட வங்கி முயற்சிப்பதை தடுக்க வேண்டும் என்றும் வங்கியின் தவறான நடவடிக்கையால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வழக்கில் கேட்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் கடன் வழங்கிய வங்கியின் கிளை மேலாளரும் உயர் அலுவலர்களும் வரும் ஆகஸ்ட் 30 அன்று ஆஜராகி பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். கடனை வசூலிக்க சர்பாசி சட்டத்தின் கீழ் விவசாய நிலங்களை   கைப்பற்றி ஏலத்தில் விட வழியில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்